செங்கல்பட்டு, ஜன.1 செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிகள் மற்றும் கடற்கரையோர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விடுதி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. இதில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டாடினர். ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக வாகனங்கள் இயக்குவதை கட்டுப்படுத்தவும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதை தடுப்பதற்காக 60 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், இளைஞர்களின் பைக் ரேஸ் போன்ற விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும், ஒருசில இடங்களில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்கிய நபர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். மேலும், மது அருந்தி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். சாலைகளில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட எஸ்.பி.கண்ணன் நேரில் பார்வையிட்டார். ஈசிஆர் சாலையில் காவல்துறையினருடன் இணைந்து எஸ்.பி கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.