tamilnadu

img

மழைக்காலம்; கானை நோய் தாக்குதல்: பால் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி

கால்நடைகளுக்கு ஏற்படும்  கால் மற்றும் வாயில் ஏற்படும் நோயின் காரணமாக  தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழை, பல பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனது, விவசாய உற்பத்தி குறைந்தது போன்ற காரணங்கள் பால் உற்பத்தி குறைந்ததற்கு காரணங்களாக கூறப்படுகிறது. கால்நடைகளுக்கு கால், வாய்ப்புண்  நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றதாக கால்நடைத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 41 லட்சம் லிட்டரிலிருந்து 32-34 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது.  சில மாவட்டங்களில் மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டதால்  பால் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறார் சென்னை ஆவின் மேலாளர் கே.எஸ்.கந்தசாமி. உற்பத்தி குறைந்தாலும் ஆவின் பால் வாங்குபவர்களுக்கு தடையின்றி பால் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, மாநிலத்தில் தினசரி பால் உற்பத்தி 2.1 கோடி லிட்டராக இருந்தது. அதில் 25 லட்சம் லிட்டர் பால் பண்ணைகள் பெற்றுள்ளன.  அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் சுமார் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்தது.  எஞ்சிய பாலை தனியார் பால் நிறுவனங்கள் தங்களது வணிக நோக்கங்களுக்காக கொள்முதல் செய்துள்ளன.  உணவகங்கள், டீக்கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இதர வணிக நிறுவனங்களுக்கு 35 லட்சம் முதல்  45 லட்சம் லிட்டர் பால் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்பட்டுள்ளது. சுமார் 60-62 லட்சம் லிட்டர் பால், நெய், பால் பவுடர், வெண்ணெய், இனிப்புகள் உள்ளிட்ட பிற பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் போது கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில்  பால் விற்பனை 1.2 கோடி லிட்டராகச் சரிந்தது. தற்போது அது 1.9 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள், கால்நடை வளர்ப்போரிடமிருந்து பெறும் பாலின் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளது. அத்தோடு பால் கொள்முதல் விலையையும் குறைத்துள்ளதாக மாடு வளர்ப்போர் கூறுகின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொள்முதல் விலையை மாற்றிக் கொள்கின்றன. ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 வழங்கும்போது, ​​தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.24 முதல் 27 வரை மட்டுமே வழங்குகின்றன என்கிறார் வேலூரைச் சேர்ந்த பால் பண்ணை விவசாயி எஸ்.கந்தவேல்.

மதுரை மாவட்ட நிலவரம்

தீக்கதிர் நாளிதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் பி.எஸ். முத்துப்பாண்டி, மழைக்காலத்தில் பால் உற்பத்தி குறைந்துவிடும். மற்றொரு காரணம் நோய் தாக்குதல். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியிருக்க வேண்டும். இந்தாண்டு தாமதமாகத் தொடங்கியதும் கால்நடைகள் உயிரிழப்புக்குக் காரணம். நோய் பாதித்த மாடுகள் எதிர்பார்த்த பாலைத் தராது.  கருமாத்தூர் பகுதியில் மட்டும் நோய்த் தாக்குதலுக்குள்ளாகி 11 மாடுகள் உயிரிழந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் குறைந்தது 200 மாடுகள் உயிரிழந்துள்ளன. ஆவின் நிர்வாகம் லிட்டர் பாலை ரூ.32-க்கு கொள்முதல் செய்வதாகக் கூறினாலும். பாலின் தன்மை, சத்து ஆகியவற்றைக் காரணம் காட்டி ரூ.27 முதல் ரூ.31 வரையே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது. மதுரை ஆவினில் 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.

1.97 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

கானை நோயால் மாடுகள் இறப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி நடராஜகுமாரிடம் திங்களன்று பேசியபோது, “மதுரை மாவட்டத்தில் கானை நோயால் எந்த மாடுகளும் இறக்கவில்லை. அப்படி இறந்திருந்தால் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்து கால்நடை மருத்துவர் உடற்கூராய்வு செய்திருக்க வேண்டும். அப்படியேதும் நடைபெறவில்லை.  மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 939 மாடுகள் உள்ளன. இதில் மூன்று வயதிற்குக் குறைவான கன்றுக்குட்டிகள், சினை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இயலாது. ஞாயிற்றுக்கிழமை (நவ.28-ஆம் தேதி வரை) ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 850 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும், மாவட்டத்தில் இடி-மின்னல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் மூன்று மாடுகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. அவைகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரப்பட்டுள்ளது என்றார்.


 

;