tamilnadu

img

பானைகளில் வண்ணம் தீட்டும் குயவரின் வாழ்வு வண்ணமாகுமா?

நாகர்கோவில் ஜன. 13- கலைகள் பலவிதம். அது காலம் கடந்து வாழ எதிர்கொள்ளும் இன்னல்களும் பலவிதம். பிறப்பது எதுவாயினும் அது காலத்திற்கேற்ற மாற்றம் பெற்றால் மட்டுமே வாழ இயலும். இந்த நெருக்கடிகள் சூழ் உலகில்,கலைகளும் கலாச்சாரங்களும் ஒருங்கே பின்னிப் பிணைந்தவையாகவே இன்னமும் இருந்து வருகிறது. அதுவும்  நம் இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு கலாச்சாரங்களுக்கு பஞ்சமில்லை . இத்துணை கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய இந்தியா உலகினரை என்றும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கும். தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மாந்தர் பிரசித்தியாக கொண்டாடி தீர்க்கும் விழா என்றால் அது நான்கு நாள்கள் சாதி மத வேறுபாடு கடந்து தொடர் பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் தான். பொங்கல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது  வண்ணம் தீட்டப்பட்ட பானைகளும், புத்தாடைஉடுத்தி உலவும் சுற்றத்தாரும், மாவிலை தோரணங்களும் தான்.

இந்த கொண்டாட்டங்களை கண்டு பூரித்து வியக்கும், ரசிக்கும் நம்மில் எத்துணை பேருக்கு தெரியும் பொங்கல் பானைகளில் வண்ணம் தீட்டும் குயவர்களின் வாழ்வில் இன்றும் வண்ணங்களே இல்லை என்று? பொன்மலை திருமலை மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசை தொழில் சங்கம் லிட்.கே.வி.ஐ யில் பணி புரியும் தொழிலாளிகள் கூறுகையில், வழி வழியாக பாரம்பரிய முறையில் நாங்கள் செய்யும் பானையில் சிறு மாற்றம் கொண்டு வர வேண்டும் என விரும்பினோம். வெறும் பானை மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது மண்ணால் ஆன ஜாடி, கூஜா, உருளி, இரண்டடுக்கு சட்டி போன்றவைகளை சில தொழிற்பயிற்சி பயின்று இளந்தலைமுறையினர் உருவாக்கினர். அது சந்தையிலும் வாடிக்கையாளர்களிடமும் மிகுந்த வரவேற்பையும் பெற்று வந்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிலிருந்தே தொடரும்  கொரோனா தொற்று எங்களையும் விடவில்லை. வெயில் உச்சமடைந்து குளங்களில் நீர் வற்றும் மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தான் மண்பாண்டம் செய்ய மண் எடுக்க உகந்த காலங்கள். இந்நிலையில் மண் எடுப்பதற்கு சட்டபூர்வமாக அனுமதி பெறுவது அவசியம். ஆனால் அனுமதிக்காக பல மாதங்களுக்கு முன்னேயே அனுமதி கோர வேண்டியிருக்கிறது. மேலும் மண் எடுப்பதற்கான காலமும் இடமும் நெருக்கடியாகவே அனுமதிக்கப்படுகிறது. மண்ணெடுக்கச் செல்லும் அந்த நெருக்கடியான 10நாட்கள் தான் எங்களின் ஒரு வருட கால வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கிறது. மேலும் 2020 ஆம் ஆண்டில் எங்களின் வாழ்வாதார காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற தேர்தல் எங்களின் வாழ்வியலை பெரிதும் உலுக்கியது. தேர்தல் பணிக்காக மற்றுள்ள தொழிலாளர்களையும் அவர்களின் தேவையையும் அலைக்கழிக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது இயல்பாக நடந்து வந்தது. இதனால் மண்ணெடுக்க அனுமதி தாமதமாகும் நிலை. மேலும் அனுமதி பெரும் காலங்களில் ஏற்படும் பெரும் மழை எங்களை திண்டாட வைத்தது. மேலும் அனுமதி கோரும் எங்கள் குயவர்களை எதோ மணல் கொள்ளையர்கள் போல் பார்க்கும் அதிகாரிகளும் பெருகினர்.

இதனாலேயே வேறு வழியின்றி வயலோரங்களில் ஒதுங்கும் வண்டல் மண் மற்றும் களிமண்களையே பயன்படுத்த காலம் தள்ளியது. இதனால் ஏற்படும் துயரம் மண்ணுக்கு இடையில் இருக்கும் சிறு கல் பானைகளை சுடும் வேளையில் பருமனடைந்து பானை வெடிக்கும் சூழல். இதனால் முந்தைய கால வருமானத்தை விட கடந்த இரண்டு ஆண்டுகளும் சராசரியாக 50 விழுக்காடு வருமானத்தை இழந்து தவித்து வருகிறோம். இந்த வருமான இழப்பு எங்கள் குடும்பத்தின் வயிற்றையும் குழந்தைகளின் கல்வியையும் குறிவைத்தது. மண் எடுக்க அனுமதிச் சீட்டு சில காலம் வழங்கப்படாது. இதனால் நலவாரிய அட்டை அக்காலத்தில் உதவும் இதனால் வரும் சோகம் என்னவென்றால் வருமானமிழக்கும் காலங்களில் குழந்தைகளின் கல்வி உதவித்தொகைக்காக  நலவாரியம் வழங்கும் உதவித்தொகையையும் கூட வாங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. மண்பாண்டத் தொழிலாளர்களை கண்காணிக்க பதவியிலிருக்கும் அதிகாரிகளுக்கு இக்கலை மற்றும் சிரமங்கள் குறித்தான எந்த விழிப்புணர்வும் இல்லை. அவர்களிடம் சென்று உதாசீனப்பட்டதே அதிகம் என வருத்தத்துடன் கண்ணீர் வடிக்காத குறையாக கூறினர் மண்பாண்ட தொழிலாளர்கள்.

-முகமது முபீஸ்

;