முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து உச்சநீதிமன்றத்தின் தலையீட்டினைத்தொடர்ந்து அடைப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளிவந்துள்ள, முதல் அரசியல் தலைவர். தாரிகாமியை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியால் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், உச்சநீதிமன்றம், சீத்தாராம் யெச்சூரியை காஷ்மீருக்குச் சென்று அவரைச் சந்திக்கக் கேட்டுக்கொண்டது. மேலும் அம்மனுவில் தாரிகாமியின் உடல் நலிவுற்றிருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மீது உச்சநீதிமன்றம், தாரிகாமியை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிட அனுமதித்தது. அந்த சமயத்தில் அவர் தில்லியில் தங்கியிருந்தபோது, கட்சியின் பீப்பிள்ஸ் டெமாக்ரசி மற்றும் லோக் லஹர் இதழ்கள் சார்பாக ராஜேந்திர ஷர்மா நேர்காணல் கண்டார். அவற்றின் சாராம்சம் வருமாறு:அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை மத்திய அரசாங்கம் ரத்து செய்தது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை மத்திய அரசாங்கம் ரத்து செய்தது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: இந்தத் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் தொடங்கப்பட்டி ருக்கிறது. ஆனால் இது, இத்துடன் முடிந்துவிடப் போவ தில்லை. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மட்டும் பாதிக்கும் ஒன்று அல்ல. இந்தத் தாக்குதல் என்பது இந்திய ஜனநாய கத்தின் மீதான தாக்குதலாகும், மனிதகுலத்தின் மீதான தாக்குதலாகும் மற்றும் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். நம் மதச்சார்பற்ற குடியரசுக்கும் மக்களுக்கும் எதிராக ஏவப்பட்டுள்ள தாக்குதல் குறித்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இதுபோன்ற தாக்குதல்களை எதிர்த்திடும் அத்தனை சக்திகளும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சத்திலிருந்த காலத்தில் கூட
மத்திய அரசாங்கம் இத்தகைய தாக்குதலைத் தொடுக்க தீர்மானித்துக் கொண்டிருந்தபோது அது தொடர்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசியல் கட்சிகள் மத்தியில் உணர்வுகள் எப்படி இருந்தன?
பதில் : மத்திய அரசு மிகப்பெரிய அளவில் தாக்குதல் தொடுக்கவிருக்கிறது என்பது போன்ற முன்கணிப்புகள் இருந்தன. மிகப்பெரிய அளவில் ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் மாநிலம் முழுதும் முக்கிய இடங்க ளில் நிறுத்தப்பட்டதுமட்டுமின்றி, அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் பயணம் கூட திடீரென்று பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது கூட பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் அவ்வாறு நிறுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் அது எல்லாம் உண்மை அல்ல என்பது பின்னர் தெரிந்துவிட்டது. இவ்வாறு இதற்கு முன்னெப்போ தும் நடந்ததில்லை. அமர்நாத் யாத்திரை என்பது, காஷ்மீரில் வாழும் பல்வேறு இனங்களிடையே இருந்து வந்த அமைதி யான நட்புறவின் அடையாளமாக விளங்கி வந்தது. உண்மை யில், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள், அமர்நாத் யாத்திரையின்போது கிடைக்கின்ற வருமானத்தில் தான் பிழைப்பு நடத்தி வந்தார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டதில்லை. இந்த முறை காஷ்மீர் குறித்து, முதலில் தேவையற்ற விதத்தில் மக்கள் மத்தியில் உணர்ச்சிகள் கிளறிவிடப்பட்டன. பின்னர் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவிதமான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை நம் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. பாதுகாப்பு என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைக் கட்டுப்பாடு கள் இன்றுவரை தொடர்கின்றன.
காஷ்மீர் வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் திடீரென்று தாங்கள் தங்கியிருந்த ஓட்டல்களிலிருந்து காலி செய்து விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்க ளை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த தொழிலாளர்களும் உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் 10 ஆயிரம் பேர்களாக இருந்த ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் எண்ணிக்கை பின்னர் 25 ஆயிரமாக அதிகரித்தது.
உச்சநீதிமன்றத்தில் கருத்துச் சொல்லாத அரசு
370ஆவது பிரிவை ரத்து செய்ததை, தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியே என்று பாஜக கருதுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : இது ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நிகழ்ச்சிநிரல். இது ஒன்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரல் என்றால், காஷ்மீருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுத்து, அதனை நாட்டின் குடியரசுடன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அதன்மூலம் மதச்சார்பற்ற இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை, நம்பகத்தன்மையே ஏற்படுத்தியிருக்க வேண்டும், காஷ்மீரிகள் உட்பட அனைத்து இந்தியர்கள் மத்தி யிலும் பிணைப்பை வலுப்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு காஷ்மீரில் வாழும் மக்களிடையே நம்பிக்கை யை வென்றெடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் மத்திய அரசாங்கத் தால் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 35-ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகளின் கீழ் உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையிலிருந்து வருகிறது. நம் கட்சி யும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரிவுகள் தொடர்பாக பாஜக அரசாங்கம் எவ்விதமான கருத்தையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திட முன்வரவில்லை. ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களிடமிருந்து எவ்விதமான கலந்தாலோசனைக ளையும் பெறாமல் ஒரு முடிவுக்கு உச்சநீதிமன்றத்தால் வர முடியாத சூழ்நிலை இருந்த அதே சமயத்தில், மத்திய அரசாங்கம் அங்கு வாழும் மக்கள் மீது தன்னுடைய சொந்த முடிவுகளைத் திணித்திருக்கிறது.
வாஜ்பாயின் முழக்கமும் மோடியின் முரண் செயலும்
370ஆவது பிரிவு என்பது தற்காலிகமான ஒன்றே (temporary) என்றும் அதை எப்போதோ ரத்து செய்திருக்க வேண்டும் என்றும் பாஜக கூறிக்கொண்டிருக்கிறதே.!
பதில் : மோடி-1 அரசாங்கம், பிடிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி செய்த காலத்தில், காஷ்மீர் மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஏராளமான வாக்குறுதி களை அள்ளிவீசிக் கொண்டிருந்தார்கள். இந்தியக் குடியரசு டன் முழுமையாக இணைவதற்கு உங்களுக்கு என்ன வெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்திடுவோம் என்று கூறினார்கள். 1947இல் அன்றைய ராஜா, காஷ்மீர் தனி நாடாகத் தொடர வேண்டும் என்றுதான் விரும்பி னார். அந்த சமயத்தில் பாகிஸ்தானிலிருந்து பழங்குடியினர் ஊடுருவி வந்ததை அவரால் தடுக்கமுடியாமல் திணறிய போது, அவருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மதச்சார் பற்ற மக்கள்தான் பழங்குடியினரை எதிர்த்துநின்று முறி யடித்தார்கள். அதன்பின்னர்தான் ராஜா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்திட முன் வந்தார். இத்தகைய தனித்துவமான நிலைமையின் காரணமா கத்தான் இம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. அப்போதும் இதனை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது. இப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாட்டையும் ஆபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
2016இல் பிரதமர் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் பேசியபோது, இந்தியா வுடன் காஷ்மீர் மக்கள் உணர்வுப்பூர்வமாக விலகிச்சென்று கொண்டிருப்பது அச்சந்தரத்தக்க விதத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினேன். இதற்கு தீர்வு காணும் விதத்திலும் காஷ்மீர் மக்களை வென்றெடுக்கும் விதத்திலும் என்னவெல்லாம் செய்திட வேண்டும் என்று பரிந்துரைகளை யும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள், அதையெல்லாம் செய்வதற்குப் பதிலாக, மாநிலத்தையே ஒரு சிறைக்கூடமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் துண்டித்திருக்கிறார்கள்.
370ஆவது பிரிவு தற்காலிகமானது என்று கூறப்பட்டு வந்தது. எனினும், இது மக்கள் இடையே ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான பாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சுயாட்சி க்கு வானமே எல்லை என்று கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்வைத்த முழக்கம் என்ன தெரியுமா? இன்சா னியத், ஜமூரியத், காஷ்மீரியத் (அதாவது மனிதாபிமானம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீரிகளின் நீண்ட நெடிய ஸ்நேக பூர்வமான நட்புறவு) என்பதேயாகும். ஆனால், இப்போது தலைகீழாக மாற்றிவிட்டார்கள். இதன்பின்னர் அவர்கள் முன்வைத்த முழக்கமான ‘எல்லோருக்காகவும்’ (‘sabkavikas’) என்ற முழக்கத்தை, ‘எல்லோருக்கும் விசுவாசமாக’ (‘sabkavishwas’) என்று விரிவுபடுத்தினார்கள். எல்லோருக்கும் விசுவாசமாக இருக்கும் வழி இதுதானா? ஆகஸ்ட் 5 அன்று என்ன நடந்தது? இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, இவற்றையெல் லாம் நியாயப்படுத்த முடியுமா? இதை எப்படி நம்புவது?
இது சரியான வழியல்ல...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசியல் நிலைமை என்ன?
பதில் : ஜனநாயகம் நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்விதமான அரசியல் நடவடிக்கையும் அனுமதிக்கப் படவில்லை. அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் இயக்கங்கள் தடுக்கப் பட்டிருக்கின்றன அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்று பாவனை செய்துகொண்டி ருக்கிறார். காஷ்மீர் தன் பொறுமையை இழந்து கொண்டி ருக்கிறது. இந்தியாவின் இதர பகுதிகளிடமிருந்து தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று உணர்வினைப் பெற்றுள்ளார்கள். நாட்டின் இதர பகுதிகளில் இருக்கின்ற உறவினர்களையோ, நண்பர்களையோ, குடும்பத்தினரை யோ தொடர்பு கொள்ள முடியவில்லை. காஷ்மீர் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்றதொரு “சிறப்பு அந்தஸ்தை” நாட்டில் உள்ள வேறெந்த மாநிலத்திற்காவது முயற்சி செய்து பாருங்களேன். இது, ஒட்டுமொத்த நாட்டின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். அரசியல் கட்சித் தலை வர்கள், மாநிலத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படு வதில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கும் பிரதான அரசியல் கட்சிகளால், காஷ்மீர்பண்டிட்டு களின் அவலநிலைமை சரியானமுறையில் கண்டுகொள்ளப்படவில்லை என்று அடிக்கடி கூறப்படுவது குறித்து?
பதில் : காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலைமை சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர்களை மீண்டும் காஷ்மீருக்குள் எடுத்துக் கொள்வதற்கு இதுதான் வழியா? அனைத்து இனத்தினரி டையேயும் பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம்தான் அவர்களைத் திரும்பக் கொண்டுவர முடியுமே ஒழிய, மதவெறித் தீயை விசிறிவிடுவதால் அல்ல.
மண்டியிட வைக்க முடியாது
வேறெதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில் : இன்றைய இக்கட்டான நேரத்தில் காஷ்மீர் மக்கள் பக்கத்தில் உறுதியுடன் நிற்கின்ற அனைத்து மக்க ளுக்கும், அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தலை வணங்கி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீநகருக்கு மூன்று முறை வந்த, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த, இறுதியாக என்னை தில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிட ஏற்பாடுகள் செய்திட்ட நம் தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீரில் வாழும் நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விதமான சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கி றோம். நீண்ட காலமாகவே எங்கள் மாநிலம் அடக்கு முறைக்கும், பாகுபாட்டுக்கும் ஆளாகி வந்திருக்கிறது. காஷ் மீரிகள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டாலும், அவர்கள் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தாலும், அவர்கள் அனைவரையும் வெஞ்சிறைக்குள் அடைத்தாலும் ஆட்சியா ளர்கள் எவ்விதமான அடக்குமுறைகளைக் கையாண்டாலும் அவர்களை மண்டியிடமட்டும் வைத்துவிட முடியாது. ஆட்சியாளர்கள் காஷ்மீர் மீது மேற்கொண்டிருக்கும் பாதை என்பது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான பாதை அல்ல, மாறாக அதனை அழிக்கும் பாதையாகும். இது நாட்டின் மதச்சார்பற்ற சோசலிசக் குடியரசுக்கு அபாயத்தை விளைவிக்கும் பாதையாகும். இதனை எதிர்த்து முறி யடித்திட அனைத்து ஜனநாயக அமைப்புகளும், மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்.
தமிழில்: ச.வீரமணி