மதுரை:
மதுரை கொட்டாம்பட்டி பகுதியில் விளை நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டி, உடப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் வழியாக சென்னை எண்ணூரில் இருந்து மதுரை மாவட்டம் கப்பலூருக்கு சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவில் எரிவாயு (கேஸ்) குழாய் கொண்டு செல்வதற்காக ஐஓசி நிறுவனம் குழாய்களை அமைத்து வருகின்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் அலங்கம்பட்டியில் ஐஓசி நிறுவனம் நெல் வயல்களில் குழாய் பதிக்க முற்பட்டபோது கிராம மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அன்றைக்கு போராடிய மக்களுடன் கொட்டாம்பட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பணியை நிறுத்தினர். ஆனாலும், ஐஓசி நிறுவனம் தனது பணியை தொடர முயற்சித்து வருகிறது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அடக்கிவீரணன், தாலுகாக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.மணவாளன், எஸ்.ஜெயராமன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்துப் பேசினர். இந்த கோரிக்கை தவிர இதர கோரிக்கைகள், மக்களின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் பார்வையிட்டனர்.
பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொட்டாம்பட்டி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்அமைக்கக்கூடாது. விளை நிலங்கள்வழியாக எரிவாயு குழாய் அமைக்கும்பணியை ரத்து செய்து, நெடுஞ்சாலை வழியாக பணிகளை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நிலம் கையகப்படுத்தப் பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை, நெல், கரும்பு, வாழை மற்றும்பயறு வகைகளுக்கு (குறைந்த பட்சம் ஏழு மடங்கு) வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்ட பின் ஏதேனும் விபத்துகள் நேரிட்டால் அதிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பது எப்படி? பயிர்கள் சேதமடைந்தால் அப்போது எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பதை நிறுவனமும், அரசும் தெளிவுபடுத்த வேண்டும். இப்பகுதி விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையான அவர்களின் உயிர்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உடனடியாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி விவசாயிகளுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும். பலன் தரும் மரங்களான தென்னை, வாழை, மாமரம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வெட்டப்படுகின்றன. மரத்தின் ஆயுட் காலத்தையும் மரங்களின் பலனளிக்கும் தன்மையை யும் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் போராட்டம்
தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், “ இந்திய வரலாற்றில் உழவர் சமூகம் இவ்வளவு எழுச்சி கொண்ட காலம் இப்போதுதான். பாரத் பந்த் தோல்வி என்பதெல்லாம் அவர்களின் கனவு. விவசாயிகள் கோரிக்கை வெற்றி பெறும். கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் தேசத்தை காக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அது வெற்றி பெறும் என்றார்.
***************************
சோழர் காலமும் மோடி காலமும்
பிரதமர் மோடி, “சோழர் காலத்திலேயே நமது ஜனநாயகம் செழிப்போடு இருந்தது என்று கூறுகிறாரே எனக் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன், “குடவோலை முறைப்படி ஓட்டெடுப்பு நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது சோழர் காலம். ஓட்டெடுப்பே நடத்தாமல் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது மோடி காலம்” என்றார்.விவசாயிகளுக்கு குறைந்தது ஏழு மடங்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விவசாயிகளின் நிலப்பரப்பு கணக்கீட்டில் உள்ள வித்தியாசங்கள் சரி செய்யப்படும் என்றும், இதுவரை எண்ணெய் குழாய்கள் பதித்துள்ள பகுதிகள், வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உள்ளிட்ட துல்லியமான விவரங்களை வழங்கவும் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தெரிவித்தார்.