tamilnadu

img

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் பதவியேற்பு

தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

தமிழகத்தில்  மக்களவைத் தேர்தலுடன்  22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், ஒசூர், ஆம்பூர், குடியாத்தம், பெரியகுளம், ஆண்டிபட்டி, பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர் ஆகிய 13 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு, சபாநாயகர் அறையில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சபாநாயகர் தனபால் 13 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இதைத்தொடர்ந்து தற்போது திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-ல் இருந்து 101 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தவிர்த்துத் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தமாகத் திமுக கூட்டணியின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.