tamilnadu

img

நிர்வாக சீர்திருத்தம் செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம்: வங்கி வாரியம் பரிந்துரை

வங்கிகள் திறம்பட செயல்படுவதற்கு அவற்றின் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வங்கி மேலாண் வாரியம் (பிபிபி) பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் பணியாளர் நிர்வாக பயிற்சி மையத்தின் (டிஓபிடி) முன்னாள் செயலர் பிபி சர்மா தற்போது வங்கி வாரியத்தின் தலைவராக உள்ளார். வங்கிகள் வழங்கிய கடனை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அவற்றின் இயக்குநர் குழுவுக்கு தனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான வாரியத்தின் செயல்பாட்டு அறிக்கையில் சிறப்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைகள் அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகை என்பது வங்கியின் லாபத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். செயல்பாடுகளுக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கும் முறை அமல்படுத்தப்பட வேண்டும். இதை ஊழியர்களுக்கு வழங்கும் பங்குத் தொகை மூலமாகவும் அளிக்கலாம். அத்துடன் செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத் தொகைகளும் அளிக்கலாம் என வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத காலத்தில் பொதுத் துறை வங்கிகளின் இயக்குநர் குழுவில் உரியவர்களை தேர்வு செய்து பணியமர்த்தியது மற்றும் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவி மட்டும் உடனடியாக நிரப்ப முடியவில்லை என்றும் ஏனெனில் இப்பதவிக்கு வங்கிக்கு வெளியிலிருந்தும் தகுதியானவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தும் அது இயலாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு முறை அறிவிக்கை வெளியிட்டும் போதிய பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி, இப்பதவிக்குரியவர்கள் குறித்த பரிந்துரை அளிக்கப்பட்டது. இதேபோல எல்ஐசி நிர்வாக இயக்குநர் பதவிக்கு உரியவரையும் தேர்வு செய்து நியமித்ததாக வங்கி வாரியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் சுய அதிகாரம் பொருந்தியவர்களைக் கொண்டதாக வங்கி வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினருக்கு பொதுத் துறை வங்கிகளின் முழு நேர இயக்குநர் மற்றும் உயர் பதவிக்கான அதிகாரிகளை தேர்வு செய்து அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.