சென்னை,நவ.20- மதுரை அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று கூறி, அப்பகுதி மக்கள் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. மாமதுரையின் வரலாற்றை அழிக்கும் நோக்கிலான வேதாந்தா நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார். இந்நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது, எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகிறோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
+