இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
பொன்னமராவதி, ஆக.20- புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஐ மாநிலக்குழு உறுப்பி னர் ஏனாதி ஏஎல்.ராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் ப.செல்வம் வரவேற்றார். மாவட்ட செயலர் மு.மாதவன், விபி.நாகலிங்கம், ஆர்.பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலர் கேஆர்.தர்மராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.வெள்ளைக்கண்ணு, எம்.வெள்ளைச்சாமி, சி.பொன்னழகு, சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்று இரா.முத்தரசன் பேசுகையில், ஆர்எஸ்எஸ்சின் மனு தர்ம கொள்கைகளை பாஜக ஆட்சி மூலம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஜனநாயக போர்வையை போர்த்தியபடி பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மிகக் குறைந்த நாள்களில் நாடாளுமன்றத்தில் அதிகபட்சமான மசோதாக்களை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தி அவற்றை நிறைவேற்றி அமல்படுத்தி உள்ளது பாஜக அரசு.
இத்தகைய ஜனநாயக விரோதமான செயல் எந்த ஒரு அரசிலும் நடைபெற்ற தில்லை. நாட்டில் அரசியலமைப்பு சட்டங்கள், மதச்சார்பற்ற கொள்கைகள் கேலிக்கூத்தாக ஆகியுள்ளன என்று சாடினார். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாநில உரிமைகள் பறிபோவதை குறித்து எந்த விதமான கவலையும் கொள்ளாத அரசு. மத்திய அரசுக்கு விசுவாசமாக செயல்பட்டு வருகிறது மாநில அரசு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சமூக விரோதிகள், கூலிப்படையினரின் கை மேலோங்கி உள்ளது.
கிருஷ்ணகிரியில் டாஸ்மார்க் ஊழியர், பெண் ஒருவர் என இருவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து 4 நாளாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. படுகொலைக் கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர்கள் கேள்வி கேட்பது வேதனைக் குரியது என்றும் அவர் கூறினார். பால் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்கிறது எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மாநில முதலமைச்சர் பால் விலையை உயர்த்தும் போது பொது மக்களை பாதிக்காதவாறு விலையேற்றப் படும் என சட்டப்பேரவையில் அறிவித்து விட்டு இன்று 1 லிட்டர் ரூ.6 கூடுதலாக உயர்த்தி லாபம் சம்பாதிக்க நினைக்கின்ற னர் என்றும் இரா.முத்தரசன் சாடினார்.