tamilnadu

img

மாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....

குலசேகரம்:
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட மாடத்துகோணம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் 15க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். பலர் உயிரிழந்துவிட்டனர். வெள்ளியன்று (ஜன.22) புற்றுநோய்க்கு பலியானவர் அமுதா (41), இதே பகுதியில் சுமார் பத்து ஆண்டுகளாக இந்த பாதிப்பு நீடித்த போதிலும் சுகாதாரத்துறையின் கவனத்தில் வராதது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகும்.

எலும்பு புற்றுநோயால் நொறுங்கிப்போன அமுதாவின் எலும்புகள் அவரை அசைய விடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் செயலிழந்த நிலையில் கணவர் கோபியும், பதினொன்றாம் வகுப்பு மாணவியான மகள் அபிநயாவும், 9 ஆவது வகுப்பில் படிக்கும் மகன் சிவதர்ஷனும் குடும்பத்தினரும் தினமும் மரண வலியுடன் துடிக்கும் அமுதாவைப் பார்த்து கண்கலங்கினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் செல்லம்மா (65), இவரது மருமகள் செவிலியரான மேரி ஸ்டெல்லா (45) இப்போது புற்றுநோய் பாதித்த மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.

பெயர் சொல்ல விரும்பாத முன்னாள் ராணுவ வீரர் கீமோதெரபி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். நேசமணி, ராசப்பன், தயா, மீனாட்சி, லீலா.. என புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் பட்டியல் நீள்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் (65) என்பவர் புற்றுநோய்க்கு பலியான முதல் நபராக இங்கு வசிக்கும் மக்கள் குறிப்பிட்டனர். சிலர் புற்றுநோய் என்பதை புற உலகம் அறியாமலேயே பலியாகி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேரி ஸ்டெல்லா கூறுகையில், நெய்யூர் ஆஸ்பத்திரியில் அமுதா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா, அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை நீக்கினார். இரண்டாவது முறையாக வந்த எலும்பு புற்று நோயை தாக்குப்பிடிக்காம இறந்துட்டா. நானும் நெய்யூர்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். எனக்கு மார்பகப் புற்று. ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வடிவங்களில் புற்றுநோய் வெளிப்பட்டுள்ளது. ஒரு சிறிய பகுதிக்குள் வீட்டுக்கு வீடு புற்றுநோய் பாதிப்பு உள்ளதால் மண்ணையும் தண்ணீரையும் பரிசோதனை செய்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சசி கூறுகையில், இந்த பகுதியில் வீட்டுக்கு வீடு திறந்தவெளி கிணறு உள்ளது. கிணற்றுத் தண்ணீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறார்கள். நிலத்தடி நீரில் ரசாயன கலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சசிகுமார் கூறுகையில், எங்களது அமைப்பு சார்பில் அருகில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோ மருத்துவக்கல்லூரியின் உதவியுடன் முதல்கட்ட ஆய்வை உடனடியாக நடத்த உள்ளோம் என்றார். 

சுமார் பத்தாண்டுகளாக புற்றுநோய் சாவுகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. அரை கிலோமீட்டர் சுற்றளவில் இன்றும் 15 க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுகாதாரத்துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் உரிய முறையில் ஆய்வு நடத்தி காரணத்தை கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை பாதுகாக்கவும், வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான எஸ்.சி.ஸ்டாலின்தாஸ்.

தனது 92 ஆவது வயது வரை புற்று நோயாளிகளை பாதுகாக்க முழுமையாக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா கடந்த வாரத்தில் தான் நம்மை விட்டு பிரிந்தார். தனிநபராக ஒருவர் சாதித்ததை விட அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால் பலமடங்கு சாதிக்கவும், மனித உயிர்களை பாதுகாக்கவும் முடியும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அதற்கு முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

                                                                    *****************
கேள்விக்குறியாக எதிர்காலம்

கூலித் தொழிலாளியான கோபி கூறுகையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய்க்காக திருவனந்தபுரம் ஆர்சிசியிலும் நெய்யூர் மிஷன் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு அமுதாவை கொண்டு சென்றோம். அறுவை சிகிச்சைக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தினோம். அதன் பிறகு ஓராண்டுக்கு முன்பு எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டார். ஹீமோ தெரபிக்காக2 லட்சம் ரூபாய்க்கு மேல்  செலவு செய்தோம். ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன்பட்டு விட்டோம். பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

;