tamilnadu

தாக்குதலுக்கு ஆளான போக்குவரத்து தொழிலாளர்கள் மீதே வழக்கு

 சென்னை,டிச .22 சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது மாணவர்கள் மற்றும் சமூகவிரோதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான  தொழி லாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து செய்யவேண்டும் என்று  அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயா னந்தம் முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் 22 ஆயிரம் பேருந்துகள்  இயக்கப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் பேருந்து இயக்கத்தினை படிப்படியாக குறைத்து 19 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கியது. தங்களுடைய அரசு பொறுப்பேற்ற பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்திய பேருந்து வழித்தடங்களை மீண்டும் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை எங்களது சங்கத்தின் சார்பில் வரவேற்கின்றோம். மேலும் அதிமுக ஆட்சி யில் 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்து வதற்கு முன்பு தமிழகம் முழுவதும் அரசு பேருந்தில் தினசரி இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்தனர். பஸ் கட்டண உயர்வுக்கு பின்னர் இது 1.20 கோடியாக குறைந்தது.

தங்களுடைய அரசு பொறுப்பேற்ற பின்னர் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட தாலும் பெண்கள் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவச பயணம்  என்ற அறிவிப்பின் மூலம் அரசு பேருந்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதே போல் பெண்கள் இலவச பயணத்தினால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய தமிழக அரசு ஆண்டிற்கு ரூ.1348 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1.30 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு பேருந்துகளில் தினசரி 30 லட்சம் மாணவர்கள் பயணிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்த பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.  

தொடரும் மிரட்டல்

பள்ளி செல்லும் மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டும், பேருந்தின் மேற்கூரைக்கு மேல் ஏறி சாகசம் செய்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அவர்களை பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் எச்சரிக்கை செய்தும் அதனை பள்ளி மாண வர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசுவதும், அடிப்பதும் பேருந்து கண்ணாடியை உடைப்பது, பஸ் பயணிகளை மிரட்டி தகராறு செய்வது போன்றவைகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கடந்த டிச 18 அன்று சென்னை தாசப்பிரகாஷில் உள்ள முத்தைய்யா செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கும்பலாக  29ஏ வழித்தட பேருந்தில் தாசப்பிரகாஷில் ஏறி படியில் நின்று அபாயகரமான முறையில் பயணம் செய்தனர். சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி உள்ளனர். இதனை அறிந்த ஓட்டுனர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் கார்த்திக் ஆகி யோர் பேருந்தை நிறுத்தி பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களையும், பேருந்தின் மேற்கூரையில் சாகசம் செய்த மாணவர்களையும் கண்டித்து உள்ளே வருமாறு கூறியுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொடர்ந்து படியில் தொங்கிக் கொண்டு, பாட்டுபாடி பஸ்பாடி தகடை ஓங்கி தட்டிக் கொண்டு வந்தனர். இதனால் பேருந்து ஓட்டுனருக்கு கவனம் சிதறுவதுடன், மனஉளைச்சலும் ஏற்படுகிறது.

பின்னர் ஓட்டேரி பாலம் அருகில் பேருந்தில் இருந்து இறங்கும் போது ஓட்டுநர், நடத்துனர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர், நடத்துனரை பாதுகாத்து பள்ளி மாணவர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் பி2  காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து  ஓட்டுநர், நடத்துனர்களை சமரசம் செய்து தாக்கிய மாணவர்களை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டது. மன உளைச்சல் இதைத்தொடர்ந்து 40 தொழிலாளர்கள் மீது பி2 காவல் நிலையத்தில் Crime NO 1608 / 2021, 269 IPC 143, 188  பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல் காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் கடும் மனஉளைச்சலையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.  அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் அப்பேருந்தில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

நடத்துனர் மீது தாக்குதல்

நடத்துனர் மீது தாக்குதல் இதன் பின்னர் டிச 18 அன்று கோவை மாவட்டம் பேரூரிலிருந்து சித்ரா பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் இரண்டு வழித்தட பேருந்து இரவு 10.30 மணிக்கு அனைத்து பயணநடைகளையும் முடித்து ஒண்டிபுதூர் பணிமனைக்கு வரும் வழியில் குடிபோதையில் இருவர் பேருந்தில் ஏறி நடத்துனரை கத்தியால் வெட்டியுள்ளனர். அதே போல் இன்று டிச 22 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் நடத்துனரை தாக்கி உள்ளார். இது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பணி என்பது ஆபத்து நிறைந்த பணியாக மாறியுள்ளது. எனவே  அரசு பேருந்து படியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப்பெற வேண்டுமெனவும், பி2 காவல்நிலையத்தில் பஸ் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெறவும் பள்ளிகள் துவங்கும் போதும், முடியும் போதும்  மாணவர்களுக்காக  கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் பேருந்தில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க முடியும்.

மேலும் பள்ளியில் படிக்கும் மாண வர்கள் பேருந்தில் பயணிக்கும் போது நல்லொழுக்கத்துடன் பயணம் செய்வதற்கு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தில் பணி செய்யும் ஓட்டுனர், நடத்து னர்களை சமூக விரோதிகளோ அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களோ தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

;