சென்னை:
ஒரே நாடு, ஒரே மதம் என்பவர்கள் அனைவரும் ஒரே மக்கள் என்று கூறி, அதற்குத் தடையாக இருக்கும் சாதியை ஒழித்து, சட்டத் திருத்தம் கொண்டுவரத் தயாரா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய நாட்டில், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சிவில் சட்டம், ஒரே தேர்தல், ஒரேரேசன் கார்டு என்று அறிவித்துக் கூறும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு சாதியை - வர்ணத்தை ஒழித்து, ஒரே மக்கள் - அனைவரும் சரிநிகர்மக்கள் - அனைவரும் சரிசமம் என்று கருதிஆயிரம் உண்டிங்கு சாதி என்பதை மாற்றி, சட்டம் கொண்டு வர ஏன் முன்வரவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவில், ‘‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது’’ என்பதற்குப் பதிலாக, ‘‘சாதி ஒழிக்கப்படுகிறது; அதை எந்த ரூபத்தில் கடைப் பிடித்தலும் குற்றம்‘’ என்று அறிவித்து, ஏன் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை நிலைநாட்ட முன்வரவில்லை? இதற்கு யார் தடை? என்பது நமது முக்கியமான கேள்வி.
ஹிந்து மதம் - அப்பெயர்கூட அந்நியன் தந்தது என்று காஞ்சி சங்கராச்சாரியார் (‘தெய்வத்தின் குரல்’, முதல் பாகம், பக்கம்267-268) போன்றவர்களே கூறியுள்ள நிலையில், அந்த பெரும்பான்மை என்று கூறி, மத வெறியினை ஒன்றிணைக்க முயலுமுன்னர் சாதியை ஒழிக்க முன்வரவேண்டாமா? ஹிந்து மக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்லவா இதை நமக்கும் முந்திக்கொண்டு போராட முன்வரவேண்டும்? இல்லையா? வெறும் தீண்டாமை ஒழித்து சகோ தரத்துவம் கொண்டு வந்துவிட்டோம் என்று வெகுநேர்த்தியாக திசை திருப்பாதீர்!தீண்டாமையின் ஊற்றும், உயிர் நிலையும் சாதி! சாதி!! சாதி!!! அதை ஒழிக்காமல், சமத்துவமோ, சகோ தரத்துவமோ, சுதந்திரமோ, சுகானுபவமோ ஒருக்காலும் ஏற்படாது! ஏற்படாது!! ஏற்படாது!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.