tamilnadu

img

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது!

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ; தேசிய ஜனநாயக் கூட்டணி பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லது! மக்கள் விரோத பாஜக ஒன்றிய ஆட்சிக்கு முடிவு கட்டும் பணியை ‘இந்தியா’  கூட்டணியும் தமிழ்நாட்டில் செயல்படும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் வெற்றிகரமாக முடித்துக் காட்டும். 

சென்னை, செப். 25 - பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் தாங்கள் இனி இல்லை என்றும் அதிமுக அறி வித்துள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும் அதிமுக தெரி வித்துள்ளது. பாஜக கூட்டணியில் சிவ சேனா, ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், மக்கள் ஜனநா யக கட்சி என முக்கியமான பல கட்சி கள் இருந்தன. ஆனால், தற்போது அந்தக் கட்சிகள் இல்லை. அல்லது பாஜகவால் உடைக்கப்பட்டு, பல வீனமான கூட்டணிக் கட்சிகளாக மாற்றப்பட்டன.  இருந்த ஒரே  பெரிய  கட்சி அதிமுக மட்டுமே. இந்நிலையில், அந்த ஒரு பெரிய கட்சியும் தற்போது முழுக்கு போட்டது, பாஜகவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக் கிறது. 

சீண்டிய அண்ணாமலை

அதிமுக தலைவர்களை சீண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தார். அதிமுக வுடன் கூட்டணி வைத்தால், பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜி னாமா செய்வேன் என்று ஓராண்டுக்கு முன்பே அறிவித்தார். ஜெயலலிதாவை ஊழல் பேர் வழி என்று விமர்சித்தார். இதற்காக அண்ணாமலையைக் கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றி யது. “அரசியல் அனுபவமும் முதிர் ச்சியும் அற்றவர் அண்ணா மலை; சர்ச்சையான பேட்டிகளை கொடுத்து பெரிய ஆளாக  வேண்டும் என்று நினைக்கிறார்” என்று அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுத்தார்.  இவ்வாறு மோதல் முற்றிய தால், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களையும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களையும் தில் லிக்கு வரவழைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் களைச் ‘சமாதானப்படுத்தி’ அனுப்பி வைத்தார்.  26 கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியால் அச்ச மடைந்த பாஜக, திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் புதுப் பித்தது. லெட்டர் பேடு கட்சிகளை எல்லாம் சேர்த்து, தங்களுடன் 38 கட்சிகள் இருப்பதாக கூறி, தில்லி யில் ஒரு கூட்டத்தையும் நடத்தி யது. இதில், எடப்பாடி பழனிசாமி க்கு மோடிக்கு அருகில் பிரதான இடம் கொடுக்கப்பட்டது.

மீண்டும் உரசல்

இதனிடையே சற்று அமைதி யாக இருந்த பாஜக அண்ணா மலை, பின்னர் ஓரிரு மாதங்களி லேயே மீண்டும் தனது வேலை யைக் காட்ட ஆரம்பித்தார். மதுரையில் கூடிய அதிமுக மாநாடு பிரம்மாண்டமானது என் றெல்லாம் கூறமுடியாது; 90 சதவிகி தம் காசு கொடுத்து கூட்டி வரப் பட்டவர்கள் என்றார். 2026-இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என்றார். நான் ஒன்றும் கை கட்டி, காலில் விழுந்து பதவிக்கு வர வில்லை என்று எடப்பாடி பழனி சாமியை பகிரங்கமாகவே விமர் சித்தார். இவ்வளவுக்கும், அண்ணாமலை இவ்வாறு பேசுவ தற்கு 2 நாட்களுக்கு முன்புதான், எடப்பாடி பழனிசாமி தனியாக சென்று அமித்ஷாவை தில்லியில் சந்தித்துவிட்டு வந்திருந்தார். இது அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே, மீண்டும் உரசலை ஏற்படுத்துவதாக அமைந்தது. உச்சக்கட்ட மோதல் இந்நிலையில், கடந்த வாரம், அறிஞர் அண்ணா குறித்தும், திரா விட இயக்கம் குறித்தும் அண்ணா மலை பேசியது மோதலை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றது. முன்பைக் காட்டிலும் அதிமுக தலைவர்கள் கடுமையாக பதிலடி  கொடுக்கத் துவங்கினர். “ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்ட ணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம்  நமதே” என்று கொங்கு பகுதியில் அதிமுக வினர் சுவரொட்டிகளை ஒட்டினர். முன்னாள் அமைச்சரும், அதிமுக  செய்தித் தொடர்பாளருமான டி.  ஜெயக் குமார் ஒருபடி  மேலேசென்று, “அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப் போது இல்லை. எங்களை விமர்சிக் கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? அண்ணாமலை தனித்துப்  போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்” என  செப்டம்பர் 18 அன்று ஊடகங்கள் முன்பு பகிரங்கமாக அறிவித் தார். அண்ணாவைப் பற்றி அவதூ றாகப் பேசினால் நாக்கு துண்டாகும் என்று செல்லூர் ராஜூ ‘எச்சரிக்கை’  விடுத்தார். சி.வி. சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

அவமதித்த அமித்ஷா

ஒருகட்டத்தில், அண்ணாமலை அவ ராகவே பேசுகிறாரா; அல்லது தேசியத் தலைமை அவரை பேச வைக்கிறதா என்று அதிமுகவினர் சந்தேகம் அடைந்த னர். பாஜக தேசியத் தலைமை அவரைக் கண்டிக்க மறுப்பது ஏன் என்றும் அவர்களே தங்களுக்குள் கேள்விகளை எழுப்பினர்.   இதையடுத்து, அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்ற நிபந்தனையுடன், அமித்ஷாவை சந்திப்பதற்காக, அதிமுக தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று தில்லி சென்றனர். ஆனால், அமித்ஷா சந்திக்க மறுத்து, அதிமுக தலைவர்களை அவமானப்படுத்தினார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். அவரோ அண்ணாமலையை மாற்ற முடியாது என்று ஒரேயடியாக கூறிவிட்டார். இதன் பின்னணியிலேயே, அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” என்று ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டாவது முறையாக அறிவித்தார். அத்துடன், திங்களன்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதன்படி சென்னை ராயப்பேட்டை யிலுள்ள அதிமுக தலைமை அலு வலகமான எம்ஜிஆர் மாளிகையில், 3.45  மணிக்கு கூட்டம் தொடங்கியது. அதிமுக மூத்த தலைவர்கள், சட்டமன்ற - நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் 69 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், “2 கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று (செப்டம்பர் 25) முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது” என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களி டம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, தங்களின் தீர்மானத்தை வாசித்துக் காட்டினார். இந்த அறி விப்பை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். கூட்டணியிலிருந்து விலகும் முடிவை வெளியிட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமானது, “மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” திரு. @EPSTamilNadu அவர்களின் தலை மையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செய லாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமன தாக தீர்மானிக்கப்படுகிறது” என்று  குறிப்பிட்டதுடன், “#நன்றி_மீண்டும்வரா தீர்கள்” (பாஜக இனி எங்களைத் தேடி வரவேண்டாம்) என்ற ஒரு ஹேஷ்டேக்கை யும் உற்சாகமாக டிரெண்ட் செய்துள்ளது.