குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மோடி அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்குடன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா2019, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.
இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள் மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த 144 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.