தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில், நாடு முழுவதும இதுவரை 3671 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது என தி இந்து இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் அடிப்படையில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றிற்கு மதுரை, விழுப்புரம் தேனி ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.