tamilnadu

img

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற சக்லத்வாலா... - ப.முருகன்

முதலாளித்துவத்திலிருந்து  கம்யூனிசத்திற்கு  - 3

இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டது போலவே சக்லத்வாலா இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டார். கம்யூனிஸ்ட்டான அவர் 1922ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டே நாடாளுமன்ற உறுப்பினரானார். அவர் காலனி நாடுகளின் மக்களுக்கும் உலகத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் பாடுபட்ட மாபெரும் தலைவராவார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் அவரது தனித்த குரல் உரத்து ஒலித்தது. பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நலன்களுக்கும் உலகின் இதர பகுதிகளில் உள்ள உழைப்பாளிகளின் நலன்களுக்கும் அவர் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. இந்த இரண்டின் வெற்றியைச் சார்ந்தே சோசலிசத்தின் சாதனைகள், விளைவுகள் இருக்கும் என்று சக்லத்வாலா கருதினார். அதனால்தான் 1926ல் அவர் எழுதிய பிரசுரம் ஒன்றில், சோசலிசம் என்பதன் பொருள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சிதைவது என்றும் கூறலாம் என்று குறிப்பிட்டார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடாளுமன்றவாதியின் போராட்டங்களுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இதயப் பகுதியில் அயராமல் அஞ்சாமல் செயல்பட்ட சக்லத்வாலாவின் தீரமிக்க நடவடிக்கைகளே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பிரிட்டிஷ் இடதுசாரிகளின் வரலாற்றில் அவருக்கென சிறந்ததோர் இடம் இப்போதும் உண்டு. ஆனால் அத்தகைய மகத்தான மனிதரை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பது மிகவும் அவசியமாகும். 1924ஆம் ஆண்டு அக்டோபரில் கூடிய தொழிலாளர் மாநாடு, தொழிலாளர் கட்சியின் சார்பில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்பாளராக நிறுத்துவதற்கு தடைவிதித்தது. இதையடுத்து சக்லத்வாலா தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த மாநாட்டின் பிரதிநிதியாக தொழிலாளர் கட்சியின் சார்பில் சக்லத்வாலா கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகவே பாட்டர்சி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆயினும் நாடாளுமன்றத்தில் சுதந்திர தொழிலாளர் கட்சியின் இடதுசாரி ஸ்காட்டிஷ் உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தார். இது அவரது விரிந்து பரந்த அரசியல் பார்வையை வெளிப்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் காலனி நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகள் பற்றி விரிவாக உரையாற்றினார். 1920ஆம் ஆண்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டதும், அதன் பிரிட்டன் கிளையாக தொழிலாளர் நல லீக் செயல்பட்டது. இந்த அமைப்பில் சக்லத்வாலா முன்னின்று பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். 1926ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர் நல லீக் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு காரணம் சக்லத்வாலாவின் தீவிர முயற்சிகளே. இதையடுத்து சக்லத்வாலாவின் நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் கண்காணிக்கத் துவங்கியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இந்தக் காலத்தில் அவருடைய வீடு மற்றும் பிரபல கம்யூனிஸ்ட்டுகளாக அறியப்பட்டவர்களின் வீடுகளில் எல்லாம் பிரிட்டன் காவல்துறை சோதனைகளை நடத்தியது. ஆனால் அதன் பின்னரும் சக்லத்வாலாவின் நடவடிக்கை தீவிரமடையவே செய்தது. அவர் விடுதலை அடைந்த பின்னர் மூடப்பட்ட சுரங்கங்களின் தொழிலாளர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு எழுச்சியூட்டும் உரையாற்றினார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் சக்லத்வாலாவின் போராட்ட உணர்வுகளுக்கு அணை போட முடியவில்லை. அவரது செயல்பாடுகள் அதிகரிக்கவே செய்தன. 

இந்தக் காலங்களில்தான் இங்கிலாந்து மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் சக்லத்வாலா சென்றுவந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1926 பிப்ரவரி மாதத்தில் பெர்லின், பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த கூட்டங்களுக்குப் பிறகு அங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஜார்ஜ் லான்ஸ் பர்ரி செயல்பட்டார். அவரது பதவிவிலகலுக்குப் பிறகு, ஜேம்ஸ் மாக்ஸ்டன் பதவியேற்றார். இந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஜவஹர்லால் நேரு, சக்லத்வாலா, மெக்ஸிகோ நாட்டின் டியாகோ ரிவியேரா ஆகியோர் செயல்பட்டனர். இந்த அமைப்பு உலக பத்திரிகைகள் மத்தியில் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆயினும் அந்த அமைப்பினுடைய வெளியீடுகளை பிரிட்டிஷாரின் இந்திய அரசாங்கம் தடைசெய்தது. அதையடுத்து அரசின் கண்காணிப்பு தீவிரமாகியது. சக்லத்வாலா 1929ல் கொலோன் நகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் அவருடன் சென்ற ஐந்து பேரில் இருவரை பயணத்தை தொடர அனுமதித்தது. மற்ற மூவரையும் கைது செய்து பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது உலக மாநாடு 1928ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சக்லத்வாலா, ரஜினிபாமிதத், ஹாரிபாலிட் ஆகியோர் கொள்கையில் தீவிர மாற்றம் தேவை என்று கோரினர். அவர்களது கோரிக்கை 11-ஆவது மாநாட்டில் நிறைவேறியது. 

அதன் பின்னர் 1929ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சக்லத்வாலா தோல்வி அடைந்தார். ஆயினும் பிந்தைய நாட்களில் சக்லத்வாலா நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய விசயமாக வேலையின்மையே இடம்பெற்றிருந்தது. அவர் தனது வாழ்நாளின் கடைசிக் காலம் வரை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டே இருந்தார். 1936ல் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 1927ஆம் ஆண்டுக்குப் பின்னர் சக்லத்வாலா இந்தியா செல்வதற்கு நிரந்தரத் தடையை விதித்தது இங்கிலாந்து அரசாங்கம். அதுபோலவே எகிப்து செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 1929ல்ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள பெல்ஜியம் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து முழுவதும் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் பாசிசம் தீவிரமானது. ஜெர்மனியில் ஹிட்லர் அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடமான ரீச் ஸ்டாக் கட்டிடத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு அதன் பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது போட்டு அவர்களை கைது செய்து வேட்டையாடி சித்ரவதை செய்தான். அதைக் கண்டித்து சக்லத்வாலா இங்கிலாந்தில் மிகப்பெரிய  தொழிலாளர் கூட்டம் ஒன்றை கூட்டி கம்யூனிஸ்டுகள் மீதான வழக்குகளை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று முழங்கினார்.