tamilnadu

காலியாகும் கடலோர பள்ளிகள்! -எழுத்தாளர், குறும்பனை சி.பெர்லின்

அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால் “புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் முடிவால் மீனவ சமுதாயக் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாய் இருக்கிறது. மொழியையும் பண்பாட்டையும் அடிப்படை யாகக் கொண்டதுதான் கல்வி. அவற்றை அழிப்பதன் மூலம் ஓர் இனத்தையே எளிதாக அழித்துவிடலாம். “பல மொழிகள், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட இந்தியாவை, ஒரு மொழி... ஒரு பண்பாடு என அனைத்திலும் ஒற்றைத் தன்மையாக மாற்றுவதற்கு கல்வியை ஆயுதமாக பயன்படுத்துகிறார்களோ!” என்ற சந்தேகம் புதிய கல்விக் கொள்கையை படிக்கும்போது ஏற்படுகிறது. குறிப்பாக கடலோரப் பள்ளிகளை காலி செய்ய வந்த கொள்கைகளாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

கடலோரப் பள்ளிகள் ஒரு பார்வை
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களின் 150 கிலோ மீட்டர் நீள கடற்கரைப் பகுதி யில், நூற்றுக்கும் அதிகமான கடலோர கிரா மங்கள் இருக்கின்றன. அங்கு சுமார் 10 லட்சம் மீனவ மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர் களுக்குக் கல்வி வழங்க ஓர் அரசுப்பள்ளிக்கூட இல்லை. நிச்சயமாக இதை உங்களால் நம்ப முடியவில்லை அல்லவா! இதுதான் உண்மை. கடலோர கிராமங்களுக்கு அடுத்து உள்ள பகுதிகளில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், இந்து மிஷனரி பள்ளிகள், கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள், கேந்திர வித்யாலயா என இருக்கும் போது கடலோர கிராமங்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் பள்ளிகளைத் தவிர வேறு எந்தக் கல்வி நிறுவனமும் இல்லை. தேர்தலின் போது மட்டும் கடலோரப் பகுதி மக்களை எட்டிப்பார்த்துச் செல்லும் அரசியல்வாதிகள், அந்தப் பகுதிகளில் வேறு எந்தப் பள்ளிகளையும் கொண்டு வரவில்லை. தூத்துக்குடி, பாளையங்கோட்டை, கோட்டாறு மறை மாவட்டங்களின் கத்தோலிக்கத் திருச்சபையால் உருவாக்கப்பட்ட பள்ளிகளே மூன்று மாவட்டங்களிலும் செயல்படுகின்றன. அவை பெரும்பாலும் தொடக்கப் பள்ளி களாகவே இருக்கின்றன. அவற்றை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவே பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. நல்ல வேளையாக, காமராஜர் ஆட்சிக் காலத்தில் மீனவச் சமூகத்திலிருந்து அமைச்சராக வந்த லூர்து அம்மாள் உள்ளிட்ட சிலரின் முயற்சியால் கடலோர கத்தோலிக்க தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கி, அரசு  உதவிபெறும் பள்ளிகளாக மாற்றின. அதுவும் இல்லையெனில், இப்போது கடற்கரை கிரா மங்களில் எந்தப் பள்ளியும் மிஞ்சியிருக்காது. கடலோர கிராமங்களில் இருக்கும் பள்ளி களைத் தரம் உயர்த்த கோரிக்கை வைத்தால், ‘ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசிட மிருந்து கேட்க மாட்டோம்’ என்று எழுதிக் கொடுங்கள், செய்கிறோம்’ என்கிறது அரசு. வேறு வழியில்லாமல் அப்படி எழுதிக் கொடுத்துதான் பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மீன வர்கள், கடலுக்குள் சென்று புயலிலும் மழை யிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி கொண்டு வருகிற பணத்தின் ஒரு  பங்கைத்தான் அந்தப் பள்ளிகளுக்கு அளிக் கிறார்கள். அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் சுயநிதி ஆசிரியர்களுக்கு அதிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. மீனவர்களின் பங்களிப்பு இல்லையென்றால், அந்தப் பள்ளிகள் எப்போதோ காணாமல் போயிருக்கும்.

கேள்வியாகும் கல்வி உரிமை!
கடற்கரை கிராமங்களில் இருக்கும் பள்ளி களுக்கு, அந்தந்தக் கத்தோலிக்க மறை மாவட்டங்களால் நியமிக்கப்படும் குருக்களே தாளாளர்களாக இருக்கிறார்கள். பொது நிலையினருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப் படுவதில்லை. தாளாளர்களில் பலர், எந்த அக்கறையும் இல்லாமல் பணிபுரிந்து வரு கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடம் இல்லாமல் போனாலும் அவர்களுக்கு வேறொரு பணியிடம் காத்திருக்கும். ஆனால் கடலோர மீன வச் சமூகத்தின் தலைமுறை என்ன செய்யும்? அந்தக் காலத்தில் பள்ளிகளில் தாளாள ராக இருந்த குருக்கள், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமலும், அனைத்துக் குழந்தை களும் சொந்த ஊரில் படிக்கும் வகையிலும் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள். ஒரு வரு டத்தில் அந்த ஊரில் எவ்வளவு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அதில் ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு முதல் வகுப்பில் எத்தனை  மாணவர்கள் சேர்ந்தார்கள் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் செயல்பட்டனர். இதுவரை உள்ள கல்விக்கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லாததால் எல்லா மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு முன்னேறினார்கள். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு ஆகியவற்றில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. டியூஷன், பயிற்சிகள், சிறப்புக் கவனிப்பு என எதுவுமே இல்லாத கடலோர கிராம மாணவர்கள், அனைத்து சிறப்புப் பயிற்சிகளையும் பெற்ற மாணவர்களுடன் எவ்வாறு போட்டியிட முடியும்? இதனால், அவர் கள் தேர்ச்சி பெற முடியாமல் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் இடைநிற்கும் நிலை ஏற்படும். ஆரம்பப் பள்ளிக்குள்ளாகவே கடலோர மாணவர்களின் கல்வி உரிமையை முடக்குவது நியாயம்தானா?

கல்வி வளாகத் திட்டம்!
‘போதுமான உள் கட்டமைப்பு வசதி, அதிக தேர்ச்சி, கூடுதல் மதிப்பெண் இல்லாத பள்ளிகள் மூடப்படும். அங்கு படித்த மாண வர்கள் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் அனைத்து  வசதிகளும் கொண்ட ஒரு பள்ளிக்கு வந்து படிக்கலாம்’ என்று ‘ஸ்கூல் காம்ப்ளெக்ஸ்’ திட்டத்தைப் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது. கடலோர கிராமங்களைப் பொறுத்தவரை, ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருந்தால் அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருப்பார்கள். அந்தக் கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி இருக்கிறதென்றால் மேல்நிலைப்பள்ளி வரை படித்திருப்பார்கள். அருகில் கல்லூரி இருந்தால் கல்லூரி வரை படித்திருப்பார்கள். மீனவ கிராமத்தினர் 15 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டி வெளியில் சென்று படிப்ப தில்லை. ஸ்கூல் காம்ப்ளெக்ஸ் திட்டத்தின்படி, ‘கடற்கரையில் இருக்கும் அத்தனை பள்ளிகளிலும் சரியான உள்கட்டமைப்பு வசதி இருப்பதில்லை. அதிகமான தேர்ச்சியும் இல்லை. அதிகமான ரிசல்ட் காட்டவில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதிக மதிப்பெண் வாங்கவில்லை. மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை’ என்றெல்லாம் காரணம் சொல்லி கடற்கரையின் அத்தனை கத்தோலிக்கப் பள்ளிகளையும் மூடிவிட்டு, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு வரச் சொல்வார்கள். அப்போது வசதியுள்ள ஐந்து சதவிகித மக்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பத்துடன் நகரங்களில் குடியேறுவார்கள். கடற்கரை கிராமங்களில் இருக்கும் கடலோரச் சமூகத்தினர் கல்வி உரிமை மறுக்கப்பட்டு அகதிகளாக மாறிப் போவார்கள். புதிய கல்விக் கொள்கை - 2019 வழிகாட்டுவது போல் மீனவரின் மகன் மீன்பிடிக்கத்தான் செல்ல வேண்டும் என்ற குலத்தொழில் முறைக்கு மாறிவிடும் ஆபத்து உள்ளது.

மொழியால் ஏற்படும் சிக்கல்கள்!
புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது; இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி கட்டாயம் கற்க வேண்டும் என்று சொல்கிறது. ‘ஒன்றாம் வகுப்பிலிருந்தே மூன்று மொழிகளும் சொல்லித் தரப்படும். காரணம், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இளமைப் பருவத்தில்தான் அதிக மொழிகளைக் கற்கும் ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது’ என்கிறது புதிய கல்விக்கொள்கை. ஏற்கெனவே இருக்கும் இருமொழிக் கொள்கை யால் ஆங்கில மொழிச் சுமையைத் தாங்க  முடியாமல் கடலோரச் சமூகத்து மாணவர்கள் பலரும் பள்ளிக் கூடங்களை விட்டு ஓடி  ஒளிகின்றனர். இப்போது இந்தியும் சமஸ்கிருத மும் கட்டாயமாக்கப்பட்டால், ஒட்டு மொத்த கடற்கரைச் சமூகமும் கல்வியை மறந்துவிட வேண்டிய நிலை உருவாகிவிடும். புதிய தேசிய கல்விக் கொள்கையால் கடலோரச் சமூகமே, தான் உருவாக்கி வைத்துள்ள கல்விக்கூடங்களை இழக்க நேரிடும். இதனால், அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புக்குள்ளாகும். அவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள் அவர்கள் மத்தியில் நடத்தப்படவில்லை. புதிய கல்விக் கொள்கையால் ஓர் இனமே கல்வி உரிமையையும் பண்பாட்டையும் இழக்கப் போகிறது என்கிற அபாயத்தை, யாரும் பரிசீலித்ததாகத் தெரியவில்லை. விளிம்பு நிலையில் இருக்கும் மீனவ மக்களிடம் புதிய கல்விக்கொள்கை குறித்து எடுத்துக்கூற, சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும். இது காலத்தின் அவசியம்!

நன்றி : ஜூனியர் விகடன் (1.9.2019)

;