ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தை கடந்து பாகலூர் செல்லும் வழியில் வலது புறம் ஒரு சாலையில் பிரிந்து, 20 நிமிட நேரப் பயணத்தில் உள்ளது கெலவரப்பள்ளி அணை. கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் அதே மலைக் குன்றில் தான் தென்பெண்ணை ஆறும் உருவாகிறது. இது 432 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 112 கி.மீ, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ, திருவண்ணாமலை, வேலூரில் 34 கி.மீ, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ நீளத்துக்கு பாய்ந்து, இறுதியில் கடலூர் அருகே வங்கக் கடலில் சங்கமிக்கும் தென் பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 14,449 சதுர கிலோ மீட்டராகும். அதன் குறுக்கே 13.5 உயரமும் 105.25 மீட்டர் அகலமும் கொண்ட அணை ஒன்று கெலவரப்பள்ளியில் கட்டி நீர் தேக்கி வைத்துள்ளனர். இது ஓசூர் மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பரந்து விரிந்து கிடக்கும் இந்த அணை, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்டது. ஓசூர் பரபரப்புக்கு ஓய்வு கொடுக்கும் இடமாக இது இருக்கிறது என்பதால் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அணைக்கு செல்ல 5 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
அணை பாதுகாப்பு, புனரமைப்பு பணிகளுக்காக தற்போது அணையின் நீரை தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு திறந்துவிட்டு அணைக்கு வரும் நீரை படிப்படியாக குறைத்துள்ளனர். இதனால் அணை மற்றும் பூங்காவை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. நீர் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது, அணையின் பயன்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம் என்று பார்வையிட்டோம். சாலை மற்றும் அணையில் 7 மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நீர்வரத்து இல்லை என்றாலும், ஆற்றில் குறைந்த அளவே இருக்கும் தண்ணீரை ரசாயனம் கலந்த கரும்பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் நுரை மூடியுள்ளது. அந்த நுரை காற்றில் பறந்து விளையாடுகிறது. மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நிற்க முடிகிறது. சிறிது நேரம் ஓய்வெடுக்க பூங்காவுக்கு செல்லலாம் என்றால் அதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. தேடித் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓங்கி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள் என்று புதர்மண்டி கிடைக்கிறது. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதற்கு எதுவும் இல்லை. சிறிது தூரம் நடந்து சென்றோம். விவசாயி ஒருவரை சந்தித்தோம். மழைக்காலத்தில் 40 முதல் 45 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த நேரத்தில் உபரி நீரை வெளியேற்றுவார்கள். அது கிருஷ்ணகிரி அணைக்கு சென்று அங்கிருந்து சாத்தனூர் வழியாக சென்றுவிடும். ரசாயனக் கலவைகள் கலந்து உள்ள இந்த அணையின் நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. பயன்படுத்தினால் மண் வளம் பாதிக்கும். காய்கறிகள், கீரைகள், நிறம் மாறி வருகின்றன. மலர் சாகுபடியும் செய்ய முடியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தினார்.
பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக கலக்கிறது. போதாக்குறைக்கு ஓசூர் பிரிமியர் மில்லின் கழிவுகள் நேரடியாக கெலவரப்பள்ளி அணையில் விடப்படுகிறது. இதன் விளைவு அணையில் மீன் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாசடைந்த இந்த நீர் அரையும் குறையுமாக சுத்திகரிக்கப்பட்டு பல கிராமங்களுக்கு குடி தண்ணீராக வழங்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் தேங்கி நிற்கும் நுரையை குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுகின்றனர். மேலும், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நுரை பொங்கும் நீரை வேடிக்கை பார்க்கத் திரண்டு வருகின்றனர். பலர் செல்போனில் செல்பி எடுத்துச் செல்கின்றனர். கர்நாடக மாநில தொழிற்சாலைகள், வீடுகளின் கழிவுகள் ஆற்றில் நேரடியாக கலப்பதை தமிழ்நாடு முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணை நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
- சி. ஸ்ரீராமுலு