tamilnadu

img

மின்சார சட்ட திருத்த மசோதாவும் இலவச மின்சாரமும்...

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் விநியோக சட்டம் 1948 இன் படி பொதுத்துறை நிறுவனமாக மற்றப்பட்டு கடந்த 1.1.1957 முதல் செயல்பட்டு வருகிறது.மின்சார சட்டம் 2003 இன் படி கடந்த 1.11.2010 முதல் கழகமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. அதற்கு முன்னர்பல்வேறு தனியார் கம்பெனிகளாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் செய்து வந்த கம்பெனிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மின் வாரியங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக உருவாகின.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க  வேண்டுமெனில் ஏழை, எளிய மக்கள் உட்பட எல்லோருக்கும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், தொழிற் சாலைகள் பெருக வேண்டும்; அதற்கு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று உணர்ந்த இந்தியாவின் முந்தைய  அரசு மின்சார வாரியங்களை உருவாக்கியது.தமிழ்நாடு மின்சார வாரியம் 60 ஆண்டுகளைக் கடந்து இரண்டரை கோடி நுகர்வோர்களையும் லட்சக்கணக்கான மின் மாற்றிகளையும், துணை மின் நிலையங்களையும் பரந்து விரிந்த மின் வழிதடத்தையும் உருவாக்கி தன் நுகர்வோர் சேவையில் மிகப் பிரம்மாண்டமாக, மிகப்பெரும் சொத்து மதிப்புடன் உயர்ந்து நிற்கிறது.

பொதுத்துறை நிறுவனமாக ஏழை எளியவர்க்கும் குறைந்த விலையில் மின்சாரம் அளித்ததும் இலவச மின்சாரம் வழங்கியதும் என லாப நோக்கில்லாமல் சேவை நோக்கோடு மக்கள் பணி செய்து வருகிறது.சுனாமியின் போதும், தானே புயலின் போதும், ஒக்கி புயலின் போதும் சமீபத்திய கஜா புயலின் போதும் மின்சார வாரியம் பொதுத்துறையாக   இருந்ததால் தான் விரைந்து செயல்பட்டு மின் விநியோகத்தை கொண்டுவர முடிந்தது என்பதை அனைவரும் அறிவோம்.எதற்காக பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டதோ அதன் இலக்கை அடைந்து வெற்றி கண்டது தமிழ் நாடு மின்சார வாரியம். எல்லா கிராமங்களுக்கும் நூறு சதவிகிதம் மின்சாரத்தை கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே சாதனை படைத்து ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாக இன்று மாறி நிற்கிறது.

இப்படி பல்வேறு சாதனைகளை செய்த மின் வாரியங்கள் சேவை நோக்கோடு லாப நோக்கம் இன்றி செயல்பட்டதால் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் சொல்லி மத்திய அரசு அதனை தனியார்மயம் ஆக்கும் நோக்குடன் மின்சார சட்டம் 2003 ஐ கொண்டுவந்து  மின்வாரியங்களை கழகங்களாக மாற்றியது. இதனால் மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் தனியார் ஈடுபட வழி பிறந்தது. பல்வேறு மாநிலங்களில் தனியார்  மின் விநியோகம் மக்களின் நலனுக்கு எதிராக லாப நோக்குடன் செயல்பட்டதால் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் தான் மின்சார திருத்தச்சட்ட மசோதாவை இப்போது தாக்கல் செய்ய மத்திய அரசு முயல்கிறது.

மின்சாரத் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

1. மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்கு முறை ஆணையம்,மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும்.அதனால் மின்சாரம் சம்பந்தமாக மாநில அரசு முடிவுகளை எடுக்க முடியாது.

2. ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் பதவியை மத்திய அரசே நியமிக்கும்.அதுவும் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்.இதன் காரணமாக தமிழக மக்களின் தேவைகள் உணரப்படாது.

3. மாநில அரசுகள் இலவச மற்றும் குறைந்த விலையில் விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கும் மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் (கேஸ் சிலிண்டர் மானியம் போல்). அனைத்து நுகர்வோர்களும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் காரணமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு நூறு யூனிட் இலவசம், நெசவாளர்கள் மற்றும் குடிசைக்கு மின்சாரம் உள்ளிட்டவைகள் ரத்து ஆகும்.

4. மின்சார கொள்முதல் செய்வதை மத்திய அரசின் இந்த ஆணையம் முடிவு செய்யும்.இதன் காரணமாக மாநில அரசின் உரிமை பறிபோகும்.தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் ஊக்குவிக்கப்படும். அரசு மின் உற்பத்தி துறையிலிருந்து விலகிக் கொள்ளும். மின்சார விலை கடுமையாக ஏறும்.      மொத்தத்தில் மக்களுக்கு அத்தியாவசிய  சேவை செய்யும் மின் துறை லாபம் ஈட்டும் துறையாக மாற்றப்பட்டு கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்படும்.

5.பேரிடர் காலங்களில் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் மக்கள் தோழனாக விளங்கும் மின் வாரியங்கள் பணக்காரர்களின் பிடியில் சிக்கி, ஏழைகள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். தனியார் மின்விநியோகம் ஊக்கப்படுத்தப்படும். அதன் விளைவாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் விநியோக நிறுவனம்  நஷ்டமடையும். மின் கட்டணம் உயரும். பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மின்துறை ஊழியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

எனவேதான்  இந்திய தேசிய மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனைகடுமையாக எதிர்க்கிறது. தற்போது  ஆந்திரா, தெலுங்கானா,  கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்துள்ளன.இந்தியா முழுவதும் மின் தொழிலாளர்கள், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான  கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன.தற்போது தமிழக அரசும் இந்த சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. கனரக மத்திய சிறுகுறு தொழில்கள் மற்றும் வேளாண்மையில் தன்னிறைவும் சுயசார்பும் ஒரு நாடு பெற வேண்டுமானால் மின்சாரம், பெட்ரோலியம் ஆகிய துறைகளின் உற்பத்தி, பராமரிப்பு, அதன் விநியோகம் ஆகியவற்றை லாபம் அல்லது இழப்பு ஏற்படுத்தும் தொழில்களாக பார்க்கக் கூடாது. இத்துறைகளை  பொதுத்துறைகளாக பராமரித்துக் கொண்டே பொருளாதாரஇழப்புகள் இருப்பின்  அவைகளை சரி செய்ய ஆராய வேண்டும். இதற்கு மாற்று, தனியார்மயமாக்குவதல்ல. எனினும் பொது மக்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் எதிரான இந்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டுரையாளர் - முனைவர். சா.சம்பத்

தென் மண்டலத் தலைவர், அகில இந்திய மின்வாரிய பட்டயப்பொறியாளர்கள் சம்மேளனம்.