tamilnadu

img

தமிழகத்தில் நடத்த மாட்டோம் என அறிவிக்கச் செய்யப் போராடுவோம்!

சென்னை கூட்டத்தில் பிரகாஷ்காரத் அறைகூவல்

 • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு  
 • தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகளை

நமது போராட்டத்தின் வாயிலாக தமிழகத்தி லும் என்.பி.ஆர்.என்.ஆர்.சி பணிகளை நடத்தமாட்டோம் என்று இந்த அதிமுக ஆட்சியாளர்களால் அறிவிக்கச் செய்யவேண்டும் இல்லையென்றால் இங்குள்ள அரசு மத்திய அரசுடன் ஒத்துழைத்து என்.பி.ஆர், என்.ஆர்.சி தயாரிக்க உதவி செய்துவிடும் என்று பிரகாஷ் காரத் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர் துரோக, முஸ்லிம் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் வியாழனன்று (டிச.26) மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பிரகாஷ் காரத்  பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம், அதன்படி நடந்து கொள்வோம் என்று பதவி யேற்ற அரசாக இன்றுள்ள மத்திய அரசு இல்லை. எதேச்சதிகாரமாக இந்துத்துவா வழியில் செயல் படக்கூடிய அரசாக அது உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றான மதச் சார்பின்மை மீது கொடுங்தாக்குதல் தொடுக்கப் பட்டுள்ளதை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் பெரும்போராட்டம் நடந்து கொண்டி ருக்கிறது.இது நமது நாட்டின் அரசியல் வர லாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். அர சமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசின் கொள்கையை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இந்துத் துவா நிகழ்ச்சிநிரலை செயல்படுத்த பாஜக அரசு   முயற்சித்ததால் அதற்கு எதிராக பெரும்போராட்டம் தொடங்கியுள்ளது. 

 • மும்முனைத்தாக்குதல்

 அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் நாட்டு மக்களுக்கு எதிராகவும் மும்முனைத்தாக்குதலை மோடி அரசு தொடங்கியுள்ளது. முதலாவது தாக்கு தல் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டம், இரண்டாவது தாக்குதல் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, மூன்றாவது தாக்குதல் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடி மக்கள் பதிவேடு. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு டையவை.இவற்றை பிரிக்கமுடியாது. நமது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையை சீர்குலைக்க ஆட்சியாளர்களால் இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்து தேசத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற  பாஜக வின் ஒரு நீண்டகால செயல்திட்டத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரல் இதுவாகும். மத்திய அரசின் இந்த சித்து விளையாட்டை மாணவர்களும் இளைஞர்க ளும் நன்கு தெரிந்து கொண்டுதான் அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினார்கள். நமது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற தன்மையை மாற்ற அரசு முயற்சிக்கிறது என்பதை அறிந்துகொண்டதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் வீதிகளில் இறங்கி மக்கள்  பெருமளவில் திரண்டு போராடுகிறார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்க அரசும் காவல்துறையும் கடுமையான அடக்குமுறையை ஏவிவிடுகின்றன. இருப்பினும் பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி பல்வேறு வடிவங்களில் இப்போராட்டங்கள் நடைபெற்று வருவதால் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நாளுக்கு நாள் அவை எழுச்சி பெற்று வரு கின்றன.

 •  சாவர்க்கர் சொன்னது என்ன?

சிஏஏ, என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவை நமது அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கக் கூடிய குடியுரிமை என்ற பாதுகாப்பான ஏற்பாட்டை மாற்றியமைக்கக்கூடியவை.இந்துத்துவா சித்தாந்தத்தின்படி குடியுரிமை என்றால் இனி எப்படி இருக்கவேண்டும் என்று மாற்றியமைக்கக் கூடியவை. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்ற வார்த்தையை முதலில் இந்தி யாவில் பயன்படுத்தியவர். பின்னர் ஆர்எஸ்எஸ் தனது அடிப்படை சித்தாந்தமாக இந்துத்துவாவை ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று இந்து தேசம், மற் றொன்று முஸ்லிம் தேசம் என 1923ல் சாவர்க்கர் கூறினார். சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா இரண் டாக பிளவுபடுவதற்கு வித்திட்டவரே இவர்தான். முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா  அல்ல.

 • மோசமான சாகப்தம் மீண்டும் தேவையா? 

மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்ற எந்த ஒரு இந்துவும் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அந்தநாடு பிடிக்கவில்லை என்று இந்தியாவிற்கே திரும்பி வந்தால் அவர்களை அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியது. இதன் மூலம் உண்மையான இந்து தேசத்தை கட்ட மைக்கப்போகிறோம் என்று அவர்கள் கூறி னார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்னணி யில் இவை எல்லாம் மறைந்துள்ளன. நாட்டின் பிரிவினைக்கு பின்னர் லட்சக்கணக்கான மக்கள் இங்கிருந்து பாகிஸ்தானுக்கும் அங்கிருந்து இந்தி யாவிற்கும் வந்தனர். அன்றைய மேற்கு பாகிஸ் தான் (இன்றைய பாகிஸ்தான்), கிழக்கு பாகிஸ் தான் (இன்றைய பங்களாதேஷ்)  என இருதரப்பி லும் புலம்பெயர்வது நடைபெற்றது. அந்த மோச மான சகாப்தத்தை மீண்டும் மத்திய ஆட்சியாளர் கள் உருவாக்கப் பார்க்கிறார்கள்.

 •  மக்களை அலைக்கழிக்கும் மத்திய ஆட்சியாளர்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 28விழுக்காட்டினர் சிறு பான்மையினத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். அம்மாநிலத்தில் மதரீதியாக பிரிக்க பாஜக முயற்சிக்கிறது. காரணம்  அடுத்தாண்டு நடைபெறவுள்ள அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துவாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்று அக்கட்சி முயற்சிக்கிறது. ஏற்க னவே மேற்கு வங்க மக்களிடையே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்துக்களும் முஸ்லிம் களும் பெரும் கவலையில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.,வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் என மக்கள் ஆங்காங்கே உள்ள அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் தான் என நிரூபிப்பதற்காக அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 •  தேசிய அடையாள அட்டை

​​​​​​​1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி தேசிய குடியுரிமை பதிவேடு ஏதும் ஏற்படுத்தப் படவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் இந்தச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் எல்.கே.அத்வானி. பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் அனைவரை யும் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பப் போகிறோம் என்றார்கள். அதற்காக நாடாளுமன் றத்தில் அந்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்யப் போகிறோம் என்றார்கள். இந்திய குடிமக்களுக் காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். பல்நோக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்கப்போவதாகவும் அவர்கள் சொன்னார்கள். குடியுரிமைக்கான தேசிய அடை யாள அட்டையாக அது இருக்கும் என்றார்கள். ஆனால் அதை எப்படி அமல்படுத்துவது என்ற பிரச்சனை வந்தபோது குடியுரிமைச் சட்டத்தை மேலும் மேலும் திருத்தி அமைப்பது அதில்புதிய புதிய விதிகளை சேர்ப்பது என்று முடிவுசெய்தனர்.

 •  அசாம் மாநிலத்தில் நடந்தது என்ன?

​​​​​​​2003ல் அவர்கள் செய்த திருத்தத்தின்படி  முதலில் மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப் படும்.இந்தியாவில் எந்தப்பகுதியில் வசிப்பவர்க ளாக இருந்தாலும் அவர்களது பெயர் அதில் பதிவு செய்யப்படும். பின்னர்அந்த பட்டியலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அதற்கு பொறுப்பான அதிகாரி இவர் சந்தேகத்திற்கு உரியவர் என்று கூறி விட்டால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நபர், அதிகாரியின் முன்பு ஆஜராகி நான் இந்திய குடியுரிமைவாதி தான் என ஆதாரங்க ளுடன் நிரூபிக்கவேண்டும். இதற்காக பல ஆவ ணங்களை அவர் தாக்கல் செய்யவேண்டியி ருக்கும். அசாம் மாநிலத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் நினைவிருக்கும். அதையே நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய ஆட்சியா ளர்கள் விரும்புகிறார்கள். இதில்இருந்து தான் மதவாத அரசியல் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் குடிய ரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை யில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். சட்ட விரோ தமாக ஊடுருவியவர்களை தடுக்க இது தேவை என அரசு கூறியது.இது மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மக்களை மதரீதியாக பிளவு படுத்திவிடும். இந்துக்கள் அனைவரும் இந்திய குடி யுரிமை பெற்றவர்கள். முஸ்லிம்கள் அனைவரும் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்கள் என்று கூறுகிறார்கள். இதற்காக முதலில் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை  கொண்டு வருவோம். பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். மேற்கு வங்கத்தில் அமித்ஷாவும் அவரது கூட்டாளிகளும் ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தானாக இந்திய குடியுரிமை பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள். மற்றவர்களாக இருந்தால் அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படு வார்கள் என்று கூறுகின்றனர்.

 • பிரிவினைக்கு முந்தைய வங்காளம்

​​​​​​​நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பிரி வினைக்கு முன்பும் வங்காளம் ஒரே மாகாண மாக இருந்தது. மக்கள் இந்துவாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் ஒரே மொழியான வங்க மொழியில் பேசினார்கள். வேறு வேறு மதங்களாக இருந்தாலும் ஒரே கலாச்சாரத்தை கொண்டிருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் பெருமளவில் மேற்கு வங்கத்திற்கு வந்தனர். முஸ்லிம்களும் வந்தனர். அவர்கள் அப்போது எந்த ஒரு ஆவணத்தையும் கொண்டி ருக்கவில்லை. எனவே இப்போது அந்த மக்களில் இந்து அல்லாத மக்களிடம் ஆவணத்தை கேட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப்பாருங்கள். 

 •  டி வாக்காளர்கள் என்றால் என்ன?

​​​​​​​நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக அவர் களை மாற்ற தற்போதைய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அசாமில் இதைத்தான் பார்த்தோம். 19லட்சம் மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சட்டப்படி பார்த்தால் அவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற வர்கள் அல்லர். அதற்காக நாம் அவர்களை இந்தி யாவை விட்டு வெளியே தள்ளிவிடமுடியுமா? பங்க ளாதேஷ் நாட்டிற்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அங்கேயும் அவர்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கும். அசாமில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் டி வாக்காளர்கள் என்ற சிலரை அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது டி என்றால் டவுட்புல் (சந்தேகத்திற்கு உரியவர்) என்று அர்த்தம். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்க ளின் போது இந்த டி வாக்காளர்கள் அவர்க ளுக்கான வாக்குரிமையை  பயன்படுத்த அனு மதிக்கப்படவில்லை. அவர்கள் படித்திருந்தாலும் சரி. அரசு வேலையில் இருந்தாலும்  அவர்களுக்கு முழு குடியுரிமை இல்லை. 

 •  திறந்தவெளி சிறைச்சாலை

​​​​​​​அசாம் மாநிலத்தில் மட்டும் 19லட்சம் பேர் என்றால்,நாடு முழுவதும் இப்படி பிரித்து வைத்தால் கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள். அவர்கள் குடிமக்கள் பதிவேட்டிற்குள் வரமாட்டார்கள்.  ஆனால் இந்தியாவிற்குள் எந்தஉரிமையும் இன்றி தொடர்ந்து இருப்பார்கள்.அவர்களுக்கு முழு குடி யுரிமை வழங்கப்படாது. இதுதான்  பிஜேபியின் உண்மையான திட்டம். இந்த முயற்சியை நாம் தடுத்து நிறுத்தியாகவேண்டும். ஏனெனில் ஜம்மு - காஷ்மீரில் என்ன நடந்தது? அங்கு ஏற்கனவே எதேச்சதிகார நிர்வாக அமைப்பு ஏற்படுத் தப்பட்டுவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 70 லட்சம் மக்கள் அடிப்படை உரிமைகள் இன்றி திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்படி இங்கு நடந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துபார்க்கமுடிகிறதா? 145 நாட்களாக இண்டர் நெட் இல்லை. இதனால் ஆன்லைன் தேர்வுகளுக்கு அங்குள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை.

 •  உயிர்காக்கும் மருந்து வாங்கமுடியவில்லை

​​​​​​​உயிர்காக்கும் மருந்துகளை ஆன் லைனில் வாங்க முடியவில்லை, காரணம் இண்டர் நெட் இணைப்பு இல்லை என்று அம்மாநில மருத்து வர்கள் கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒட்டு மொத்த பகுதி மக்களுக்கும் நான்கரை மாதங்க ளாக இண்டர் நெட் இணைப்பை துண்டித்து மத்திய பாஜக ஆட்சியாளர்கள் உலக சாதனை படைத்துவிட்டார்கள். இதனால் அந்த மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ளமுடியாதவர்களாக உள்ளனர்.இது நம் முன் உள்ள மிகப்பெரிய சவால் ஆகும்.

 •  லேசாக பின்வாங்கும் ஆட்சியாளர்கள்

​​​​​​​சிஏஏ, என்ஆர்சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நாடு தழுவிய பெரும் எதிர்ப்பை உணர்ந்த பின்னர் ஆட்சியாளர்கள் இனி அவசர அவசர மாக எதையும் செயல்படுத்தமுடியாது, கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முதலில் என்ஆர்சி யை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். முதலில் மக்கள் தொகை பதிவேட்டை தயாரித்து அதில் கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து என்ஆர்சியை ஏற்படுத்தப்போகிறார்கள். 

 •  போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

​​​​​​​தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) குறித்த அரசாணை அறிவிப்பு 2019 ஜூலையில் வெளியிடப் பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து மாநில அரசு களும் என்.பி.ஆர் தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளன. இதற்காக அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்பிஆர் முடிந்த பின்னர் என்ஆர்சி பணிகளை தொடங்குவார்கள். இதுதான் அமித்ஷா திட்டம்.எனவே நாம் முதலில் என்.பி.ஆர் தயாரிப்பை தடுத்து நிறுத்தவேண்டும்.காரணம் அந்த பணி நடந்து முடிந்துவிட்டால் என்.ஆர்.சி தயாரிப்புப் பணியை தடுத்து நிறுத்தமுடியாது. நிறுத்தவேண்டும் என்றால் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், அதற்கு வாய்ப்பில்லை, அரசை எதிர்த்து போராட்டங்களை வலுவாக நடத்துவதன் வாயிலாக இதை தடுத்துநிறுத்தமுடியும். ஏற்கனவே நாம் நடத்திய போராட்டங்களால் ஆட்சியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

 •  பிரதமரின் 2 பொய்கள்

​​​​​​​கடந்தவாரம் தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் அரசு என்ஆர்சி குறித்து விவாதிக்கவில்லை என்று கூறி னார். இது முதல் பொய். இரண்டாவது நாட்டின் எந்த பகுதியிலும் குடியுரிமை அற்றவர்களை அடைக்க முகாம்கள் அமைக்கப்படவில்லை என்றார்.இது மற்றொரு பொய்.அசாமில் ஏற்கனவே 6 முகாம்கள் உள்ளன.ஆயிரக்கணக்கான மக்கள் அந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே உள்துறை அமைச்சகம் கூறிய அறிவுரையின்படி பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் நவி மும்பையில் முகாம் அமைக்க முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் தலை மையிலான பாஜக அரசு நிலத்தை ஒதுக்கி யுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ஒரு முகாம் அமைக்கப்படவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறமுடியாதவர்கள்  வெளிநாட்டவர் தீர்ப்பா யத்திற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். நாடு  முழுவதும் நடைபெற்ற போராட்டத்தை கண்ட பின்னர் என்.ஆர்.சியை தற்போதைக்கு அமல் படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று ஆட்சியாளர் கள் கூறத்தொடங்கியுள்ளனர்.உண்மை என்ன வென்றால் என்.பி.ஆர் முடிந்த பின்னர் என்.ஆர்.சி தயாரிப்புப் பணி நடைபெறும். பாஜக ஆளும் மாநி லங்களில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக அதிகாரிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர்.


ஆனால் கேரளாவில் இந்தப் பணிகள் நடை பெறாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. சிஏஏ. என்.பி.ஆர்.,என்.ஆர்.சி குறித்து மக்களி டையே பெருத்த அச்சம் நிலவுவதால் இந்தப்பணி களை நாங்கள் உடனடியாக நிறுத்துகிறோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துவிட்டது. மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினாலும் அதற்கான பணியில் ஈடுபடுபவர்கள் மாநில அரசு ஊழியர்கள் தான். அந்தப்பணிக்கு நாங்கள் எங்க ளது ஊழியர்களை அனுப்பமாட்டோம் என்று கேரள அரசு சொல்லிவிட்டது. இதற்காக அதி காரிகளை ஒதுக்கமுடியாது, பயிற்சிக்கும் அனுப்ப முடியாது என்றும் அந்தஅரசு கூறிவிட்டது.இதையே தான் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் சொல்லியிருக்கிறார்.

 • ​​​​​​​தமிழகத்தில்  உண்மையான பாஜகஅரசு 

துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் அதிமுக  ஆட்சி யில் உள்ளது. இது அதிமுக அரசு அல்ல. உண்மை யான பாஜக அரசு.இவர்கள் சிஏஏ-வை நாடாளு மன்றத்தில் ஆதரித்து வாக்களித்தார்கள். இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது பாஜக கூட்டணிக் கட்சிகள் உணரத்தொடங்கிவிட்டன. இதனால் முந்தைய நிலையில் இருந்து பின்வாங்குகின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,ஓடிஷா முதல்வர் பட்நாயக் ஆகியோர் பின்வாங்கிவிட்டனர்.

 •  வழிகாட்டும் கேரளா

​​​​​​​நமது  போராட்டத்தின் வாயிலாக தமிழகத்தி லும் என்.பி.ஆர்,என்.ஆர்.சி பணிகளை நடத்த மாட்டோம் என்று இந்த அதிமுக ஆட்சியாளர்களால் அறிவிக்கச் செய்யவேண்டும்.இல்லையென்றால் இங்குள்ள அரசு மத்திய அரசுடன் ஒத்துழைத்து என்.பி.ஆர்,என்.ஆர்.,சி தயாரிக்க உதவி செய்து விடும். 12 மாநில அரசுகள்  என்.பி.ஆர் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த அரசுகள் கேரள அரசு போல வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். முதல்முறையாக கடந்த 6ஆண்டுகளில் இந்துத்துவா எதேச்சதிகாரத்தை எதிர்த்தும் மதச் சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவும்  நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்கள் நடை பெற்றுள்ளன.நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இடையே - அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. தில்லி தலை நகராக இருந்தாலும் அங்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.அவர்களே இன்று இந்த கொடிய சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாள்தோ றும் அங்கு பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் நாட்டின் பல பகுதிக ளில் பாஜக அரசாக இருந்தாலும் அல்லது பாஜக கூட்டணி அரசாக இருந்தாலும்  நாள்தோறும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

 •  சுவர்களில் ரத்தக்கறை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​அரசியல் சாசனம் நமக்கு  அடிப்படை உரி மையை வழங்கியுள்ளது. அது பேச்சுரிமையை, சங்கம் சேரும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் அந்த உரிமைகளை பறித்து ஓரிடத்தில்  2 பேருக்கு மேல் கூடினாலும் கைதுசெய்கிறார்கள்.  பல இடங்களில் இண்டர் நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் இண்டர்நெட் இணைப்பு துண்டிக் கப்பட்டுள்ளது. காஷ்மீர் போன்ற நிலையை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள். இதுபோன்ற மோச மான நிலைமையை நான் இதுவரை பார்த்த தில்லை. நான் மாணவர் அமைப்பில் செயல்பட்ட போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது கூட மாணவர்கள் மீது இது போன்ற அடக்குமுறையை சந்திக்கவில்லை. தில்லியில் உள்ள ஜாமியா மிலியா மத்திய பல்கலைக் கழகத்தில் காவல்துறையினர் நுழைந்து நூலகத் தில் இருந்த மாணவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நூலகத்திற்கு நீங்கள் சென்றால் சுவர்களில் ரத்தக் கறை படிந்திருப்பதை பார்க்க முடியும். 

 •  5ஆயிரம் பேர் பொய்வழக்கு

​​​​​​​ஒரு மாணவர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளால் பார்வையை இழந்துவிட்டார்.மற்றொரு பல்கலைக் கழகம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இதுதில்லியில் இல்லை.எனவே இதுகுறித்து அவ்வளவாக செய்திகள் வருவதில்லை. இங்கும் காவல்துறையினரால் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு எதிராக கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவர் கை முறிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களின் கால்கள் நசுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச காவல்துறையும் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்கின்றது. அம்மாநிலத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர்.ஆனால் நாங்கள் சுடவில்லை என்று காவல் துறை கூறுகிறது. எனவே நட்டஈடு தரமுடியாது என்று மாநில அரசும்கூறுகிறது. அம்மாநிலத்தில் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். 5ஆயிரத்திற்கும் அதிகமா னோர் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இத்தகைய அடக்குமுறையையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் போராட் டங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். எனவே வரும் நாட்களிலும் இந்தப் போராட்டம் தொடரும். எனவே ஆட்சியாளர்களின் இந்துத் துவா பாசிச அடக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் விரோத சட்டங்களை வீழ்த்தவும் தொடர்ந்து போராடுவோம். மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள் என அனைத்துத்தரப்பட்ட மக்களை யும் இதில் இணைப்போம்.

தொகுப்பு: அ.விஜயகுமார்
 


 

 


 


 


 


 

​​​​​​​
 

;