tamilnadu

img

நாளை பொது வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் மறியல் போராட்டம்

சென்னை, ஜன. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் என்.கே.நட ராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 8, 2020 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதேபோல் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 200க்கும் மேற்பட்ட  விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் பேராதரவு வழங்கியுள்ளன.

மோடியின் பாஜக மத்திய அரசு, தொழிலாளர் நலனுக்கு பாதுகாப்பு அளித்துவந்த 44 சட்டங்களை 4 சட்டங்களாக குறுக்கி வெட்டி, போராடி பெற்றுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. தேசத்தின் ‘இறையாண்மை’க் கொள்கையின் ஆதாரமாக உள்ள பாது காப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகின்றது. வரலாறு காணாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதோடு, வேலையிலிருக்கும் தொழிலாளர் களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை வேலையிலிருந்து வேரோடு  பிடுங்கி வீதியில் எறிந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சிதைத்து சீர்குலைத்து வருகிறது. உற்பத்தித் துறையில் அனைத்து தொழில்களும் தீவிரமான நெருக்கடியில் சிக்கியுள்ளன. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் செத்து மடிந்துவிட்டன.

மறுபக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொழுத்த லாப வேட்டைக்காக சலுகைகள், ஏராளமான வரிச் சலுகைகளையும், ஊக்கத் தொகை, மானியம் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் வாரி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த தீய நடவடிக்கைகளால் பொருளாதாரத் தளத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து, சமூக நிலையில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கு காரணமான நவீன தாராளமயக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அரசியல் அமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில்  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தூக்கி எறிந்து விட்டு மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான தேசிய மக்கள் பதிவேடு, மக்கள் தொகை தேசிய பதிவேடு போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் எனக் கோரியும் ஜனவரி 8, 2020 (புதன் கிழமை) நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறச் செய்யும் வகையில் இடதுசாரி கட்சிகளும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளன. இப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி இம்மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக அந்தந்த மாவட்டங்களில் நடத்திட திட்டமிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

மாபெரும் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

திமுக ஆதரவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவற்றை பறிப்பதிலேயே மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் அனைவரும் ஒருமுகமாக ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு, அளவு கடந்த எண்ணிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிப் பெற்ற 44 சட்டங்களை அடியோடு நீக்கி விட்டு வெறும் 4 சட்டங்களை- அதுவும் கார்ப்பரேட்டுகளின் நலன் கருதி கொண்டு வருவது, புதிய ஓய்வூதியத் திட்டம், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு முத்தரப்பு சர்வதேச தொழிலாளர் மாநாட்டை நடத்தாதது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சி-87, சி-98 ஆகிய கன்வென்ஷன்களுக்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட தொழிலாளர் விரோத கொள்கைகள் உழைக்கும் வர்க்கத்தினர் மீது தொடுக்கப்பட்ட போராகவே பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்று வருவது மிகுந்த வேதனை தருகிறது.

மத்தியில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது என்ற மரபு பா.ஜ.க. ஆட்சியில் பிசுபிசுக்க  வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, முழுக்க  முழுக்க தொழிலாளர் விரோத கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புக் காட்டி வருவது மிகக் கொடுமையானது.  “ஆட்சிக்கு வந்தால் ஆண்டொன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்” என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி வாக்கு களைப் பெற்ற பா.ஜ.க. ஆட்சியில் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறு வனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தனியார்மயப்படுத்தப்பட்டு - தொழிலாளர் களின் எதிர்காலத்தின் மீது மிகப் பெரிய கேள்விக்குறி விழுந்திருக்கிறது.  ஆண்டொன்றுக்கு 2 கோடி பேர் வேலை யிழந்து வரும் சூழலை வஞ்சகமாக திணித் துள்ள பா.ஜ.க. அரசு- தொழிலாளர்களின் வயிற்றில் ஈவு இரக்கமின்றி அடித்து வருவது கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் ஆபத்தாக மாறி யிருக்கிறது. தொழிலாளர் சங்கங்களுக்குள் பகையை உருவாக்கி- பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது.

பல முறை தொழிலாளர்கள் தரப்பில் முறை யிட்டும், பல கட்டங்களில் முன் அறிவிப்பு போராட்டங்களை நடத்தியும், கடந்த ஆறு வருடங்களாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வழங்க மறுத்து- தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவது கண்டனத் திற்குரியது. ஜனநாயக ரீதியிலான போராட்டங் களுக்கு மருந்துக்கும் இந்த அரசு மதிப் பளிப்பதில்லை என்பது தொழிலாளர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.  தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி, அவர்களுக்கான சலுகைகளைப் பறித்து- அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளி- முதலாளிகளின் அரசாக மட்டுமே திகழ வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு விரும்புவது மன்னிக்க முடியாத துரோகம்! இதை  தொழிலாளர் வர்க்கம் என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே காலம் இப்போதும் கூடக் கடந்து போய் விடவில்லை. போராட்டம் அறி வித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை, மத்தியத் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் உடனடி யாக அழைத்துப் பேசி - தொழிலாளர்கள் முன்வைத்துள்ள 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி ஒரு சுமூகத் தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.