சேலம், அக்.15 - சேலத்தில் மாமேதை காரல் மார்க்ஸ் வெண்கலச் சிலை திறக்கப்படவுள்ளது. அதற்கான கட்டுமான பணி செவ்வாயன்று துவங்கியது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் வெகு எழுச்சியுடன் துவங்கிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் வெண்கலச் சிலை கம்பீரமாக எழுந்திட உள்ளது. இச்சிலை திறப்பு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 21 அன்று நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், கே. தங்கவேல் மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். சிலையை நிறுவுவதற்கான முதல் கட்ட கட்டுமானப் பணிகள் செவ்வாயன்று சேலம் மாவட்டக் குழு அலுவலக வளாகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், சிலை ஏற்பாட்டாளர்களான சிபிஎம் ஜங்சன் கிளை செயலாளர் எ.முகமது அலி, எம்.யூசுப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.