இடதுசாரிகள் என்ன செய்து விட்டார்கள்; கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டிற்கு தேவையா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதைச் சாதித்துவிட்டது என்பன போன்ற கேள்விகள், இன்றைய இளம் தலைமுறையை நோக்கி முதலாளித்துவ சமூக கட்டமைப்பால் ஏவி விடப்பட்ட அம்புகளாய் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த அம்புகளை உடைத்து வரலாற்றின் நீட்சியில் இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு எத்தனை மகத்துவமானது என்பதை இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவது தான் அக்டோபர் 28 அன்று நம்மோடு வாழ்ந்து மறைந்துள்ள தோழர் புஷ்பன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு. தனிமனித வரலாற்றை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாடியது இல்லை. ஆனால் தோழர்களின் தியாகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போற்றாமல் கடந்து சென்றதும் இல்லை. அந்தப் பட்டியலில் என்றென்றும் உயர்ந்து நிற்பவர் தோழர் புஷ்பன்.
1991 ஆம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட உலகமய தனியார்மயம் - தாராள மயக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் வலுவான போராட்டத்தை பதிவு செய்தது. இந்தக் கொள்கையை அமல்படுத்தினால் இந்திய கல்விக் கொள்கை வியாபாரம் ஆக்கப்படும்; எதிர்காலத்தில் கல்வி என்பது ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காத ஒன்றாக மாற்றப்படும்; தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு வழிவகுக்கும் என்கிற தேசபக்த உணர்வோடு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. இதனை ஏற்று 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் வலுவான எதிர்ப்பு போராட்டங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வந்தது. அன்றைக்கு கேரள மாநிலத்தை ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி, முதலாளி களுக்கு சேவகம் செய்தது; கல்வியைத் தனியார்மயம் ஆக்கியது. இதை எதிர்த்து ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தினர். கேரளம் முழுவதும் அமைச்சர்கள் எங்கு வந்தாலும் அவர்களை முற்றுகையிடுவது என்கின்ற போராட்டத்தை வலுப்படுத்தினர். கண்ணூர் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.வி.ராகவனை முற்றுகையிட கண்ணூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வீறு கொண்டு எழுந்தது. போராடிய இளைஞர்களையும் எதிர்கால இந்தியாவின் கோரிக்கையையும் அலட்சியப்படுத்தும் வண்ணம் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் அமைச்சர். அடக்குமுறையைக் கண்டு அஞ்சாத வாலிபர் சங்க தோழர்கள், போராட்டத்தில் முன்னால் எடுத்து வைத்த காலை ஒருபோதும் பின்னால் எடுத்து வைத்தது இல்லை என்று கூறி ஒவ்வொரு அடியும் முன்நோக்கிச் செல்லும் போது ஆறு தோழர்களின் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
ஒவ்வொரு குண்டும் சீறிப் பாய்ந்த போதும் அதைக் கண்டு துளிகூட அஞ்சிடாத தோழர்கள் தோட்டாவை விட வேகமாக சீறிப்பாய்ந்தனர். இதில் ஐந்து தோழர்கள் உயிரிழந்தனர். கல்வி வியாபாரமாக்கப்படு வதை எதிர்த்து இந்தியாவில் நடந்த முதல் வீரஞ்செறிந்த போராட்டம் இதுவாகத்தான் இருக்கும். 5 தோழர்கள் ரத்த வெள்ளத்தில் சரிய, துப்பாக்கிக் குண்டை முதுகெலும்பில் வாங்கிய ஆறாவது தோழர் புஷ்பன் உயிர் தப்பினார். ரத்த சாட்சியாக உயிரிழந்த ஐந்து தோழர்களின் தியாகம் எந்த அளவிற்கு போற்றப்பட வேண்டுமோ அதே அளவிற்கு தோழர் புஷ்பன் அவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டிய ஒன்றாக மாறியது. தோழர் புஷ்பன் அவர்களின் உடலில் உயிர் இருக்கும்; ஆனால் கழுத்துக்கு கீழே பாதம் வரை எந்த உறுப்பும் செயல்படாது என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த 30 ஆண்டுகாலம், படுத்த படுக்கையாகவே தனது போராட்ட வாழ்க்கையை நடத்தி வந்தார். கட்டிலை விட்டு அசையவே முடியாத ஒரு தோழர் 30 ஆண்டு காலம் வாழ்ந்து வந்திருக்கிறார் என்று சொன்னால், அவருக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படியெல்லாம் கவனித்திருக்கும் என்பதை உணரும் போது, மெய்சிலிர்க்கிறது.
கண்ணூர் மாவட்டம் என்பது, தியாக வீர வரலாற்றின் சாட்சியாக, மார்க்சிஸ்டுகளின் கோட்டையாக திகழும் மாவட்டங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி உறுப்பினர்கள் ஒரு முறையாவது அந்த மாவட்டத்திற்கு சென்று கட்சிக் கிராமங்களை பார்வையிட வேண்டும் என்கிற ஆசை கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செல்லும் தோழர்கள், புஷ்பனின் வீட்டிற்குச் சென்று அவரது கரத்தை பிடித்து தனது கரத்தை உயர்த்தாத தோழர்கள் யாரும் இல்லை. அந்த மகத்தான தோழர் புஷ்பன் நம்மை விட்டு மறைந்திருக்கிறார். இன்றைய இளம்தலைமுறை வாழ, தனது இளம்பருவத்தை முழுவதும் படுத்த படுக்கையில் அர்ப்பணித்த அந்த தியாக வரலாற்றை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் என்றென்றும் உயர்த்திப்பிடிக்கின்றன. இன்றைய இந்தியாவில் காசு இருப்ப வருக்கு ஒரு கல்வியும் காசு இல்லாதவருக்கு ஒரு கல்வியும் உருவாக்கப்பட்டு கல்வியின் பெயரில் மாணவச் செல்வங்கள் செத்து மடிவதை தடுக்கவே, நமது தோழர்கள் அன்றைக்கே இந்தப் போராட்டத்தை தொடக்கி தனது இன்னுயிரையும் நீத்திருக்கின்றனர்.
“போராட்டங்கள் எங்களால் துவங்கப் பட்டது அல்ல; அது எங்களோடு முடிந்து போவதும் அல்ல” என்று சொன்ன மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் (செப்.27) மாவீரன் புஷ்பன் மறைந்திருக்கிறார். பகத்சிங்கையும் புஷ்பனையும் நெஞ்சில் ஏந்தி கல்வி வியாபாரத்துக்கு எதிரான போராட்ட வீதியை விரிவாக்குவோம்!