tamilnadu

img

ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகவில்லையாம்.... மதுரையில் முதல்வர் ‘புதுக்கதை’

மதுரை:
தமிழக அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் புலம்பினார்.
அதிமுக-அரசின் பதவிக்காலம் வெகு விரைவில் முடிவுக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக்கட்சிகளும் தயாராகிவருகின்றன. இந்தக் காலத்தில் அதிமுக-வின் ஊழல்கள், சாதனை என்ற பெயரில் “சொதப்பி” வரும் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதோடு அதற்கான ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கின்றன.இந்த நிலையில் மதுரையில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

மதுரை மாநகர மக்களின் நீண்ட காலக் கனவை தமிழக அரசு நனவாக்கியுள்ளது. மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், மதுரை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் 24 மணிநேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில்  சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கிடைக்கக் கூடியதிட்டத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டு முழுமையாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கி மதுரையிலுள்ள 100வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கக்கூடிய நிலையை அரசு உருவாக்கி வருகிறது. 1916-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், இடவசதி போதாமல் உள்ளது இதையடுத்து மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு புதியகட்டடம் கட்டி அதை திறந்து வைத்துள்ளேன்.மதுரை மாநகரில் பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரை-செட்டிக்குளம் உயர்மட்டப் பாலம் ரூபாய் 544.23 கோடி மதிப்பீட்டிலும், செட்டிக்குளம் - நத்தம் நான்கு வழிச்சாலை ரூபாய் 345.54 கோடி மதிப்பீட்டிலும், மதுரை வெளிவட்டச் சாலை வாடிப்பட்டி முதல் திருமங்கலம் வரை ரூபாய் 493.02 கோடி மதிப்பீட்டிலும், மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை ரூபாய் 659 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள சுற்றுச்சாலையை, விமான ஓடுதளத்திற்கு, சாலை கீழ்ப்பாலமாக அமைக்க ஆய்வுசெய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும்.தமிழக அரசால் நிறைவேற்றப்படும் இத்தனைத் திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்கிறார். நீண்ட காலமாக  தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளை கொண்டு தூர்வாரி பருவகாலங்களில் பெய்கிற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் சேமித்து வைக்கக் கூடிய ஒரு திட்டத்தை இந்த அரசுதான் உருவாக்கித் தந்திருக்கிறது.  மதுரை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, மதுரை புறநகர் பகுதிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளோம்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன்,  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி மக்கள்தொடர்புத்துறை யின் இருட்டடிப்பு வேலை நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்றுள்ளார். மதுரை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ள படத்தில் அவர் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் என்னவோதெரியவில்லை அவர்கள் அனுப்பியபடத்திற்கான குறிப்பில் சு.வெங்க டேசன் பெயரை தவிர்த்துவிட்டனர். என்னே நேர்மை?

;