பிரதமர் அவர்களே! எங்களை நீங்கள் ஊடுருவல் காரர்கள் என்று கூறியது எனக்கு வியப்பாகவும் , வேடிக்கையாகவும் இருந்தது. ஏனெனில் எனது தந்தை வழி சந்ததியினர், தாய் வழி சந்ததியினர் அனைவரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஊடுருவல் செய்தவர்கள் ஆவார்கள். எதேச்சையாக, நான் ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். நான் ஒரு இந்தியக் குடிமகன். பொதுவாக தங்களின் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் முஸ்லிம்களாகிய நாங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல; நாங்கள் ஒரு பொருட்டே கிடையாது என்பது போல நீங்கள் பேசி வருகிறீர்கள். எனவே தான், இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். எனது தந்தை வழி கொள்ளுத் தாத்தா இந்திய தேச விடுதலைப் போரில் பங்கேற்றதற்காக வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஊடுருவியவர் ஆவார். எனது மோசமான கண்பார்வைக் கோளாறு காரணமாகவோ அல்லது வரலாற்று நுண்ணறிவு பற்றாக்குறை காரணமாகவோ உங்களது அரசியல் முன்னோடிகள் எவரையும் அந்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தில் பார்க்கவே முடியவில்லை. இதற்காக அவர்கள் மீது குற்றம் காண மாட்டேன். ஏனெனில்,பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி, ஊடுருவல்காரர்கள் ( முஸ்லிம் ஆட்சியாளர்கள்) அனைவரையும் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றியதன் மூலமாக இந்தியாவிற்கு சிறப்பான சேவையாற்றியது என்பது அவர்களின் கண்ணோட்டம். இதற்காகவும், ஆங்கிலேய அரசு மிகத் திறமையாக இந்தியர்களைப் பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தியதற்காகவும், இதனால், எதிர்காலத்தில் நீங்கள் எழுச்சி பெற்று வெற்றிகரமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வழி அமைத்ததற்காகவும் பிரிட்டிஷ் அரசை நீங்கள் போற்றுகிறீர்கள்.
தனித்துவமாக இழிவுபடுத்தலாம்
இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். எனது பெற்றோர் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அடுத்து நான் ஒரே ஒரு குழந்தையைப் பெற்றேன். இது நிச்சயமாக மிகப்பெரிய வளர்ச்சி என்று ஒப்புக் கொள்வீர்கள். குறிப்பாக ,எனது தாத்தா ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் என்ற முறையில், ஐந்திலிருந்து மூன்று, மூன்றிலிருந்து ஒன்று என எல்லா இனப்பெருக்க அளவுகோல்களின் படி பார்த்தாலும் இது நிச்சயமாக முற்போக்கான வீழ்ச்சி தானே! உண்மையிலேயே நீங்கள் எங்களை இன்னும் தனித்துவமான முறையில் இழிவுபடுத்த வேண்டும் என்று விரும்பினால், உங்களின் வசவாளர்கள் கூட்டம் எங்களின் பிறப்புறுப்பில் மேற்கொள்ளப்படும் அடையாளத்தை சுட்டிக்காட்டி அவதூறு செய்வது போலவே, நீங்களும் எங்களைக் குறிப்பாகக் கூறி இழிவு படுத்தலாம். ஏனெனில், இப்படி எங்களை தனித்துவமாக இழிவுபடுத்தினால் மற்றவர்களையும் இழிவுபடுத்துவது போன்ற குழப்பம் இருக்காது. நீங்களும், உங்களின் இழிசொல் வசவாளர்களும் , மற்றவர்களான நாங்கள் எத்தனை குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்று பேசுவதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பிரிவினை சித்தாந்தமும் நல்லிணக்க சகவாழ்வும்
பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் தங்களுக்கு பிரதமர் என்ற முறையிலேயே இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தேன். ஏனெனில், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினைவாத சித்தாந்தத்திற்கும், எனது நினைவுத்திறனுக்கு எட்டிய வரையில் எனது முன்னோர்கள் மூலம் நான் சுவீகரித்துள்ள நல்லிணக்கம், சமாதான சகவாழ்வுக்கும் இடையில் மிகப்பெரிய தொடர்புத் தடைகள் உள்ளதைக் காண்கிறேன். உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் (இது பயனற்றதாக இருந்தாலும் கூட), உங்களின்” நாம்- மற்றவர்கள்” எனும் சித்தாந்தத்தால் என்னைப் போன்ற மற்றவர்களாகிய நாங்கள் பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறோம்; துன்புறுத்தப்படுகிறோம்.
வேட்டை நாய்களை ஏவும் அதிகாரம் படைத்த...
இருந்தபோதிலும், என்னைப் போன்ற சகலரையும் மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் சமமான குடிமகன்களாக கருதுகிறது எமது பெருமைமிக்க இந்திய அரசமைப்புச் சட்டம். அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியவர் பிரதமர் பதவியில் இருப்பவர் என்பதால், பிரதமர் பெயரில் கடிதம் எழுதுகிறேன். இப்படி உங்களுக்கு பகிரங்கமாகக் கடிதம் எழுதத் துணிந்ததற்காக என்னிடம் இரக்கம் காட்ட வேண்டுகிறேன். உங்களிடம் உள்ள இரண்டு அல்லது மூன்று சுருக்க எழுத்துக்களைக் கொண்ட பல்வேறு வகையான வேட்டை நாய்களை என் மீது ஏவி விடுவதற்கான அதிகாரம் உள்ளவர் தாங்கள் என்பதை நான் நன்கறிவேன். இந்தக் கடிதத்தை எழுதும்போது, அந்த நான்கு எழுத்து வார்த்தைகள் எனது உதடுகளில் இருந்து வெளிவரவில்லை என்று தங்களுக்கு உறுதி கூறுகிறேன். எனது மலையாள மொழியில் உள்ள புகழ்பெற்ற கவிதை ஒன்று எனது நினைவுக்கு வருகிறது. “நான் உன்னிடம் ஒருபோதும் சொல்லாத கெடுவாய்ப்பான வார்த்தைகள், என் வாய்க்குள் கசப்புச் சுவையை ஏற்படுத்துகிறது” என்பதே அந்தக் கவிதை.
நிறுத்தாத அவதூறுகள்
மலையாளம் பேசும் கேரளாவை நீங்கள் ஒரு முறை சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டீர்கள். நான் ஒரு இந்தியன், முஸ்லிம் மற்றும் மலையாளி முஸ்லிம் (சோமாலியர்) ஆவேன். எனவே உங்களின் அவதூறான பழிச் சொற்களால் இரு முனைகளிலும் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளவனாக இருக்கிறேன். தயவு செய்து குறித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு இந்தியன், முஸ்லிம் மற்றும் மலையாளி என்று கூறுவது தங்களின் பக்தர்கள் என் மீது பாய்ந்து பிறாண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான். பார்த்தீர்களா அவன் முதலாவதாக முஸ்லிமாம்! எனவே அவன் ஒரு தேச விரோதி, சதிகாரன் என்று எளிதாக உங்களது பக்தர்கள் ஊகித்துக் கொள்வார்கள். சாவர்க்கர் ,கோல்வால்கர் காலத்தில் இருந்தே என்னைப் போன்ற மக்களின் நாட்டுப்பற்றை சங்பரிவாரத்தினர் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். உங்களின் பொய்களை ஆதாரப்பூர்வமாக மறுத்தாலும் நீங்கள் உங்களின் அவமதிப்புகளை, மறைமுகமான அவதூறுகளை நிறுத்துவதில்லை.
நாங்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம்; போராடுவோம்
எங்களிடம் என்னதான் விரும்புகிறீர்கள்? நாங்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்து, உங்களின் அவதூறை நியாயப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஒன்றை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். நான் ஒரு மதச்சார்பற்ற எழுத்தாளன். கடந்த 30 ஆண்டுகளாக ,அனைத்து வகையிலான பழமைவாதம், மதவெறிக்கு எதிராக உணர்வுப்பூர்வமாக எழுதி வருபவன் நான். கடந்த 10 ஆண்டுகால அனுபவம் என்ன? நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், ஊடுருவல் காரர்களாகவும், இந்துக்களுக்கு மட்டுமே உரிய செல்வ வளங்களை, வாய்ப்புகளை கொள்ளையடிப்பவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறோம். இதுதான் உங்களது பத்தாண்டு காலச் செயல்பாடுகள். பணிவோடு உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சங் பரிவாரங்கள் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்று அஞ்சி,திடீரென ஒரு நாளில், நாங்கள் அனைவரும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் கக்கும் விசத்துக்கு எதிராக, பெருமைமிகு இந்தியர்களுடன் இணைந்து உங்களை எதிர்த்துப் போராடுவோம். அரசமைப்புச் சட்டத்தின் அமிர்த காலத்திற்காகப் போராடுவோம். இந்த தேசத்தில், பல்லாயிரம் ஆண்டுக்கால எங்களின் வாழ்வனுபவம், உங்களின் நஞ்சுக்கு எதிரான விசமுறியை நிச்சயமாக வழங்கும். அது விரைவிலேயே நடக்கும் என்று நம்புகிறேன். இந்த தேசத்தின், பெரும்பான்மையான இந்துக்கள் வெறுப்பு ,இழிவான சூழ்ச்சிகள் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவர்கள். உங்களுக்கு நல்ல புத்தி வரும் என்று நம்புகிறேன். அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ,
இப்படிக்கு ,
தங்கள் உண்மையுள்ள,
ஸ்ரீ நாராயண குருவின் மண்ணில் இருந்து ஓர் இந்திய முஸ்லிம்.
நன்றி- வயர் இணைய இதழ் தமிழில் ம. கதிரேசன் கட்டுரையாளர்: கேரள மாநிலத்தவர். மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்தாளர். கலாச்சார விமர்சகர். அவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் - “ கடவுள் ஒரு கோமேனியோ அல்லது மோகன் பகவத்தோ கிடையாது” என்பதாகும்.