எழுத்தாளரும், இதழியலாளரும் வங்காள மொழி கற்றவருமான வீ.பா.கணேசன் எழுதியுள்ள “தாகூர் வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம்” என்ற 335 பக்க நூல் திரும்பத் திரும்ப, கவிதை போல் விரும்பி, விரும்பி படிக்க வைக்கும் புத்தகம் எனலாம்.
தாகூரைப் பற்றி வங்காளம், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் உள்ள படைப்பு களிலிருந்தும், பத்திரிகை செய்திகளிலிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு, எழுதப்பட்ட நடை வாசிப்போரின் மனத்திரையிலே ஓடும் சித்திர மாகிறது.
அரண்மனைவாசியான தாகூரின் வாழ்க்கையை, உள்ளதை உள்ளபடி கூறுகிற பொழுதே, ஒரு புதினத்தின் இதயத்துடிப்போடு படைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, பாரத
நாட்டு அரண்மனை என்றாலே, அந்தப்புரம், கடன்சுமை, கூத்து, கும்மாளம், சூதாட்டம், பங்காளி சண்டை, சூழ்ச்சி, சதி, மர்மங்கள் நிறைந்த இடமாக இருக்கும். பகவத் கீதை மற்றும் பழைய அறநூல்கள் இவைகளில் காணப்படும் இந்த அரண்மனை அரசியல் புகாத இடமாக இந்த அரண்மனை இருந்தது. பொருட்செல்வமும், அறிவுச் செல்வமும் நிறைந்த இடமாக இருந்தது. அது மட்டுமல்ல; இங்கு வசித்தவர்கள் அனைவரும் தெய்வாம்சம்
பொருந்தியவர்களாக பாமர மக்கள் கருதினர். வங்க சனாதன உலகமும், ஆங்கில மோக அறிவுலகமும் பைத்தியங்கள் வாழுமிடமாக கேலி செய்தனர். இதற்கு காரணமுமிருந்தது. தாகூர் தனது பெண் குழந்தைகளுக்கு பால்ய
விவாகம் செய்துவைத்து விமர்சனத்திற்கு உள்ளானார். இருந்தாலும், மேலைநாட்டு அறிவியல் கலாச்சாரமும், வேதகால மரபுகளை எதிர்த்த சிரமண பாரம்பரிய மனிதாபிமானமும் சங்கமிக்குமிடமாகவும் இருந்தது என்பதை இப்புத்தகம் விரிவாகச் சித்தரிக்கிறது
தாகூரின் தாத்தா, இந்துமத மூட நம்பிக்கை களை எதிர்த்து இயங்கிய பிரம்ம சமாஜத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். இவரது தந்தை மகரிஷி தேவேந்திர நாத்தும் அதே வழியில் பயணித்தவர். தாகூருக்கு வயது 14 இருக்கும்பொழுது தாயின் மறைவு அவரை உலுக்கியது. தாய்ப் பாசத்திற்கு ஏங்கிய சிறுவனாகவே குழந்தை பருவத்தை கடக்க நேர்ந்தது. எட்டு வயதி லேயே கீர்த்தனை இயற்றும் ஆற்றல் மிக்க சிறுவனாகப் பரிணமிக்க காரணமாக இருந்த தாய், இப்போது இல்லை. மூத்த சகோதரனின் மனைவி காதம்பரி தாய்போல் பாசத்தை பொழிந்த தோடு, தாகூரின் இலக்கிய படைப்புக் களை செம்மையாக்கியது இவரது விமர்சனமும் பாராட்டுமே.
அன்று மேலை நாடுகளுக்கு சென்றுவர, சூயஸ் கால்வாய், வேகமான நீராவி கப்பல், இந்திய ரூபாய்க்கு சர்வதேச அந்தஸ்து ஆகிய இம்மூன்றும் இந்திய செலவந்தர்களுக்கு இருந்ததுபோல, தாகூருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இங்கிலாந்து இரண்டாவது வீடாக மாறி இருந்தது. மேலைநாட்டு சமூக
வாழ்க்கையை அறிந்தவர்களாகவும், ஆங்கில
- ஐரோப்பிய இலக்கியங்களை கற்றவர் களாகவும், அறிந்தவர்களாகவும் இருந்தனர். இந்த அரண்மனையே மேலைநாட்டு நண்பர்கள் திரளுமிடமாக இருந்தது. இந்த நண்பர்களே தாகூரின் எழுத்துக்களை, ஆங்கிலத்தோடு, ஸ்பானிஷ், பிரெஞ்சு மொழிகளில் பரப்பினர். கீதாஞ்சலியின் உள் பொருளில் இருந்த தாகூரின் இறைஇயலை மேலைநாட்டு அறிவுலகமும் பிற மதத்தவரும் பாராட்டிட வழி பிறந்தது. அதேவேளையில், இந்திய சனாதனமும் மேலை நாகரீகமே உயர்வு
என்ற ஆங்கில மோகிகளும் அவரைச் சாடினர்.
முதல் உலக யுத்த காலத்தில், உலகம் சுற்றி, போருக்கு எதிராகவும், ஆயுதம் குவிப்பிற்கு எதிராகவும் பேசி, விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு நிதியும் திரட்டினார். அதற்காக ஃபாசிஸ்ட் முசோலினியை சந்தித்தது; அவரால் வீட்டுக் காவலிலிருந்த மேதை
யையும் ரகசியமாக சந்தித்தது; ஜப்பானில் ஆயுதக் குவிப்பு ஆபத்து என்று பேசி விமர்ச
னத்திற்குள்ளாகியது; நிதிக்காக, சென்னை, கோவை உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றியது; நாராயண குரு உட்பட பிரமுகர்களை சந்தித்தும், சொற்பொழிவாற்றியும், வரலாறு காணாத தேசாந்திரியானார். இப்புத்தகத்தின் மொத்தமுள்ள 42 இயல்களில் 37 இயல்கள்
தாகூர் என்ற ஒரு தேசாந்திரியின் இலக்கிய படைப்புகள், அதன் தாக்கங்கள், யுத்த எதிர்ப்பு,
அரசியல் சொற்பொழிவுகள், அதன் தாக்கங்
கள், காந்தியின் கைராட்டை இயக்கம் பற்றிய விமர்சனங்கள், ‘நான் தேசபக்தனல்ல; உலக குடிமகன்’ என்று துணிந்து எழுதியும் பேசியும் சர்ச்சைகளை கிளப்பியது; படித்துறை பேசுகிறது என்ற சிறுகதை முதல் கோரா, சதுர்ரங்கா, நாவல்கள், நாடகம் நதிர் புஜா இவற்றின் தாக்கங்கள், இந்த விவரங்கள் படிக்க தெவிட்டாத முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாகூர் மீது நம்மை அறியாமலே பச்சாதாபம் பிறக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் மானுடத் தன்மையை 20ஆம்நூற்றாண்டிலேயே உலகக் குடிமகனாக வாழ்ந்து காட்டியவராக மனதிலே பதிகிறார்.
“தாகூர்”
வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம்
ஆசிரியர் : வீ.பா.கணேசன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
+9144 4200 9603
பக்கம் : 335 விலை : ரூ. 400/-