பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள ரூ.1,000ஐ விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவது பற்றி பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 பணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து இதர குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வரும் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள ரூ.1,000ஐ விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவது பற்றி பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லை என்று ரொக்கமாக ரூ.1000 கேட்கும் ரேசன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக தரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.