tamilnadu

img

ஒப்பற்ற தலைவர் தோழர் என்.வரதராஜன்

விடுதலைக் காற்றுக்காக இந்தியா போராடிக் கொண்டிருந்த காலம். எந்தவிதமான சாலை வசதியோ போக்கு வரத்து வசதியோ இல்லாத கம்பிளியம்பட்டி கிராமத்தில் தான் தோழர் என்.வரதராஜன் சாதாரண மில் தொழிலாளியாக அள்ளிகட்டிய முடியோடு நமக்கு கிடைத்தார். பின்னர் பாட்டாளி வர்க்கத்தின் உன்னத தலைவராக என்.வி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட தோழர் என்.வரதராஜன் உயர்ந்து நின்றார்.பல ஆண்டுகள் சிறை வாழ்க்கை. கால்களை நீட்டியும் மடக்கியும் அமர முடியாமல் மிகுந்த சிரமத்தோடு காவல் துறையினர் கொடுக்கும் அனைத்து சிரமங்களையும் ஏற்றுக்கொண்டு தான் என்.வி சிறைவாழ்க்கையை அனுபவித்தார். உலக அளவிலும் இந்தியாவிலும் நடை பெற்றுக் கொண்டிருந்த அரசியல் நிகழ்ச்சி போக்குகள் மக்களை குறிப்பாக இளம் தலைமுறையை ஈர்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் தோழர் என்.வி. 1942ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பி னரானார்.என்.வி அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உரிய ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதில் நிகரற்றவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முன்னதாகவே அங்கிருப்பார். தலைவராக இருந்தால் நேரம் தவறாமை மிகவும் முக்கியம் என்று அடிக்கடி சொல்வார்.எந்தச் சூழலிலும் தேவையான கருத்து களை தவிர ஒரு சொல் கூட அவரிடமிருந்து அதிகமாக வராது.தோழர் என்.வி அவர்கள் வசித்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண்கள் ஜாக்கெட் அணிய தடை செய்யப்பட்டிருந்தது.


பெண்கள் ஜாக்கெட் அணிய உரிமை வேண்டும் என விவசாயிகள் சங்கம் முதன்முதலாக கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை கேட்டவுடன் பெண்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். பின்னர் பெண்கள் மத்தியில் தொடர்ச்சியான கூட்டங்கள் நடத்தி பெண்களின் சுயமரியா தைப் பிரச்சனை என்பதை புரியவைத்த பின்பு அந்த கோரிக்கை வெற்றி பெற்றது. இதற்கு மிகவும் முக்கியமானவர் தோழர் என்.வி.பிரெஞ்சு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த புதுச்சேரியிலிருந்து வந்த ஒரு முதலாளி மூலமாகத்தான் தோல் பதனிடும் தொழிற்சாலை திண்டுக்கல்லுக்கு வந்தது. அதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்களும் தொழிலாளர்களாக வேலை செய்தனர். தோல் பதனிடுவது என்பது சாதாரண தொழில் அல்ல. கொதிக்கும் சுண்ணாம்பு குழிக்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும். அவ்வாறு வேலை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி இரண்டணா (இன்றைய மதிப்பில் 12 காசு). அந்த கூலியை பெறுவதற்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இதை கண்டு பொங்கியெழுந்த என்.வி மற்ற தலைவர்களுடன் சேர்ந்து அவர்களை இணைத்து போராடி சம்பள உயர்வுடன் போனஸ் பெற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு வருடமும் பாஸ்கா திருவிழாவின் போது அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.


தற்போது நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. 1973 இல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதன்முறையாக அதிமுக போட்டியிட்டது. அக்கட்சியை அன்றைய அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. புதிதாக உருவான அதிமுக அமைப்பு பலம், ஊழியர்கள், திட்டமிட்ட வேலைகளை இல்லாத காரணத்தால் அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. திண்டுக்கல்லில் முதல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. தேர்தல் பணிகளுக்கு என அதிமுக தலைமை வழங்கிய நிதியினை முறையாக செலவழித்து, மீதமிருந்த தொகையை சென்னை சென்று உரிய ரசீது கணக்குகளுடன் எம்ஜிஆரிடம் ஒப்படைத்தார் தோழர் என்.வி. அந்த நேர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து போன எம்ஜிஆர், அதற்கு பரிசாக தோழர் என்.வி அவர்களுக்கு தங்கச்சங்கிலியைப் பரிசாக அளித்தார். அதை வாங்க மறுத்தார் தோழர் என்.வி. அத்தகைய நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணம் தோழர் என்.வரதராஜன். அவரது அடிச்சுவட்டில் பயணிப்போம்!- ஜி.ராணி

;