என் தியான குருவிடம் கேட்டேன்: “குருவே தியானம் என்றால் என்ன?’’ குரு சொன்னார்: “தியானம் என்பது கடலின் ஆழத்திலிருக்கும் அமைதிக்குத் திரும்புதல் அப்போது உன் நிழல் நிலத்தில் விழும் ஓசை உனக்குக் கேட்கவேண்டும்’’ குருவிடம் கேட்டேன்: “குருவே கடலுக்கு மேலாக ஒரு மண்டபத்தில் அமர்ந்து நான் தியானத்தில் அமர்ந்தால் கடலின் அந்த அமைதியை நான் உணர இயலுமா?’’ குரு சொன்னார்: “நீ கடலின் ஆழத்திலிருக்கும் அமைதியை உணர கடலே உனக்குத் தேவை இல்லை ஒரு க்ளாஸ் தண்ணீரின் ஆழம்கூடபோதும்’’ குருவிடம் கேட்டேன்: “குருவே கடற்கரையில் தியானிக்கும்போது கடற்படைகள் சுற்றிலும் ரோந்து வரலாமா? ஆகாயத்தில் விமானப்படைகள் ஓவ்வொரு நொடியும் கண்காணிக்கலாமா? நகரத்திற்குவரும் எல்லாச் சாலைகளும் மூடப்படலாமா? 23 கேமராக்கள் கண்களைச் கூசச் செய்யலாமா? இருபத்தையாயிரம் காவலர்களின் படை சூழ்ந்திருக்கலாமா? ஆயுதம் ஏந்திய கமாண்டோகள் பாறைகளில் நின்று அலைகளைக் குறிபார்க்கலாமா?’’ குரு சொன்னார்: “தியானம் என்பது உன் மனதின் அமைதியின்மைக்கு எதிரான யுத்தம் அது உன் தனிமையின் மலருக்கு திரும்புதல் அது உன் அந்தரங்கத்தின் வெளிச்சத்திற்கு திரும்புதல் வேறு யாருக்கோ எதிரான யுத்தமாக ஒரு தியானம் மாறினால் அது தியானம் அல்ல மாந்ரீகம் வசிய மருந்துகளின் தொழிற்கூடம்’’ நான் எனது தியான குருவை வணங்கி விடைபெற்றேன் - மனுஷ்ய புத்திரன்