சென்னை:
பெரியாரின் பிறந்த நாளான செப்.17ஆம்தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
“திமுக முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை’ என்று அண்ணா அறிவித்தார். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, பெரியாரின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக,பேரவை விதி எண் 110-ன்கீழ் வெளியிடு கிறேன்.‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான் மற்ற சமுதாயத்தை போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்’ என்று அறிவித்துக் கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு நாட்டுக்காகப் போராடியவர்தான் பெரியார்.
காப்பி அடிக்க முடியாது!
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப் படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக நாட்டைவலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங் கள் யாராலும் ‘காப்பி’ அடிக்க முடியாத போராட்டங்கள்.‘மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்’ - இவை இரண்டும்தான் அவரதுஅடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டுக்கும் எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை அனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக் கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத் தூண்டினார்.சாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூக நீதிக் கதவைத் திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.
தமிழகத்தில் மட்டும்தான் ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மை அடைய வைத்திருக்கிறது.சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
உறுதிமொழியேற்போம்!
பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்க ளிலும் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்வோம்.
‘சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி யேற்கிறேன்!’ என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.பெரியார் மறைந்தபோது, ‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்’ என்றார் அன்றைய முதல்வர் கருணாநிதி. எனவே, நாம் தொடர்வோம்”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.