சென்னை,செப்.1- முதுநிலை பொறியியல் படிப்புக் கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எம்.இ., எம்.டெக்,. எம்.ஆர்க், எம். பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. மாநிலம் முழுவதும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள 15 ஆயிரத்து 836 இடங்களில் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் 700-க்கும் மேற்பட்ட இடங்களும் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 11 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் மொத்தம் 11 ஆயிரத்து 984 இடங் கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எம்.இ.,எம்.டெக்., படிப்புகளை முடித்தால் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம். ஆனால் தற்போது உள்ள நிலையில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக குறைவாக உள்ள காரணத்தால் உதவிப் பேராசிரியர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.