tamilnadu

img

கமுதியில் அதானி சோலார் மின் நிறுவனத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சி...

இராமநாதபுரம்:
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இராமநாதபுரம் மாவட்டம்  கமுதியில் உள்ள அதானி சூரிய மின் உற்பத்திநிறுவனத்தின் நுழைவாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் என். கலையரசன், கமுதி தாலுகா செயலாளர் கே.முனியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முத்து விஜயன், தாலுகா செயலாளர்கள் கே.பச்சமால், வி.முருகன், பி.முத்துச்சாமி, சுப்பிரமணியன் ராமர், பொன்னுச்சாமி,மாரிமுத்து, நவநீதகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் வி.காசிநாததுரை பேசுகையில்,‘‘2016-ஆம் ஆண்டு விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஐந்தாயிரம் ஏக்கருக்குமேல் வாங்கி பிரதமரின்நண்பர் கௌதம் அதானி சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து ஒரு வருடத்தில் சுமார் 2000 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளார். இந்த நிறுவனம் சூரியத் தகடுகளைக் கழுவ லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் நிலம் அபகரிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விவசாயச் சங்கங்கள் சார்பாக தொடர்போராட்டங்களை நடத்தி உள்ளோம். இப்போது பாஜக-வின் வேளாண் சட்டங்கள்அமலானால் விவசாய நிலங்கள் கார்ப்பரேட்டுகள் வசமாகும். கமுதியில் அதானியின் கிரீன் சிட்டிக்காக  மேய்ச்சல்நிலம், கண்மாய்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. இதனால் ஆடு, மாடு மேய்க்கக்கூட வழியின்றி விவசாயிகள் தவிக்கின்ற னர்” என்றார். 

;