tamilnadu

img

சு.வெங்கடேசன் வெற்றி மதுரையில் கம்யூனிஸ்டுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தேர்தல் பிரச்சார இறுதிநாளில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தனது உரையை முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து இறங்குகிறார். அந்த நொடியிலேயே அங்கிருக்கும் மக்கள் கூட்டம் அவரை மொய்த்துக்கொள்கிறது.இந்திய மாணவர் சங்கத்தையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் சேர்ந்த, சிவப்புச் சீருடை அணிந்த, கட்டுடல் வாய்ந்த இளைஞர்கள், தங்களுடைய மதிப்பு வாய்ந்த சொத்தாகிய வெங்கடேசனுக்குப் பாதுகாப்பாக உடனடியாக சூழ்ந்து கொள்கிறார்கள். ஆயினும் தன்னோடு செல்பி எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுகிறார், அனுபவமிக்க அரசியல்வாதியாகப் பலருடனும் கைகுலுக்குகிறார். அப்படியே அவர், தயாராகக் காத்திருக்கும் காருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.புதிதாகப் பார்க்கிற ஒருவர் அவரை ஒரு திரைப்பட நட்சத்திரம் என்றோ, மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு திராவிட இயக்கத் தலைவர் என்றோ நினைக்கக்கூடும். இரண்டுமே இல்லை. அவர் ஒரு எழுத்தாளர். இரண்டு இலக்கியப் புதினங்களைத்தான் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டும் எப்பேர்ப்பட்ட படைப்புகள்! முதல் நாவலான ‘காவல் கோட்டம்’, அசத்தும் ஆயிரம் பக்கங்களில் மதுரை வட்டாரத்தின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்கிறது. இலக்கியச் செழுமை மிகுந்த அந்த நாவல் வெங்கடேசனுக்கு 2011 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுக் கொடுத்தது. அவரது இரண்டாவது நெடுநாவல் ‘வேள்பாரி’, சங்க காலத்து மலைக்குடி மக்கள் தலைவனைப் பற்றியது. கதை வடிவிலான அந்த வரலாறு முன்னணி தமிழ் ஏடாகிய ஆனந்தவிகடன் பத்திரிகையில் 100 வாரங்கள் தொடராக வெளியானது. லட்சக்கணக்கான இல்லங்களுக்கு வெங்கடேசனை அழைத்துச்சென்று, அனைவருக்கும் அவரைத் தெரிந்தவராக்கினான் வேள்பாரி.


தொன்மையான கீழடி அகழ்வாய்வுப் பகுதிகள், சமூக நீதி, மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையின் தேவை என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவதைக் கேட்கிறபோது, வெவ்வேறு உலகங்களின் வழியாகப் பயணிக்கிற அனுபவம் கிடைக்கிறது. அவரது அரசியல் சிந்தனைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்காகவும், தங்கள் கைகளில் இருக்கும் அவரது புத்தகங்களில் கையெழுத்துப் பெறுவதற்காகவும் அவருடைய பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரளாகக் கூடுகிறார்கள். அவர் தனது பேச்சை முடிக்கிறபோது கூட்டத்திலிருந்து பலரது கைகள் உயர்கின்றன. அந்தக் கைகளில் காவல் கோட்டம், வேள்பாரி புத்தகப் படிகள் இருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் கூட்டத்தைக் கடந்து வெங்கடேசன் இருக்கும் பிரச்சார வாகனத்திற்கு வருகின்றன. அத்தனை புத்தகங்களிலும் அவர் கையெழுத்திடுகிறார். எழுத்தின் மூலமாகக் கிடைத்த அங்கீகாரங்கள் சிறப்பானவை. அதேவேளையில் அரசியலில் வெங்கடேசன் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலம் செயல்பட்டு வரும் அவர், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவரான பி. மோகனின் உதவியாளராகப் பணியாற்றிப் பயிற்சிபெற்றவர். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, மதுரை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் தலைவர்களின் ஆளுமையில்தான் இருந்துவந்தது. காலம் சென்ற மோகன், தனது மோப்பெட் வண்டியில் சுற்றிவந்து, 1999, 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று, மதுரை நகரத்தை கம்யூனிஸ்ட் கோட்டையாக்கினார். இப்போது வெங்கடேசன் கோலுயர்த்தியிருக்கிறார்.“மதுரை மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார் மோகன்,” என்கிறார் வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது, “அவரை எப்படிப் பார்த்தார்களோ அதே கண்ணோட்டத்தோடுதான் என்னையும் பார்க்கிறார்கள். அவர் இந்த நகரத்துக்குச் செய்த பணிகளை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதே பணிகளை அதே வழியில் நான் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாக அமைந்திருக்கிறது,” என்றார்.


அணிவகுக்கும் பிரச்சனைகள்


மோகன் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளுக்குப் பிறகும், கடந்த 10 ஆண்டு காலமாக மதுரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை மிகமிக முக்கியமான பிரச்சனை. “அடுத்த மாதம் கோடையின் உச்சம் வரப்போகிறது. நகர மக்கள் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது. வேதனை தருகிற நிலைமை இது,” என்றார் வெங்கடேசன்.சென்ற ஆண்டு தமிழக அதிமுக அரசு, பெரியாறு - வைகை இணைப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தப் போவதாக வாக்களித்தது. ஆனால் அதற்காக நிதி எதையும் ஒதுக்கவில்லை. “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பேன்” என்கிறார் வெங்கடேசன். மதுரையில் தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. நகர போக்குவரத்தும், உள்கட்டமைப்புகளும் மதுரையை ஒரு நகர்ப்புறக் கிராமம் என்று சொல்லத்தக்க நிலையில் குழம்பிப்போயுள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் வேலையின்மை ஒரு பெருங்கவலைக்குரிய பிரச்சனை.


“மதுரையைச் சுற்றிலும் சுமார் 20 பெரிய ரப்பர் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ரப்பர் தொழில் பூங்கா அமைப்பதற்கும், ரப்பர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஏற்படுத்துவதற்குமான அடித்தளங்களாக அந்தத் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வாறு அமைவது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சிறிய தொழிற்சாலைகளை உருவாக்கி வளர்ப்பது வேலையின்மை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு முக்கியமான வழி. தகவல் தொழில்நுட்பத் தொழிலைப் பொறுத்தவரையில் மதுரையில் இப்போது இரண்டு பெரிய நிறுவனங்கள்தான் இருக்கின்றன. இந்தத் துறையில் மேலும் இரண்டு நிறுவனங்கள் வந்தால் கூட, 5,000 முதல் 10,000 வரையில் வேலைகள் உருவாகும்,” என்றார் அவர்.வெங்கடேசனை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் முன்னால் நிற்பவர் ராஜ் சத்யன் (36). மதுரை மாநகர முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன். வாக்காளர்களுக்கு அதிமுக ஒரு ஓட்டுக்கு ரூ 300 வீதம் கொடுத்தது என்று ஒரு பேச்சு உலவுகிறது. ஆயினும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை தீர்மானகரமான பங்காற்றும் என்று கருதுகிறார் வெங்கடேசன். “மக்கள் அதிமுக மீது பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராஜ் சத்யனின் தந்தை மேயராக இருந்தபோது மதுரை நகர மேம்பாட்டுக்கு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததில்லை,” என்றார் அவர்.திமுகவின் பாரம்பரியமான பலம், அதன் வேர்மட்டத் தொண்டர்களின் ஆதரவு ஆகியவையும் வெங்கடேசன் வெற்றிக்குத் துணையாக வினையாற்றக்கூடும். “பெரியதொரு மாநிலக் கட்சியின் ஆதரவு கிடைத்திருப்பது ஒரு நல்ல அம்சம்,” என்றார் அவர்.வெங்கடேசனின் மனதுக்கு நெருக்கமான ஒன்று, கீழடி அகழ்வாய்வுப் பிரச்சனை. 2016இல் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம், மதுரைக்கு அருகில் உள்ள இந்த தொன்மையான கிராமத்தில் அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கீழடி நகர வாழ்க்கை. இங்கே அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்வதை மத்திய பாஜக கூட்டணி அரசு தடுத்து நிறுத்திவிட்டது என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.“கீழடி மிக முக்கியமானது. சங்க இலக்கியங்களில் காணப்படும் பல தகவல்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கீழடி மண்ணில் இருக்கின்றன,” என்றார் வெங்கடேசன். 


கிருஷ்ணகுமார் பத்மநாபன்


“முதல்முறையாக முழுமையான சங்க காலத்து நகரம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. கீழடி தடயங்கள் பரவியுள்ள 100 ஏக்கர் அளவுக்குப் பரவியுள்ள இரண்டு மணற்பரப்புகளில், ஒரே ஒரு சதவீதம் அளவுக்குத்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறுகிய இடத்திலிருந்தே தொன்மையான தமிழ் நாகரிகச் சான்றுகள் இந்த அளவுக்குக் கிடைத்திருக்கின்றன. அது, வேதகால நாகரிகத்தை வலியுறுத்த விரும்புகிற பாஜகவின் நோக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது,” என்றார் அவர்.“வேதகால விஞ்ஞானம்” என்று பாஜக விடுகிற சரடு, அது கட்ட விரும்புகிற பழங்காலம் பற்றிய மயக்கம் ஆகியவற்றோடு இது எப்படி முரண்படுகிறது? “பழங்காலம் என்பதற்கும், பாரம்பரியம் என்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. பழங்காலம் அழுகி மறைந்து போகும். பாரம்பரியம் நிலைத்திருக்கும், தலைமுறைகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்,” என்றார் வெங்கடேசன்.கீழடியில் 15,000 தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றில் கூட எந்தவொரு கடவுளின் உருவமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “இது பெரு மதம் உருவாவதற்கு முன்பே இங்கே ஒரு நாகரிகம் தழைத்திருந்ததை எடுத்துக் காட்டுகிறது. இதுதான் அவர்களை அதிர வைக்கிறது. இன்று நாம் காண்கிற அனைத்தும் அந்தக் காலத்திலேயே இருந்தது என்று நிறுவ முயலும் பாஜக நிலைப்பாட்டிற்கு இது முற்றிலும் மாறுபட்டது,” என்றார்.


இடது மறுமலர்ச்சி நம்பிக்கை


இந்தப் பின்னணிகளோடு, வெங்கடேசனின் வெற்றி, நாடு முழுவதுமே இடதுசாரிகளுக்கு, சிறிய அளவில்தான் என்றாலும் கூட, ஒரு நம்பிக்கைக்கூறாக அமையும் எனலாம். “கம்யூனிஸ்ட்டுகள் கடந்து வந்த பாதை குறித்து நாங்கள் ஆழமாக விவாதித்திருக்கிறோம் என்றே கருதுகிறேன். இந்தியச் சமுதாயத்தோடு கம்யூனிசச் சிந்தனைகளைப் பொருத்திவருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவை எப்போதுமே வலிமையாக இருந்து வந்துள்ளன. நாங்கள் செய்ய வேண்டியது அதனை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான்,” என்றார் சு. வெங்கடேசன்.வெங்கடேசனின் வெற்றி இந்திய அரசியலில் அறிவுத் தளத்தினருக்கு, முற்போக்கு எழுத்தாளர்களுக்கு, சமூகநீதிப் போராளிகளுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அமையும். இதையெல்லாம் விட, ஒரு வரம்புக்கு உட்பட்ட வகையிலேனும், இந்தியா என்றால் பசுவும் சாதியும் அல்ல என்பதை அந்த வெற்றி நினைவூட்டிக் கொண்டிருக்கும்.


தமிழில்: அ. குமரேசன்

;