வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆகஸ்ட் 9 அன்று, நாட்டில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நாடு முழுதும் “இந்தியாவைப் பாதுகாப்போம்,”
“இந்தியா விற்பனைக்கு அல்ல”, “அந்நிய கார்ப்பரேட்டுகளே, நாட்டை சூறையாடுவதைவிட்டு வெளியேறுங்கள்” போன்ற கண்டன முழக்கங்கள் இட்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டனர். மத்தியத் தொழிற்சங்கங்கள், அகில இந்திய விவசாய சங்கங்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், பூமி அதிகார் அந்தோலன், மத்திய மாநில அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகள், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கங்கள் இப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன.
புதுதில்லி
புதுதில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் தபன்சென், எச்.ஹேமலதா, தேவ்ராய், ஏஐடியுசி அமர்ஜீத் கவுர், வித்யாசாகர் கிரி, எச்எம்எஸ் சார்பில் ஹர்பஜன் சித்து, ஐஎன்டியுசி சார்பில் அசோக் சிங், ராஜு, தொமுச சார்பில் ஜவஹர், மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும், வங்கிகள்ற, ரயில்வே, பெட்ரோலியம், பாதுகாப்பு, மின்சாரம், டெலிகாம், அஞ்சல் மற்றும் இன்சூரன்ஸ் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஹன்னன்முல்லா, கிருஷ்ணபிரசாத், விஜூகிருஷ்ணன், முதலானவர்கள் கலந்துகொண்டனர்.
சமூக முடக்கக்காலத்தில் தில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்றுள்ள மாபெரும் கண்டன இயக்கமாக இது பிரதிபலித்தது.
தில்லியில் அங்கன்வாடி ஊழியர்களும், ‘ஆஷா’ ஊழியர்களும் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதேபோன்று பஞ்சாப், ஹர்யானா, இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், மகாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், உத்தர்காண்ட், திரிபுரா, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம், கர்நாடகம் மற்றும் சில மாநிலங்களிலும் இப்போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.