tamilnadu

img

தோக்கமூரில் தீண்டாமைச் சுவர் அகற்றம்

திருவள்ளூர், அக் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர்போராட்டத்தால் கும்மிடிப்பூண்டி அருகே தீண்டாமை சுவரை அரசே அகற்றியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் அருகில் உள்ளது தோக்கமூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட எல்.ஆர்.மேடு, தோக்கமூர், எம்.ஆர்.கண்டிகை ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் தோக்கமூர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் ‘எல்’ வடிவம் கொண்ட ஒரே வீதியில் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக விவசாயத்தையே நம்பி பிழைப்பு நடத்தி வரும் இவர்களுக்கு சொந்தமாக விளைநிலமோ, வீட்டுமனைகளோ எதுவும் இல்லை.  விவசாய கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தோக்கமூர் கிராமத்தின் அருகிலேயே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர்  அரசு புறம்போக்கு நிலத்தை இப்பகுதியை சேர்ந்த ஆதிக்கசாதியினர் இது திரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், தலித் மக்கள்  பயன்படுத்தக் கூடாது என்று  2015  ஆம் ஆண்டு குடியிருந்த  வீட்டை இடித்து தள்ளினர். மேலும்,  அப்பகுதி மக்களை நிர்பந்தப்படுத்தி குடியிருப்பை ஒட்டியே  10 அடி உயரத்திற்கு 90 மீட்டர் நீளத்திற்கு தீண்டாமை சுவரை எழுப்பி அதன் மீது  கண்ணாடி துண்டுகள் பதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதனை தொடர்ந்து,  2021  மார்ச் 24 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் வி.பி. நாகை மாலி, துணைத் தலைவர் எம். சின்னதுரை கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் மனு கொடுத்தனர்

கடந்த மே மாதம்  திருவள்ளூரில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, முதல்வருக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார். தீண்டாமை சுவரை உடனடி யாக அகற்றவில்லை என்றால்  அக்டோபர் 6 அன்று போராட்டத் திற்கு தேதி அறிவிக்கப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்திருந்தது. இந்நிலையில் திங்களன்று (அக்.3) அதிகாலை யில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தீண்டாமை சுவரை இடித்து தள்ளினர். அப்போது, ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு எதிராக நடப்பட்ட சிமெண்ட் கம்பங்களையும் அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கான கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அந்த பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரவேற்பு

தோக்கமூர் தீண்டாமை சுவரை மாவட்ட நிர்வாகம் அகற்றியதை வரவேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 91 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா உடனடி யாக வழங்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு தொடர வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியிருக்கிறார்.