tamilnadu

img

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தால் தைப்பொங்கல் முதல் மதுரை-ஆண்டிபட்டி இடையே ரயில் சேவைக்கு வாய்ப்பு....

மதுரை:
மதுரை-போடி அகல ரயில் பாதையில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட் டது. இதையடுத்து உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மதுரை-போடி இடையே ரூ.450 கோடியில் 90 கி.மீ., தூரத்துக்கு அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி முதல் போடி வரை ஆறு பெரிய பாலங்கள், 130 சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் 40 முதல் 50 அடிஉயரம் வரை இருந்த பாறைகள் அகற்றப்பட்டு தண்டவாளம் அமைக்கப்பட்டுஉள்ளது.

ஏற்கனவே மதுரை-உசிலம்பட்டி பாதையில் 2020 ஜன. 24-ஆம் தேதி ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையிலான பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது. முதற்கட்டமாக உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே டிசம்பர் 11-ஆம் தேதி ரயில் இன்ஜினை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து மதுரைக் கோட்ட மேலாளர் ஆய்வு நடத்த வேண்டும். அவர் ஆய்வு செய்து விட்டுவேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது என ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திற்கு கடிதம் அளிக்க வேண்டும். பாதுகாப்பு ஆணையர் ரயில் பாதையை டிராலியில் சென்று ஆய்வு செய்வார். அவர் முழுதிருப்தி என சான்றிதழ் அளிக்க வேண்டும்.அதன் பின்னரே பயணிகள் ரயில் இயக்கமுடியும்.

குறிப்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் தேதியைப் பெறுவதில் தான் சிரமம் எனக் கூறும் விஷயமறிந்த ரயில்வே ஊழியர்கள், “மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனிமக்களவை உறுப்பினர் இரவீந்திரநாத் குமார், விருதுநகர் மக்களவை உறுப்பினர்மாணிக்கம் தாகூர் ஆகியோர் அழுத்தம்கொடுத்தால் தைப்பொங்கல் முதல் பயணிகள் ரயிலை நிச்சயம் இயக்கமுடியும்’ என நம்பிக்கை தெரிவித்தனர்.மதுரை-போடி அகல ரயில் பாதையின் (90 கி.மீட்டர்) திட்ட மதிப்பீடு ரூ.450கோடியாகும். ஆண்டிபட்டி-தேனி இடையிலான பணிகள் 2021 பிப்ரவரியிலும், தேனி-போடி இடையிலான பணிகள் 2021 செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும்என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண ரயில்களை இயக்க வேண்டும்
சனிக்கிழமை நமது செய்தியாளரிடம் பேசிய ரயில்வே ஊழியர் ஒருவர், “கொரோனா தளர்வுகளுக்குப் பின் தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மதுரை-இரமேஸ்வரம், மதுரை-திருச்சிராப்பள்ளி, மதுரை-செங்கோட்டை இடையே சாதாரண கட்டணத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. உதாரணத்திற்கு மதுரை-இராமேஸ்வரம் இடையே சாதாரண கட்டணத்தில் ரயில்இயக்கினால் ரூ.30-இல் இராமேஸ்வரம் சென்றுவிடலாம். தற்போது விரைவுரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் ஒரு பயணி ரூ.85 வரை செலவழிக்கவேண்டியுள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் ரூ.130 வரை செலவழியும். ரயில்வே குறிப்பாக விரைவு ரயில்களில் பெண்களுக்கென தனிப்பெட்டிகளும் இல்லை. எனவே ரயில்வே நிர்வாகம் சாதாரண கட்டணத்தில் பயணிகள் ரயிலை இயக்க முன்வர வேண்டும் என்றார்.