வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய நடைமுறையை எஸ்.பி.ஐ வங்கி அமல்படுத்த உள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, அண்மையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்கும் போது, தவறான நபர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபடாதவாறு, ஒடிபி முறையை கொண்டு வர உள்ளதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
10 ஆயிரத்திற்கும் மேல் எடுக்க முயன்றால் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் வரும். அதை ஏ.டி.எம்களில் பதிவிட்டால் மட்டுமே பணம் பெற முடியும். இந்த செயல்பாட்டின் மூலம் வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணத்திருட்டு நடைபெறுவது குறையும் என எஸ்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.