வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

செப்டம்பர் 17-22 எதிர்ப்பியக்கங்களை நடத்திடுக... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில்,  அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு, மாதந்தோறும் 7500 ரூபாய்  ரொக்கம் வழங்கிட வலியுறுத்தியும், மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கக் கோரியும், கூடுதலான ஊதியத்துடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரியும், வேலையற்றவர்களுக்கு வேலையில்லாக்கால ஊதியம் வழங்கக் கோரியும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரியும் வரும் செப்டம்பர் 17 முதல் 22 வரை நாடு தழுவிய அளவில் எதிர்ப்பியக்கம் நடத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் செப்டம்பர் 12அன்று இணையம் வழி (ஆன் லைன் மூலமாக) நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை:

கோவிட் வைரஸ் தொற்று: அபாயகரமான நிலைமை

கோவிட்-19 வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுதும் மிகவும் மோசமான முறையில் பரவி,  நாள்தோறும் இதில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உலகளவில் உச்சத்தினை அடைந்திருக்கிறது. மத்திய அரசாங்கமும், பிரதமரும் தங்கள் பொறுப்புகளைக் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டனர். மக்கள்  தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று அவர்கள் விட்டுவிட்டனர். தொற்று தங்குதடையுமின்றி வேகமாகப் பரவுவதால், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வசதிகளை மேம்படுத்தவேண்டியது அவசரத் தேவையாகும். மேலும் இந்தத்தொற்றை எதிர்த்து முறியடிப்பதற்கு தனியார் சுகாதார அமைப்பினரையும் இணைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஆனால், இந்தத் திசைவழியில் மத்திய அரசாங்கம் கிட்டத்தட்ட எதுவுமே செய்யவில்லை.

கேரள இடது ஜனநாயக  முன்னணி அரசாங்கம்

இதற்கு முற்றிலும் நேர்மாறாக, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும், அவர்களை சோதனை செய்து பார்ப்பதில் தொடங்கி,மருத்துவமனையில் தங்க வைத்து, சிகிச்சை அளிப்பது வரை, இலவச மருத்துவம் அளித்துக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக, நோயாளிகளில் 2 சதவீதத்தினர் மட்டுமே தனியார்மருத்துவமனை வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களும் மாநில அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.மத்திய அரசாங்கம் மருத்துவமனை வசதிகளை விரிவாக்க வேண்டும் என்றும், அனைத்து நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்என்றும், தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. 

பொருளாதாரப் பேரழிவு

இந்தியப் பொருளாதாரத்தின் பேரழிவு, கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் வருவதற்கு முன்பே, ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று பண மதிப்புநீக்கம் கொண்டுவரப்பட்டபோதே தொடங்கிவிட்டது. பின்னர் இது  ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது மேலும் மோசமானது. உலகில் பெரியபொருளாதார நாடுகளின் மத்தியில், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 2020 ஏப்ரல்-ஜூன்காலாண்டில் மைனஸ் (-)23.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.இதன் விளைவாக, வேலையின்மை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்தது. மாதச்சம்பளம் பெற்றிருந்தவர்களில் 2 கோடியே10 லட்சம் பேர் தங்கள் வேலைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களை வறிய நிலைக்குத் தள்ளி, அவர்களுடைய துன்ப துயரங்களை மேலும் அதிகமாக்கி இருக்கிறது.இவையெல்லாவற்றையும் விட, விலைவாசிகளின் உயர்வு, குறிப்பாக உணவுப் பொருள்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு  பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய நிலைமைகளின்கீழ், கட்சியின் அரசியல் தலைமைக்குழு கீழ்க்கண்டவாறு கோருகிறது: 

1. வருமான வரம்பு செலுத்துவதற்கு வெளியே இருக்கின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாத காலங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் ரொக்க மாற்று உடனடியாக வழங்க வேண்டும்.

2. தேவைப்படும் ஒவ்வொரு தனிநபருக்கும் அடுத்த ஆறுமாதங்களுக்கு பத்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக உடனடியாக விநியோகம் செய்திட வேண்டும்.

3. மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்திலும், ஊதியங்களை மேலும் உயர்த்தியும் விரிவுபடுத்தப்பட வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் பிரகடனம் செய்யப்பட வேண்டும். வேலையில்லாதவர்கள் அனைவருக்கும் வேலையில்லா கால ஊதியம் அறிவித்திட வேண்டும்.

வழிகாட்டும் கேரளா

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மாநிலத்தில் 78 லட்சம் மக்களுக்கு இலவச உணவு அளித்திருக்கிறது. 58 லட்சம் மக்களுக்கு மாதந்தோறும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் அளித்திருக்கிறது.கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம்  நிலைமையை மிகவும் திறமையாக சமாளித்துள்ள அதே சமயத்தில்,அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திட அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் மற்றும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்போதும்,  தடைகளை உருவாக்கவும் வேலை செய்து கொண்டிருக்கின்றன.

மத்திய அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சிநிரல்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் பணியாற்றுவதற்கும், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் பதிலாக, மத்திய பாஜக அரசாங்கம், இந்திய அரசமைப்புச்சட்டத்தை அரித்து வீழ்த்தி, இந்தியக் குடியரசின் அடிப்படைத் தன்மையையே மாற்ற விரும்பும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலை மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது.கடந்த ஆறு மாதங்களாக, மத்திய அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருப்பதையும், முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து மதவெறித் தீயை விசிறி விட்டுக்கொண்டிருப்பதையும், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் மீது எதேச்சதிகாரத் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருப்பதையும், இவர்களுக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களை மூர்க்கத்தனமான சட்டங்களின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதையும், கூட்டாட்சித் தத்துவத்தை மறுதலித்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தனது கைகளில் குவித்துக் கொண்டிருப்பதையும், அனைத்து சுயேச்சையான அரசமைப்புச்சட்ட நிறுவனங்களையும் செயலிழக்கச் செய்வதையும்பெரிய அளவில் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்துவிதமான தில்லுமுல்லு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருப்பதையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் அரசியல் தலைமைக்குழு சுட்டிக்காட்ட விழைகிறது.

பாஜகவின் சொந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தன்னுடைய அரசியல் எதிரிகளை அடக்கியாளவும், ஜனநாயகத்தின் மீது ஒரு முழுமையான தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்திலும் தில்லிக் காவல்துறை, தேசியப் புலனாய்வு முகமை, மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம், அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்புகள் அனைத்தையும் அப்பட்டமான முறையில் துஷ்பிரயோகம் செய்வதன்மூலம் குற்றவியல் நீதிபரிபாலன முறையையே முற்றிலுமாக அடித்துவீழ்த்திக் கொண்டிருக்கிறது.

பொய்க் குற்றச்சாட்டுகளை ஜோடனை செய்து, அப்பாவி சிறுபான்மையினரையும், தலித்துகள்/பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத் துரோகக் குற்றப்பிரிவு ஆகிய மூர்க்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் கைது செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

மாநிலங்களின் உரிமைகள்
பாஜக அரசாங்கம், அனைத்து அதிகாரங்களையும் தன் கைகளில் குவிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க வேண்டியசட்டரீதியான ஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை, மத்திய அரசாங்கம், தேவைப்பட்டால், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கி அளித்திட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. மத்திய அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதில் முன்னணியில் நின்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாநில அரசாங்கங்களுக்கு, கூடுதல் வளங்களை, மத்திய அரசு மாற்ற வேண்டும்.     

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் 2019 ஆகஸ்டில் அரசியல் முடக்கம் ஏற்படுத்தப்பட்டபின்னர் முதன்முறையாக பிரதான ஆறு அரசியல் கட்சிகள் கூட்டம் நடந்திருப்பதையும், அக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் அளித்திட வேண்டும் என்றும், அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததை மீண்டும் அளித்திட வேண்டும் என்றும் கோரியிருப்பதுடன் இயல்பான அரசியல் நடவடிக்கைகளை மீட்டமைத்திட வேண்டும் என்று பிரகடனம் செய்திருப்பதையும் அரசியல் தலைமைக்குழு வரவேற்கிறது.

முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உட்பட அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரையும் உடனடியாகவிடுதலை செய்திட வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்து மற்றும் இதர சேவைகளுடன் அனைத்து தொடர்புகளையும் மீண்டும் வழங்கிடவேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இந்தியா – சீனா நிலைப்பாடு

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் அயல்துறை அமைச்சர்களுக்கும் இடையே மாஸ்கோவில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற கூட்டத்திற்குப்பின்னர் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் எல்லைக்கோட்டுப் பகுதியில்பரஸ்பரம் சம்மதித்து பின்வாங்கும் நிலையை மேற்கொள்வதென்றும், ராஜீயரீதியாகவும் ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் சுமுகமான தீர்வுக்கு வழிகாண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென்றும், இரு தரப்பினருக்கும் இடையேயுள்ள ‘வேற்றுமைகளை தகராறுகளாக மாற்றக்கூடாது’ என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஜூன் 15 மோதலைத் தொடர்ந்து நம் வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டபின்னர்,  இரு தரப்பினரும் ஆகாயத்தில் சுட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 45 ஆண்டுகள்கழித்து இது நடந்திருக்கிறது. நிலைமை பதற்றத்துடனும், ஆழமாகவும் இருக்கிறது. இது தணிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஜீயரீதியாகவும் ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் சுமுகமான தீர்வுக்கு வழிகாண்பதற்கான அணுகுமுறையை ஒட்டி நிற்கிறது.
நாடாளுமன்றத்தின்  மழைக்காலக் கூட்டத்தொடர்

சமூக முடக்கக் காலத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 11 அவசரச்சட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இவற்றில் சில, குறிப்பாகஇந்திய விவசாயம் சம்பந்தப்பட்டவை, மிகவும் ஆபத்தானவைகளாகும். நம் விவசாயிகளின் வாழ்வையும், இந்திய விவசாயத்தையும் மற்றும் இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையும் சூறையாடுவதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அவசரச் சட்டங்களை எதிர்த்தும், இவற்றை இரு அவைகளிலும் திரும்பப் பெற வேண்டும் என்றுகோரியும் சட்டரீதியான தீர்மானங்களுக்கான நோட்டீசை (notice for statutory resolutions) அளித்திருக்கிறது.   

புதிய கல்விக் கொள்கை, தேசிய டிஜிடல் சுகாதாரத் திட்டம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள திட்டங்கள் பர்சனல் தரவு பாதுகாப்பை மறுதலிப்பதாகவும் சுகாதாரப் பாதுகாப்பைத் தனியாரிடம் தாரை வார்ப்பதாலும் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு மற்றும் புதிய சுரங்க ஒழுங்குமுறைகள் போன்றவை நாட்டின் நலன்களையும் நாட்டு மக்களின் நலன்களையும் கடுமையாகப் பாதிப்பதால் இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்றும் இத்தகைய பெரிய கொள்கை முடிவுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு,  நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதித்தும், நுண்ணாய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது என்று அரசியல் தலைமைக்குழு தீர்மானித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இவற்றை ‘பாஜக-முகநூல் கள்ளப்பிணைப்பு’ பிரச்சனையில் எழுப்பியிருந்தது. இவை குறித்து கூட்டு நாடாளுமன்றக்குழு உட்பட, முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியிருந்தது.  

அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் செப்டம்பர் 17 முதல் 22 வரையில் நாடு தழுவிய அளவில்எதிர்ப்பியக்கங்களை அனுசரித்திட அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.
இவ்வியக்கத்தின்போது இந்துத்துவா மதவெறி தீவிரமான முறையில் விசிறிவிடப்படுவது, சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுவது, மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் பெரிய அளவில் அதிகரித்திருப்பது, பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது, நாட்டின் செல்வங்களைத் தனியார் கொள்ளையடிக்க ஏதுவான முடிவுகள் எடுத்திருப்பது, தொழிலாளர்நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியிருப்பது முதலான பிரச்சனைகள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட  வேண்டும். இத்துடன் மத்திய பாஜக அரசாங்கம் மக்களின் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.

பிரச்சாரத்தின்போது கவனம் செலுத்த வேண்டிய முக்கிய  கோரிக்கைகள்:      

1.வருமானவரி வரம்புக்கு வெளியே இருக்கின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாத காலங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் ரொக்க மாற்று உடனடியாக வழங்க வேண்டும்.

2.தேவைப்படும் ஒவ்வொரு தனிநபருக்கும் அடுத்த ஆறுமாதங்களுக்கு பத்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாகஉடனடியாக விநியோகம் செய்திட வேண்டும்.

3.காத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்திலும், ஊதியங்களை மேலும் உயர்த்தியும் விரிவுபடுத்தப்பட வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் பிரகடனம் செய்யப்பட வேண்டும். வேலையில்லாதவர்கள் அனைவருக்கும் வேலையில்லா கால ஊதியம் அறிவித்திட வேண்டும்.

4.இந்திய அரசமைப்புச்சட்டம் மற்றும் அதில் அளிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடிமக்களுக்குமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை உத்தரவாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழில் : ச.வீரமணி
 

;