tamilnadu

img

‘பொய்யை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பாஜக’ - கே.பாலகிருஷ்ணன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய நிகழ்ச்சியில் நானும்  இருந்தேன். அவர்  மனுநீதியில் சொல்லப்பட்டி ருப்பதை சுட்டிக்காட்டி பேசியதை வெட்டித் திரித்து, இந்துக்களுக்கு எதிராகப் பேசிவிட்டார் என்று வன்முறையைத் தூண்டும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜக பொய் பேசும் கட்சி மட்டுமல்ல, பொய்யைப் பிரச்சாரம் செய்யும் கட்சி மட்டுமல்ல, பொய்யை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகவே பாஜக உள்ளது. ஒரு பொய்யை மக்களிடம்  விதைத்துவிட்டால் அது மக்களிடம் வேகமாகப் போய்ச்சேர்ந்து விடும், அது உண்மையா, இல்லையா என்று தெரி வதற்கு பத்து பதினைந்து நாட்கள் ஆகிவிடும்.

பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள் இல்லையா?

பாஜக - ஆர்எஸ்எஸ், சங் பரிவாரக் கூட்டம், ஒன்றுபட்ட இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மதவெறியைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கமே மதச்சார்புள்ள தாக மாறிவிட்டால் என்ன நிலை ஏற்படும்? மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தை களை அரசியல் சாசனத்தின் முகவுரையில் இருந்துநீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். அப்படிச் செய்தால், இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்?  உண்மையில் பாஜக இந்துக்களுக்கு ஆதர வான கட்சி என்றால், இப்போது  பெரும்பான்மை யாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது இந்துக்கள் தானே? பெட்ரோல், டீசல், சமையல்  எரிவாயு விலை உயர்வினால் பெரும்பான்மை யாக பாதிக்கப்படுவோர் இந்துக்கள் இல்லையா? இவர்கள்  கடைப்பிடிக்கும் பொரு ளாதாரக் கொள்கையால் வேலையின்மையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களில் பெரும்பா ன்மையானவர்கள் இந்துக்கள் இல்லையா? இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை என அனைத்து மக்களையும் ஓட்டாண்டி ஆக்கிவிட்டு கார்ப்பரேட் ஆதரவு அரசாக மாற்றிவிட்டது பாஜக. 62 சதவிகித பெண்கள்  இரத்த சோகைக்கு ஆளாகியுள்ள னர். 57 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு இல்லை. இவர்களில் பெரும்பான்மை யானோர் இந்துக்கள் இல்லையா? 

தொழில் நெருக்கடிக்கு யார் காரணம்?

கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தொழில்பெருகிவிட்டதா? நாடு வளர்ச்சி அடைந்துவிட்டதா?  மேற்குமாவட்டங்களில் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், விசைத்தறி தொழில் நெருக்கடியில் மூழ்கியதற்கு யார் காரணம்? பருத்தி நூல் விலை உயர்வுக்கு, இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்யாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் செய்து கொள்ளை லாபம் ஈட்டியதுதானே காரணம். ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்த ஒரு கண்டி பருத்தி இப்போது ரூ.1லட்சத்து 10 ஆயி ரத்துக்கு விற்பனை ஆகிறது. 

அதானி, அம்பானி செல்வக்குவிப்பு

இன்னும் 3 ஆண்டுகளில் கோவை ரயில் நிலை யம் அம்பானி ரயில் நிலையமாக மாறினால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. பல  ஆண்டு காலம் இந்திய மக்களின் வியர்வையில், ரத்தத்தில் உருவான எல்ஐசி நிறுவனம் ரூ.40 லட்சம் கோடி  சொத்து மதிப்பு உள்ளதை, தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலர் ரூ.82 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் புள்ளி கள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு ரூ. 7 லட்சம்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளா தாரமும் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அம்பானி சொத்து மதிப்பு ரூ.7 லட்சம் கோடி,  அதானி சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதானியின் ஒரு நாள் நிகர லாபம் ரூ.110 கோடி. உலகில் எந்த நாட்டிலும் இந்த லாபம் கிடைக்காது. இதனால் விலைவாசி உயர்வு, வேலை யின்மை பிரச்சனைகள் பற்றி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சத்தில்தான், அதை  திசை திருப்பும் வேலையை பாஜக - ஆர்எஸ்எஸ் செய்கிறது.

நீதியின் நிலை என்ன?

அதிகாரிகள் தவறு செய்தால், நாடாளுமன்ற, சட்டமன்ற கதவுகளைத் தட்டலாம். நாடாளுமன்றம் தவறு செய்தால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம். ஆனால் நீதிமன்றமே தவறு செய்தால் எங்கே போவது? பாஜக ஆட்சி யில் நீதிமன்றமே சுயேச்சைத்  தன்மையை இழந்துநிற்கிறது. 1991 வழிபாட்டு தலங்கள் பற்றிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள்.  அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ்க்கு என்ன வேலை? காந்தியை  சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள். கோட்சேவுக்கு சிலை வைத்து பாராட்டு சொன்னவர்கள் ஆர்எஸ் எஸ்காரர்கள். காந்தி படுகொலை காரணமாகவே ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அவர்கள் நடத்தும் பேரணிக்கு அனுமதி தருகிறது நீதி மன்றம். நீதிமன்றம் கூட காவிமய  சாய்மானம் கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மதச்சார்பற்ற பேரியக்கம்

பாஜக எனும் பேயை வீட்டுக்கு அனுப்பும் மகத்தான பணியில் மதச்சார்பற்ற அனைத்து  சக்திகளும் ஒன்றிணைந்து பேரியக்கம் உரு வாக வேண்டும். இந்தியா இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. சற்று  முன்னதாக விழித்துக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பாஜகவின் சீர்குலைவு  வேலையை இங்கே அனுமதிக்க மாட்டோம் என்று எல்லா தேர்தல்களிலும் மண்டியிடச்செய்து, மண்ணைக் கவ்வச் செய்த ஆத்திரத்தில் தான், முதல்வர் இங்கே நடமாட முடியாது என்று பாஜகவின் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அக்டோபர் 2ஆம் தேதி சமூக நல்லி ணக்கத்தைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் நடத்தும் மனித சங்கிலி இயக்கத்தில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் கைகோர்க்க வேண்டும். திமுக அரசு செய்யும்  நல்ல காரியங்களை நாங்கள் வரவேற்போம். அதே சமயம் சுட்டிக்காட்டவேண்டிய  விசயங்களை சுட்டிக்காட்டத் தவறமாட்டோம். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய இயக்கமாக வலுப்பெறச் செய் வதுதான் இந்த மண்ணில் மதவெறிக்கு நிரந்தரமாக முடிவு கட்டும்.

கோவையில் நடைபெற்ற தீக்கதிர் விழாவில்  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து... 

;