tamilnadu

img

களப்போராளி கவிஞர் தமிழ்ஒளி!

மக்களின் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டுமென்று வாழ்ந்தவர் பொதுவுடமை கவிஞர் தமிழ்ஒளி. அவரது பிறந்தநாள் நூற்றாண்டு 2024ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமுஎகச முன்னெடுப்பில், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு அமைக்கப் பட்டு, கடந்த சில ஆண்டுகளாக அவரது படைப்புகளை பரவலாக்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக விழாக்குழு வும், ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையீத் மகளிர் (எஸ்ஐஇடி) கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து ‘தமிழ் இலக்கிய மன்ற’த்தை தொடங்கி உள்ளன. இந்த மன்றத்திற்கான தொடக்கவிழா மற்றும் கவிஞர் தமிழ் ஒளியின் 98 ஆவது பிறந்த நாள் கருத்த ரங்கம் செப்.21 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முரண்படு
தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்து உரை யாற்றிய கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ் மொழி உழைக்கும் மக்களால் கட்டிய மைக்கப்பட்ட மொழி. அதனால்தான் அதற்கான தோற்றக்கதை பற்றி தொன்மை இல்லை. தமிழ் வர்க்க மொழி. எனவேதான் ஒரே பொருளுக்கு மாவட்டத்திற்கு மாவட்டம் பெயர் மாறுபடுகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் பண்பாட்டிற்கும், சமஸ்கிருத பண்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளது. திருக்குறள் புனித நூல் அல்ல; வாழ்வியல் நூல். திருக்குறளில் வரும் பெண்கள் குறித்த வார்த்தைகளை, கற்பிக்கப்படும் பாடங்களை, ஆளுநர், அரசியல்வாதிகள் தமிழ் பற்றி கூறும் கருத்துக்களை தமிழ் மன்றம் விவாதிக்க வேண் டும். விவாதிக்காமல், முரண்படாமல் வளர்ச்சி இருக்காது என்பதை சுட்டிக்காட்டினார். நிலைமறுத்தல், கட்டமைப்பை தகர்த்தல், சமத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் என்பதை தான் பாரதியும், பாரதிதாசனும் செய்ய முற்பட்ட னர். அதன்படி செயல்பட்டவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது படைப்புகளையும் தமிழ்மன்றம் விவா தித்து மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை எழுத வேண்டும். அதை நூற்றாண்டு விழாக்குழு நூலாக கொண்டு வரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கருத்தியல் மாறுபடாதவர்
மண்ணின் மொழி, பண்பாடு, அரசியல் புரிந்து கொண்டால்தான் கற்றதை சரியாக பயன்படுத்த முடியும். அதற்கான திறவுகோலாக இலக்கிய மன்றம் திகழும். யார் உதட்டில் ஒளிந்து கிடக்கும் வார்த்தை அல்லது புத் தகம் நமது வாழ்வை மாற்றும் என்று தெரியாது. பாரதி பாரதி தாசனுக்கு அடுத்து கண்ண தாசனுக்கு தாவி விடுகிறோம். இடையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் தமிழ் ஒளி போன்றவர்கள் இருக் கிறார்கள். “பாரதி - பாரதிதாசன் இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளர் களின் இயக்கமாகிய பொதுவுடமைப் போர்க் களத்தில் களப்போர் வீரரனாக விளங்கியவன் கவிஞர் தமிழ்ஒளி” என்று 40 மொழிகளை கற்ற றிந்த பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார் பேரா.பர்வீன் சுல்தானா. தொடக்கம் முதல் இறுதிவரை கருத்தியல் மாறுபடாமல் எழுதினார். ஒதுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவரது படைப்புகள் புறக்கணிக்கப்படுள்ளன. அவரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதே முக்கியப்பணி. அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

முன்னோடி
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் கருத்தரங் கிற்கு தலைமை தாங்கி பேசுகையில், சங்க கால அரசர்கள் சிற்றரசர்கள்தான். நிலப் பரப்பைத் தான் வைத்திருந்தனர். படையை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வசதி இல்லை. எனவேதான், போர்வரும் போது வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். ராஜராஜ சோழன் காலத்தில்தான் பேரரசுகள் உருவாகின. ஆனால், அரசர்களுக்கு சவால்விடும் வகையில் வணிகர் சமூகம் இருந்தது. நிலவுடமை சமூகத் திற்கும் வணிக சமூகத்திற்கும் உள்ள முரண் பாட்டை சிலப்பதிகாரம் விளக்குகிறது. மனித உரிமைக்காக போராடியவள் என்ற வகையில் கண்ணகியை அணுக வேண்டும். கண்ணகி, மாதவி, மணிமேகலை போன்ற தமிழ்ப்படைப்பு கள் முற்போக்கு மரபு கொண்டவை. இதுபோன்ற காவிய மரபு (ராமாயணம், மகாபாரதம்) வட இந்தியாவில் கிடையாது என்றார். கோவலன் கண்ணகியை ஏன் பிரிந்தான் என சிலப்பதிகாரத்தில் இல்லை. அவர்கள் இரு வருக்கும் குழந்தை இல்லை என்ற உளவியலை வெளிப்படுத்தியவர் தமிழ் ஒளி. கனிகையர் குல பெண்கள் ஆடல், பாடல், எழுத்தில் சிறந்த விளங்கினர். எனவே, ‘மாதவி காவியத்தை படைத்தார். பொதுவுடமை இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்தார். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்ட களப் போராளியாகவும் திகழ்ந்தார் என்று குறிப்பிட்ட செந்தில்நாதன், தமிழ் ஒளி குறித்து தமிழ்ப்பேராசிரியர்கள் பலருக்கு தெரியவில்லை. எனவேதான் நூற்றாண்டு விழாக்குழுவை அமைத்து கடந்த சில ஆண்டுகளாக அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். அவரது நூற்றாண்டு விழாவையும் இந்த கல்லூரி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் கவிஞன்
“கவிஞர் தமிழ்ஒளி பாய்ச்சும் வெளிச்சம்; சிறுகதைகளில் சில மாந்தர்கள்” எனும் தலைப் பில் பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். ஆளுநரை எதிர்த்து தற்காலத்தில் நாம் போராடுவதுபோன்று, புதுவையில் இருந்த பிரெஞ்ச் ஆளுநரை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப் பட்டார் தமிழ்ஒளி. அரசியல் போராளியாக திகழ்ந்த தமிழ்ஒளி, மகத்தான படைப்பாளி யாகவும், அரசியல் கவிஞஞானகவும் மிளிர்ந் தார். கலை கலைக்காக, அதில் பிரச்சாரம் கூடாது. கடவுளிடம் முறையீடு செய்வதும், சுரண்டல் துன்பதை பற்றி பேசாமல் இருப்பதுதான் அசல் இலக்கியம் என்று ஒரு பகுதியினர் கூறியபோது, தேவாரம், திருவாசம் போன்ற பக்தி இலக்கியமே பிரச்சாரம்தான். மக்களிடம் ஒரு கருத்தை முன்வைத்தால் அது பிரச்சாரம்தான் என்று எதிர் உரையாடல் நடத்தியவர் கவிஞர் தமிழ்ஒளி. மொழி உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க வேண்டும் என்றார். நிலப்பிரப்புத்துவம், பிராமணியம், வைதீகத்திற்கு எதிராக படைப்புகள் வாயிலாக தாக்குதல் நடத்த வேண்டும் என்றார்.

தொகுப்பு: செ.கவாஸ்கர்

;