சென்னை:
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு கடந்த 26ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பி.இ., பி.டெக். தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரையில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 844 பேர் விண்ணப்பித்துள்ளனர். 97 ஆயிரத்து 489 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 457 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு வருகிற 24ஆம் தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 153 இடங்கள் இருந்த நிலையில், இந்த வருடம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 249 ஆக குறைந்துள்ளது.10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டதால் இடங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமின்றி கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகிறார்கள்.தமிழகத்தில் உள்ள 143 அரசு கலைகல்லூரி களில் 1 லட்சத்து 6 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இதுவரையில்2 லட்சத்து 79 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். விண்ணப்பிக்க செவ்வாயன்று (10ஆம் தேதி) கடைசி நாளாகும். அதிகம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த வருடம் போட்டி கடுமையாக உள்ளது. தனியார் கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.அரசு கலை கல்லூரிகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வருவதால் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த வருடம் கூடுதலாக இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.