சென்னை:
தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, பேருந்து சேவை தொடங்கிய முதல் நாளிலேயே 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை குறைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில்,” தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் ஜூன் 28-ஆம் தேதி ஒரே நாளில் 19,290 அரசுப் பேருந்துகளில் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்” என்றார்.சாதாரண அரசுப் பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் காண பிரத்யேக வண்ணம் அடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திருவள்ளுவர், திருக்குறள் அடங்கிய பலகை வைக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.