tamilnadu

img

பழைய சொல், புதிய தேடல் ‘தமிழி’ - அண்டனூர் சுரா

‘தடம் பதிக்கும் தமிழி எழுத்துக்கள் ‘ தினமணி புத்தாண்டு மலர் -2020 இல் வெளியான ஒரு கட்டுரை. தமிழி  எழுத்தில் உச்சரிப்பு அனைத்தும் தமிழில் வரும் உயிர், மெய் எழுத்துக்களின்  ஓசைதான். ஆனால் எழுத்துக்களின் வடிவம் மட்டும்தான் மாறுபட்டவை. கரூர் பரணிபார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும் , திருக்குறள் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன்,  தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, வட்டெழுத்து, தமிழ் என்று அழைக்கிறோம் என்கிறார்.
தமிழி என்பது என்ன?
குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60 விழுக்காடு தமிழ் பிராமி எழுத்துகளே !
இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவை. தமிழ்-பிராமி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துகளைத் தமிழ் - பிராமி எனப் பெயர்ச்சூட்டியவர் ஐராவதம் மகாதேவன்.  தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் , வடஇந்திய பிராமி எழுத்துகளிலிருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும்.
நடனகாசிநாதன், பண்டைய தமிழ் வரிவடிவத்தை, தமிழ் பிராமி என்று அழைக்கக்கூடாது, தமிழி என்றே அழைக்கவேண்டும் என்கிறார்.
பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டு ‘லலித விஸ்தாரம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் முதல் பேரரசர் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராமி எழுத்து பயன்பாட்டுக்கு வந்தது. இக்காலத்தையொட்டிய சமணர்கள், தங்கும் குகைகளில் பிராமி எழுத்துகளாக வடித்தார்கள்.
கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இவ்வெழுத்துகள் பிராமி எழுத்தாகவும் வட்ட எழுத்தாகவும் மாறின. பாண்டியர் வட்டெழுத்துகளாலும்; சோழர், பல்லவர்கள் கோட்டு எழுத்தாகவும்  எழுதினார்கள். காலப்போக்கில் வட்ட எழுத்து, வரி எழுத்து இரண்டும் இரண்டற கலந்தன. பெரும்பான்மை வட்ட  எழுத்துகள்  மலையாளம் எழுத்துகளாக மாறின.
தமிழ் - பிராமி, வட்ட எழுத்து இவ்விரண்டு எழுத்துகளையும் உள்ளடங்கி பொதுவாக வைக்கப்பட்ட பெயரே தமிழி. வட மொழியினர் தாமிழி என்கின்றனர்.
கல்வெட்டு ஆய்வாளர்களான நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல், தமிழி என்பதை  ‘தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் ‘ என்கிறார்கள்.  பழந்தமிழ் எழுத்து என்றும் சொல்லலாம்.
-நிறைவு-