tamilnadu

img

மயிலாடுதுறையில் சாதி ஆணவப்படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

மயிலாடுதுறையில் வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்து சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை அறிக்கை வருமாறு:

மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை அறிந்த மாலினியின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வைரமுத்துவும், மாலினியும் சந்தித்த போது மாலினியின் சகோதரர்கள் குணால் மற்றும் குகன் ஆகியோர் வைரமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். மாலினியின் தாயார் வைரமுத்து பணி செய்யும் இடத்திற்கே சென்று அவரை தாக்கியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் முறையாக புகார் தரப்பட்டுள்ளது.

இப்புகாரை விசாரித்த காவல்துறையினர் வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்பாகவே வைரமுத்துவை “நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம்” என்று மாலினியின் சகோதரர்கள் மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள். அதை தொடர்ந்து  15.9.2025 அன்று இரவு சுமார் 10:30 மணி அளவில் வைரமுத்து பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன், குணால் இருவரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள். மாலினியின் தாயார் மாற்று சமூகத்தை சார்ந்தவராக இருப்பதால் தனது மகளை தனது சொந்த சாதியில் திருமணம் செய்து வைப்பதற்கு இடையூறாக வைரமுத்து இருக்கிறார் என்பதால் அவரை கொலை செய்ய தனது மகன்களை தூண்டிவிட்டதைத் தொடர்ந்து இந்த கொடூரமான படுகொலை அரங்கேறியுள்ளது.

வைரமுத்து, மாலினி ஆகியோரின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாத மாலினியின் சகோதரர்கள் குகன் மற்றும் குணால் ஆகியோர் அவர்களை காவல்துறையினர் முன்பாகவே பகிரங்கமாக மிரட்டிய நிலையில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க மறுத்ததாலும் மேலும் ஒரு சாதிய ஆணவப்படுகொலை தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு காவல்துறையின் மெத்தனப்போக்கு கடுமையான கண்டனத்துக்குரியது என சுட்டிக்காட்டுவதோடு,  இக்கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்ட  வைரமுத்துவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.