tamilnadu

img

பேரிடர் காலங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க...

சென்னை மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாதவரம் (மத்திய) பால்பண்ணை 1963ஆம் ஆண்டு பால் பெருக்குத்துறையால் ஆரம்பிக்கப்பட்டது. 1.7.1972 ஆம் ஆண்டில் கம்பெனி சட்ட திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு பால் வள நிறுவனம் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 3.60 லட்சம் லிட்டர் பால் தினசரி பதப்படுத்தப்பட்ட பால் பைகளில் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி 1976ஆம் ஆண்டு அம்பத்தூர் பால் பண்ணை தொடங்கப்பட்டது. இங்கு தினசரி 4.5 லட்சம் லிட்டர்  பதப்படுத்தப்பட்ட பால் பைகளில் நிரப்பி அனுப்பப்படுகிறது. தென் சென்னை மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் கீழ் சோழிங்கநல்லூர் பால் பண்ணை 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இங்கு தினசரி 4 லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் பைகளில் நிரப்பி அனுப்பப்படுகிறது. மூன்று பால் பண்ணைகளிலும் சேர்த்து தற்போது 15 லட்சம் லிட்டர் வரை பதப்படுத்தப்பட்ட பால் பைகளில் நிரப்பி அனுப்பப்படுகிறது.

இதில் 7.5 லட்சம் லிட்டர் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள பால் மொத்த விற்பனையாளர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முகவர்கள் சிறு கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். எப்போது கனமழை பெய்தாலும் நான்காவது பால் பண்ணையான கொரட்டூரில்  உற்பத்தி பாதிக்கப்படும். ஏனென்றால் அது மிகவும் தாழ்வான பகுதி. மற்ற இடங்களில் அந்த பிரச்சனை இல்லை. இந்நிலையில் தற்போது மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பால் தட்டுப்பாடு நிலவியது. வழக்கம் போல் கொரட்டூர் பால் பண்ணை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்கு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஊழியர்கள் பணிக்கு வர முடியாததால் பால் உற்பத்தி தடைபட்டது. மழை வெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 முதல் 120 நாள் வரை கெட்டுப்போகாத பால் மற்றும் பால் பவுடர் மட்டுமே விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை அப்படியில்லாமல் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி சிலர் மனசாட்சியே இல்லாமல் குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான பாலை கூட கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு லிட்டர் பால் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்கள் எங்கே?

சென்னை மக்களின் பால் தேவையில் 40 விழுக்காடு, மாநில அளவில் வெறும் 16 விழுக்காடை மட்டுமே ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. மற்றவற்றை தனியார் பால் நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன. இதுபோன்ற பேரிடர் காலங்களில் தனியார் பால் நிறுவனங்கள் விநியோகம் செய்வதை நிறுத்தினால் பெரிய அளவில் பால் தட்டுப்பாடு ஏற்படும். தனியார் நிறுவனங்கள் பால் விநியோகம் செய்யவில்லை என்றால் யாரும் கேள்வி கேட்க முடியாது. பேரிடர் காலங்களில் மக்களின் தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமையாக உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் லாப நோக்கோடு மட்டுமே தனியார் நிறுவனங்கள் செயல்படும். எப்போது மழை பெய்தாலும் பாதிப்புக்கு உள்ளாகும் கொரட்டூர் பால் பண்ணையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று பால் பண்ணைகளிலும் நிரந்தர ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு பால் பண்ணையிலும் ஊழியர்கள் தங்குவதற்கான அறைகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஊழியர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும், கூடுதல் ஊதியம் வழங்கவும் அரசு முன்வர வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், தேவையென்றால் கூடுதல் பால் பண்ணைகளை உருவாக்க வேண்டும்.  இப்படி செய்வதன் மூலம் தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளை தடுக்கப்படும். பேரிடர் காலங்களில் பால் தட்டுப்பாடு இருக்காது. மாடு வளர்ப்போர், பால் பண்ணை ஊழியர்கள், பால் முகவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் வழங்க முடியும். ஏனென்றால் குழந்தைகளுக்கு கூட மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஆவின் பாலை தான். அதேபோல் ஆவின் நிறுவனம் தயார் செய்யும் வெண்ணை, நெய், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பிற பொருட்களையும் தரமாக வழங்க முடியும்.