உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அவர் ஏஎல்எஸ்(ALS) எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வியாதியினால் பேச, சாப்பிட, கைகால்களை அசைக்க, மூச்சுவிட முடியாத நிலை ஏற்படுகிறது. மூளையிலிருந்து தண்டுவடம் வழியாக நமது தசைகளை அசைக்கும் மோட்டார் நியுரான்ஸ் எனும் நரம்புகள் சிதைவதினால் இது ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பக்கவாதம் வருவதற்கு முன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக துடுப்பு வலிக்கும் (Rowing) குழுவிலிருந்தார்.தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவராகவும் உணர்ந்த அவர் இந்த விளையாட்டில் சேர்ந்தார். குறுகலான வழிகளில் படகை செலுத்தி அதற்கு சேதம் விளைவித்ததனால் சக வீரர்களால் சாகசக்காரர் என அழைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டு கால்பந்துக் குழு 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு ஒரு சூத்திரத்தை தயாரித்தாராம். 1966ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பந்தயங்களை ஆய்வு செய்து 4-3-4 என்ற அணிவரிசையில் சிவப்பு சட்டை அணிந்து விளையாடவேண்டும் என்றாராம்.வெப்ப நிலை 5 டிகிரி உயர்ந்தால் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு 59சதவீதம் பாதிக்கப்படும் என்றும் சொன்னாராம்.