போரூர், ஏப்.28-நெற்குன்றம் சக்தி நகர் 18வது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன் (22). கோயம்பேடு மார்கெட்டில் உள்ளகடையில் பணி புரிந்து வருகிறார்.மைக்கேல் நள்ளிரவு 12.15 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் அருகே வந்த போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மைக்கேலை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினார். பணம் தர மறுத்த மைக்கேலின் பையில் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். இதை தடுத்த மைக்கேலை தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினார். தலையில் 3 இடங்களில் வெட்டு காயமடைந்த மைக்கேல் ரத்தம் வழிந்தபடியே கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் கொள்ளையன் தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு செல்போனுடன் அங்கிருந்து தப்பி சென்றான்.இதுகுறித்து மைக்கேல் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். கொள்ளையன் விட்டு சென்ற பைக் எண்ணை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது முகப்பேர் கிழக்கு பாடிபுதுநகர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் (19) என்பது தெரிந்தது.வானகரம் அருகே நரசிம்மனை காவல்துறையினர் கைது செய்தனர். நரசிம்மன் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.