மதுரை,டிச.12- வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழக மெங்கும் வழக்கத்தைவிடப் பலமடங்கு கூடுதலாக மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வயல்வெளிகளையும் தோட்டப் பயிர்களையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், மதுரையின் தனித்தன்மையாகக் கருதப்படும் மதுரை மல்லிகை மலரின் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகவே மழை பாதிப்பு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைக்குப் பூக்களின் வருகைக் குறைவால் இந்த ஆண்டு பூக்களின் விலை பூக்கள் சந்தையில் சற்று அதிகமாகவே உள்ளது. அந்த வகையில், மதுரை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூபாய் 4000. இந்த விலையேற்றம் வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய விலை ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. தொடர் மழை, விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவால் இந்த விலை ஏற்றம் என்று விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். மல்லிகைப் பூ மட்டுமில்லாமல் அனைத்துவிதமான பூக்களின் விலையும் சற்று கணிசமாக உயர்ந்துள்ளது.