tamilnadu

img

வளம் தரும் புதிய விவசாய யூடியூப் வீடியோ தொழில்நுட்பம்

கடந்த சில ஆண்டுகளாக பெருகி வரும் ஸ்மார்ட் போன் வாயிலாக இன்று கிராமப்புறங்களில் மிகவும் வேகமாக விவசாய வீடியோக்கள் வாயிலாக வேளாண் மற்றும் தோட்டக் கலை புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் பெருகி வருகிறது.  குறிப்பாக யூடியூப் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், கால்நடை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இப்புதிய தொழில்நுட்ப விரிவாக்க முயற்சிகளால் அதிகளவு பயன்பெற்று வருகின்றனர். 

முன்னோடி விவசாயிகள், பல தொழில்நுட்ப வல்லுநர்கள், கிராமப்புற கண்டுபிடிப்பாளர்கள் (Rural grassroot innovators) போன்றவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், பல வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றை படங்களாக எடுத்து, வட்டார மொழிகளில் வெளியீடு செய்து வருவதால் தொழில்நுட்பங்கள் பரவலாக்குதல் மற்றும் பரிமாற்றம் எளிதாக நடந்து வருகிறது.  மேலும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் விவசாயிகள் பார்க்கவும், தங்களுக்கு தேவை இருப்பின் பலமுறை மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய இளம் தலைமுறை விவசாயிகளிடம் வேகமாக பரவி வருகிறது. 

தற்போது இப்புதிய யூடியூப் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் பல லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோ படங்களை பலர் பார்வையிடுவதால் இதில் பல விவசாய பொருட்களை விளம்பரப்படுத்தும் வணிக முயற்சிகளும் நடந்து வருகிறது.  கால்நடை வளர்ப்பு, விவசாய பொருட்களை மதிப்பு கூடுதல், வேளாண் நலத்திட்டங்களில் பங்கு பெறுவது மற்றும் பயன்படுத்துவது, வேளாண் இயந்திர கோளாறுகளை சரி செய்வது போன்றவை காட்டப்படுவதால் பலர் தங்களது பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுகள் பெற முடிகிறது. 

மேலும் பல விவசாய விளைப் பொருட்கள், கால்நடைகளை விற்பனை செய்யவும், இப்புதிய யூடியூப் வீடியோக்கள் இடைத்தரகர்கள், கமிஷன் கடைக்காரர்களை தவிர்த்து நேரடியாக நுகர்வோரை சந்திக்க உதவுவதால் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.  அண்மையில் டாடா அறக்கட்டளையுடன் இணைந்து கூகுள் நிறுவனம் வழங்கிய டிஜிட்டல் பயிற்சியில் பங்கு பெற்ற பல பண்ணை மகளிர் புதிய மதிப்புக் கூட்டிய தொழில்களில் ஈடுபட்டு இன்று தொழில் முனைவோராக கிராமப்புறங்களிலும், பல நகர்ப்புறங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர்.  எனவே, தமிழக விவசாயிகள் புதிய வேளாண் மற்றும் தோட்டக் கலை தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் முறைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பல நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விவசாய யூடியூப் வீடியோ சேனல்களை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் அதிக பயன் பல பெறலாம்.