tamilnadu

img

மொய் செய்தல் - செல்வகதிரவன்

நெருங்கிய நண்பரோ, துராத்து உறவுகளோ யாராக இருந்தாலும்… திருமண விசேடங்களில் ‘மொய்’ எழுதுவது என்பது முக்கிய நிகழ்வாகிவிட்டது. மணமக்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்கிறார்களோ இல்லையோ; மணமக்களின் பெற்றோரைக் கண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு சாப்பாட்டுப் பந்திக்குப் போய்விடுகிறார்கள். சாப்பாடு முடிந்த பிறகு மண்டப வாசலுக்கு வந்து, பெயரைச் சொல்லி மொய்யை எழுதி விட்டு, (அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முதலியோ்ர், பரிசுப் பொருட்களும் வழங்குவதுண்டு) விசேட வீட்டுக்காரரைக் கண்டால் போய்ட்டு வர்றேன்னு சொல்லி… இன்னோர் கும்பிடு போடுவார்கள். இல்லையென்றால் தாம்பூலப் பையைப் பெற்றுக் கொண்டு பேசாமல் புறப்பட்டுப் போய் விடுவார்கள்.  வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் பொழுது  எதுவும்  மணமக்களுக்கு மண வீட்டாருக்கு உப யோககரமானதாக இருக்காது. சுவர் கடிகாரங்கள், அலங்கார ஓவியங்கள், சின்னச் சின்ன பிள்ளையார் சிலைகள்  போன்றவைகளாகத்தான் இருக்கும். தேடித் தேடி பார்த்தாலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்திருக்காது. என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் புத்த கங்களை அன்பளிப்பாக கொடுக்கும் வழக்கம் இன்னமும் நம்மவர்களிடம் பழக்கத்திற்கு வரவில்லை.

தென்மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் பரிசுப் பொருட்  கள் வழங்கும் பழக்கம்  இல்லை. ஒரு  சில நண்பர்களைத் தவிர உறவுக் கூட்டமெல்லாம்  பணம்தான் மொய் என்கிற பெயரில் எழுதுவார்கள். அதுவும் அழைப்பிதழில் “தங்கள் நல்வரவை  விரும்பும்” பகுதியில் பெயரைப் போட்டு விட்டால் போச்சு…  ஆயிரத்தி ஒரு  ருபாய்க்கு குறைந்து எழுதக் கூடாது என்பது சமீப காலங்களில் கடை பிடிக்கப்படும் எழுதப்படாத விதியாகும்.  திருமணங்கள் மட்டுமல்ல… காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகு விழா போன்ற விசேடங்களுக்கும் ‘மொய் எழுதுதல்’ முக்கியமான இடம் வைக்கிறது.  மொய் வரவுக்காகவே சிலர் சின்னச் சின்ன விசேடங்களை நடத்துவதும் உண்டு.  தென்மாவட்டங்களில் சில சமூகங்களில் மரண வீடுகளில் பணம் எழுதும் பழக்கம் இருப்பது பலரும் அறியாத தகவல் ஆகும். இதனை பச்சை எழுதுதல் என்கிற பெயரில் அழைக்கிறார்கள். இறந்தவர் வீட்டு உறவினர்கள் அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோர் மட்டுமே பச்சை எழுதுதலில் பங்கு கொள்கிறார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள், அண்டை அயலார் போன்றவர்கள் பச்சை எழுதுவதில்லை. எதார்த்தமாக யோசித்ததால் கல்யாணம், காது குத்து உள்ளிட்ட விசேட வீடுகளில்  மொய் எழுதுதலைக் காட்டிலும் துக்க வீடுகளில் எழுதுவது சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவும். விசேடங்கள் இன்ன தேதி என்று நிர்ணயம் செய்து நிகழ்வுக்கு தயாராகி விடுகிறார்கள்; செலவாகும் தொகைக்கும் முன்னேற்பாடு செய்து விடுவார்கள்.  இழப்பு வீடுகள் என்பது அப்படியல்ல.. எதிர்பாராமல் ஏற்படுவது ஆகும். நடுத்தர ஏழை குடும்பங்களில் எதிர்பாராத இறப்பு ஏற்படும் போது செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி திகைத்துப் போய் விடுகிறார்கள். கடன்களை வாங்கிக் காரியத்தை முடித்து கடனைத் தீர்ப்பதற்குள் படாதபாடுபட்டுப் போவோர் ஏராளம்.  வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களை… விழாக்களில் எண்ணற்ற புதுமுறைகளை காலப் போக்கில் புகுத்துகின்றோம். அது போன்று இறப்பு வீடுகளில் மொய் எழுதுகின்ற பழக்கத்தை அனைத்து சமூகத்தினரும் கடைப்பிடித்தால் பலரும் பயன்பெறுவர்.

;